Advertisement

காற்றுவாங்கும் போலீஸ் சோதனைச்சாவடிகள்எல்லையில் இல்லை சோதனை!'கவனிப்பு' பெறுவதால் அதிகரிக்கிறது அத்துமீறல்

ஆனைமலை:ஆனைமலை அருகே, தமிழக - கேரள எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடாததால் வெறிச்சோடி காணப்படுகிறது. எல்லையில் கண்காணிப்பு இல்லாததால், சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது.
ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பெரியபோது, செமணாம்பதி, மணக்கடவு, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள், தமிழக - கேரள மாநில எல்லையில் உள்ளன. இப்பகுதிகளில், கேரளாவில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் கொண்டு வரப்படும், மருத்துவக்கழிவு, பிளாஸ்டிக், இறைச்சி உள்ளிட்ட கழிவுகள் தமிழக எல்லை பகுதியில் அத்துமீறி புதைக்கப்படுகிறது.அதேபோல், தமிழகத்திலிருந்து, கனிம வளங்கள், ரேஷன் அரிசி போன்றவை சட்ட விரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.
இதனை தடுக்க, ஆனைமலை போலீசார் கடந்தாண்டு ஆக., மாதம், மணக்கடவு, காந்தி ஆசிரமம் மற்றும் பெரியபோது உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக சோதனைச்சாவடிகள் அமைத்தனர்.போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, இரண்டு போலீசாரை பணியமர்த்தி, இரவு, பகலாக கண்காணிப்பு மேற்கொண்டனர்.ஒரு சில மாதங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கூடுதல் சோதனைச்சாவடிகளுக்கு மூடுவிழா நடத்தினர். தற்போது, சோதனைச்சாவடிகள் காட்சிப்பொருளாகி, முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், கேரளாவுக்கு எளிதாக அரிசி கடத்துகின்றனர். கேரளாவிலிருந்து வாகனம் மூலம் பிளாஸ்டிக், ரெக்சின், வாகன உதிரிபாகங்கள், இறைச்சி மற்றும் மருத்துவக்கழிவுகளை தடையின்றி தமிழகத்துக்குள் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
கடந்த மாதம், ஆத்துப்பொள்ளாச்சி ஆற்றுப்படுகையில் கேரள பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டது; கணபதிபாளையம் அருகே கேரளாவில் இருந்து ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட, 'ரெக்சின்' கழிவுகள் கொட்டப்பட்டது.இது போன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரால், 'கவனிப்பு' பெறும் போலீசார், சோதனைச்சாவடிகளை காட்சிப்பொருளாக வைத்துள்ளனர்.
மாநில எல்லையில் அரங்கேறும் அத்துமீறலை தடுக்க சோதனைச்சாவடிகளை பலப்படுத்தி, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கையூட்டு பெறும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கு, மாவட்ட எஸ்.பி., மற்றும் வால்பாறை டி.எஸ்.பி., இந்த பிரச்னையில் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும், என, 'தினமலர்' நாளிதழ் எதிர்பார்க்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தினமலரில் செய்தி பார்த்தும் அரசுநடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றம் தானே மனமுவந்து வழக்குபோடவேண்டும் அண்டைமாநிலங்களின் குப்பைமேடு தமிழ்நாடா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement