Advertisement

திரையை ஆளும் 'ஆண்டவர்' : கவுசிக் ரங்கநாதன்

"நம் தனித்துவத்தை நிரூபிக்காமல் யாரோ கொடுத்த அடையாளத்தை பெருமையா வச்சிக்கிட்டு 'டேட்டா'க்களை மட்டும் கொண்டு தினந்தோறும் எங்கேயோ ஓடுகிறோம். ஒரு நாள் என்ன வாழ்க்கை இது என்று புரிந்தவர்களுக்கு எனது 'ஆண்டவர்' குறும்படம் பெரும் காவியம்," என்கிறார் வளரும் இயக்குனர் கவுசிக் ரங்கநாதன்.


இந்த குறும்படம் சிறந்த வசனம் மற்றும் இயக்கத்திற்கான பல சர்வதேச விருதுகளை வாங்கி குவித்துள்ளது. சமகால இளைஞர்களின் பிரச்னையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கூறி இந்த குறும்படம் மூலம் தன் தனித்துவத்தை நிரூபித்து காட்டிய இயக்குனர் பேசுகிறார்....
நான் படித்த புத்தகம் ஒன்றில் கவிஞர், 'மரங்களுக்கு எது திசை' என்று கேள்வி கேட்கிறார். அந்த கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. மரங்களுக்கு ஏது திசை, பார்ப்பவர் கோணத்திற்கு ஏற்று அதன் திசை அமையும். அதே போல ஒரு பிரச்னைக்கும் பல கோணங்கள் உண்டு. அதை நம் இளைய சமுதாயம் ஆராய்ந்து பார்ப்பது இல்லை.


இந்த இடத்தில் தான் எனக்கு 'ஆண்டவர்' கதைக் கரு கிடைத்தது. சிறுவயதிலேயே சினிமாவின் மேல் காதல் வந்ததால் 'விஸ்காம்' படித்தேன். கல்லுாரி காலங்களில் 'ஜீரோ பட்ஜெட்' குறும்படங்கள் எடுத்தேன். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் உதவி இயக்குனரானேன். அதன் மூலம் எனக்கு நல்ல சினிமா தொடக்கம் கிடைத்தது, குறும்படமும் இயக்கினேன்.
ஹீரோ இன்ஜி., முடித்து வேலை தேடும் இளைஞன், மீம் கிரியேட்டர், காதலன் என பல முகங்கள் கொண்டிருக்கிறான்.


தன் சுயத்தை இழந்து சமூகவலைத்தளத்தில் மேயும் ஆட்டு மந்தைக்குள் சுற்றி திரிபவனுக்கு கையில் கிடைக்கும் 'ஆண்டவர்', அதாவது உலகின் அனைத்து 'டேட்டா'க்கள் அடங்கிய கருவி கிடைக்கிறது. அதனை இன்ஜி., நேர்முக தேர்வில் பயன்படுத்தி, பதில்களை வேகமாக கூறுகிறான். ஆனால், அதை உணர்வுப் பூர்வமாக விளக்க முடியவில்லை. தன்னை அறிய தவறியதால் என்ன ஆகிறான், வேலை கிடைத்ததா, காதல் கைக்கூடியதா என்பது தான் மீதிக் கதை. இன்றைய இளைஞர்களை தாக்கி கதை அமைந்ததால் இதில் நடிக்க பலர் தயங்கினர். இருந்தாலும் கண்ணா ரவி, 'மேயாத மான்' இந்துஜா, ஜீவா ரவி நடித்தனர்.


இந்த கதையின் அடிப்படையே ஒரு விஷயத்திற்கு பல கோணங்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுவது தான். அதன் அடிப்படையிலே ரசிகர்கள் கதையின் கோணங்களை ஆராய்ந்து என்னை பாராட்டினர். இளைஞர்கள் மத்தியில் கூட நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    நல்லதை கொடுங்கள் .மக்கள் நல்லதை தருவார்கள் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement