Advertisement

நிலப்பகுதியில் தென்மேற்கு பருவ மழை...குறைந்தது!உபரிநீரை ஓடை, குட்டைக்கு திருப்ப கோரிக்கை

உடுமலை:உடுமலையில், நீண்ட இடைவெளிக்குப்பின், கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. நிலப்பகுதிகளில், தென் மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், அமராவதி அணை உபரி நீரை ஓடை, குட்டைகளுக்கு திருப்ப வேண்டும்.
உடுமலை பகுதிகளில், இந்தாண்டு, ஜன.,-பிப்., மாத குளிர் காலத்தில், பிப்.,ல், ஒரு நாள், 1.2 மி.மீ.,மழைபெய்தது. மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழை, 175.4 மி.மீ.,பெய்தது.ஜூன் முதல் செப்.,வரையிலான, தென்மேற்கு பருவ மழை, அமராவதி மற்றும் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு பெய்தாலும், நிலப்பகுதிகளில் குறைந்தேகாணப்படுகிறது.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஜூன் மாதம், 4 நாட்கள், 20 மி.மீ.,மழை பெய்தது; ஜூலை மாதம், 8 நாட்கள், 39.6 மி.மீ., என, இரு மாதங்களில், 59.6 மி.மீ., மழை மட்டுமே கிடைத்துள்ளது.கடந்த மாதம், 17ம் தேதிக்கு பிறகு, மழையில்லாமல், வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்நிலையில்,மீண்டும் தென்மேற்கு
பருவ மழை தீவிரமடைந்து, கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது.கடந்த, 9ம் தேதி இரவு, உடுமலை, பெதப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், மிதமானது முதல் கன மழை வரை பெய்தது. உடுமலையில், 17 மி.மீ., மழையும், பெதப்பம்பட்டியில், 47.8 மி.மீ., மழையும், தாராபுரத்தில், 1 மி.மீ., மழையும் பதிவாகியிருந்தது.
நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில், 3.4 மி.மீ., மழையும், பெதப்பம்பட்டியில், 7 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது; மற்ற பகுதிகளில் மழை இல்லை.அமராவதி அணை, கடந்த ஜூலை, 16ல் நிரம்பியது; கடந்த, 3ம் தேதி வரை, ஆறு மற்றும் பிரதான கால்வாயில், 19 நாட்கள் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இரண்டாவது முறையாக, 9ம் தேதி இரவு நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 87.90 அடி நீர் மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 1,870 கன அடி நீர் வரத்து உள்ளது. அணைக்குஉள்ள வரத்து நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நிலத்தடி நீர் மட்டம் உயரும்!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்தாலும், நிலப்பகுதிகளில் போதிய அளவு பெய்யவில்லை. அமராவதி பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து, வழியோரத்திலுள்ள ஓடைகள் மற்றும் குட்டைகளுக்கு உபரி நீரை திருப்பினால், ஓடைகளின் குறுக்கே உள்ள தடுப்பணைகளும், குட்டைகளும் நிரம்பி, நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும்; நிலப்பகுதிகளும் வளமாகும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement