Advertisement

கோவை வடக்கு தாலுகா இரண்டாக பிரிகிறது...பத்து + ஒன்று = பதினொன்று!:புதிய தலைமையகமாகிறது பெ.நா.பாளையம்

கோவை:கோவையில் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகப்பெரிய அளவில் உள்ள வடக்கு தாலுகாவை பிரித்து, பெரியநாயக்கன்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய தாலுகா உருவாகவுள்ளது.தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள, தாலுகாக்களை கணக்கெடுத்து, இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தாலுகாவில், ஐந்து லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை எண்ணிக்கை இருக்கும் பட்சத்தில், அந்த தாலுகா இரண்டாக பிரிக்கப்படும்.
கோவையில் பத்து தாலுகாக்கள் உள்ளன. இதில், பெரிய தாலுகாவான கோவை வடக்கு தாலுகா, பல ஆண்டுகளுக்கு முன்பே, பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.2011ம் ஆண்டு, நடந்த கணக்கெடுப்பின்படி, இந்த தாலுகாவில், 6 லட்சத்து 50,000 பேர் வசித்தனர்; ஏழு ஆண்டுகளுக்குப்பின், தற்போது, மக்கள் தொகை பத்து லட்சத்தை எட்டியுள்ளது. குடியிருப்புகள், வணிக கட்டமைப்புகள் பெருகி விட்டன; அதனால், இரண்டாக பிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.வடவள்ளி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், கணுவாய், துடியலுார், சரவணம்பட்டி, கணபதி, ஆவாரம்பாளையம் ஆகியவற்றை கொண்ட பகுதி, வடக்கு தாலுகாவாக செயல்படும்.இதற்கான கருத்துருவை, கலெக்டர், டி.ஆர்.ஓ., வடக்கு கோட்ட கோட்டாட்சியர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இரு தாலுகாக்களுக்கான வரைபடம், தாலுகா தலைமை அலுவலகங்கள் அமைய வேண்டிய இடம், மக்கள் தொகை, போக்குவரத்து, விவசாய நிலம், மலைப்பகுதி, ஆறு, ஓடை போன்ற விபரங்கள், மற்றும் வழித்தடங்களை குறிப்பிட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்திருந்தனர்.
அதை பரிசீலித்த அரசு, அதில் சில திருத்தங்கள் செய்து அனுப்ப உத்தரவிட்டுள்ளது; அதற்கான வரைபட தயாரிப்பு, கணக்கெடுப்பு பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. ஒரு சில வாரங்களில், இந்த பணி நிறைவடைந்து, அரசுக்கு மீண்டும் அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதன் பின், புதிய தாலுகா குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. அப்படி அமைந்தால், அது கோவையின், 11வது தாலுகாவாக உதயமாகும்.

புதிய தாலுகாவில்இணையும் பகுதிகள்பெரியநாயக்கன்பாளையத்தை தலைமையகமாக கொண்டு நரசிம்மநாயக்கன்பாளையம், குருடம்பாளையம், கீரணத்தம், கோவில்பாளையம், சோமையம்பாளையம், சின்னதடாகம், ஆனைகட்டி, பிளிச்சி, நெ., 24 வீரபாண்டி உள்ளிட்ட பல பகுதிகளை இணைத்து, புதிய தாலுகா உருவாகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Thanu Srinivasan - Chennei,இந்தியா

    நிர்வாக சீர்கேட்டின் மேலும் ஒரு விளைவே தாலுக்காகளை துண்டு துண்டாக பிரிப்பது. மக்கள் தொகைக்கும் தாலுகாக்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. இங்கே வருவாய் துறை தங்கள் சுயநலத்திற்காக மாவட்டங்களை, தாலுகா அளவுக்கு துண்டுகளாக ஆக்கி குறுக்கு வழியில் பதவி உயர்வு பெறுவதற்கே இப்படி செய்கிறார்கள். இதனால் அரசுக்கு அதிக செலவும், அதை சரிகட்ட மக்களுக்கு வரிச்சுமை கூடும். எஸ். ட்டி. ஸ்ரீநிவாசன் சென்னை 73, 9445694259

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement