Advertisement

லீசுக்கு' விடப்படும் சாய ஆலைகளால்..அத்துமீறல்!' நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்

திருப்பூர் பின்னலாடை துறையின் மிக முக்கிய அங்கமாக சாய ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் சாயக்கழிவுநீர், நச்சுத்தன்மை மிக்கது. எனவே, மாசுகட்டுப்பாடு வாரியம், சாய ஆலைகளை, சிவப்பு வகைப்பாட்டில் வைத்துள்ளது.
எனவே, சாயக்கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து, மறுசுழற்சி அடிப்படையில் மீண்டும் பயன்படுத்தவேண்டும் என்பது விதிமுறை. திருப்பூரில், வாரிய அனுமதி பெறாமல் ஏராளமான சாய ஆலைகள் இயங்குகின்றன.
சமீபகாலமாக, வாரிய அனுமதி பெற்று, சுத்தி கரிப்பு மையத்திலும் உறுப்பினராக உள்ள சாய ஆலைகளும், அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன. கழிவுநீரை சுத்திகரிப்புக்கு அனுப்பாமல், நொய்யலாறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் திறந்தும், செப்டிக்டேங்க் லாரியில் கொண்டு சென்று அப்புறப்படுத்துகின்றனர்.அனுமதிபெற்ற சாய ஆலைகள், தைரியமாக அத்துமீறலில் ஈடுபடுவதன் பின்னணியில், வேறொரு காரணமும் உள்ளது. திருப்பூரில் பெரும்பாலான சாய ஆலைகள், உரிமையாளர்களால், வேறு நபர்களுக்கு லீசுக்கு விடப்பட்டுள்ளன.சாய ஆலை உரிமையாளர்கள், தங்கள் முதலீட்டில் நிறுவனம் அமைத்து, சாப்ட்புளோ மெஷின்களை நிறுவியுள்ளனர். அருகிலுள்ள பொதுசுத்திகரிப்பு மையத்தில், உறுப்பினராகி, மாசுகட்டுப்பாடு வாரியத்திலும், இயக்க அனுமதி பெற்றுள்ளனர்.ஆனால், பலர் சாயத்தொழில் தெரிந்த வேறு நபர்களிடம் சில லட்சங்களை பெற்றுக்கொண்டு, ஓராண்டு, இரண்டு ஆண்டு, ஆலையை லீசுக்கு விடுகின்றனர். இன்னும் சிலர், லாபத்தில் பங்கு என்கிற ரீதியில், ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தங்கள் பங்கு கிடைத்தால் சரி என்பதால், ஆலைகளின் இயக்கத்தை யாரும் கண்டுகொள்வது இல்லை. லீசுக்கு எடுப்போர், சாயம், ராசாயனம் வாங்குவது, தொழிலாளர் நியமிப்பது; ஆர்டர்கள் பெறுவது என அனைத்து செயல்பாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்கின்றனர்.
குறிப்பிட்ட காலத்துக்குள் தங்களால் இயன்றவரை அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென, சாய ஆலைகளை இயக்குவோர், அனுமதித்ததை விட கூடுதலாக ஆலையை இயக்குவது, விடுமுறை நாட்களில் இயக்குவது, குறைந்தளவு தண்ணீரை சுத்திகரிப்புக்கு அனுப்பிவிட்டு, அதிகளவில், சாய நீரை முறைகேடாக திறந்துவிடுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.மாசுகட்டுப்பாடுவாரியத்தின் கண்ணில்பட்டாலும், தங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால், சாய ஆலைகளை இயக்கும் நபர்கள், தைரியமாக சாய நீரை, நீர் நிலைகளில் திறந்துவிடுகின்றனர்.அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உள்ளாகும்போது, இந்நபர்கள், வேறு சாய ஆலைகளை கைப்பற்றி, இயக்கத்தை தொடர்கின்றனர்.ஆலைகளை சுயமாக இயக்குவது, லீசுக்கு விடுவது உரிமையாளரின் விருப்பம். இதுவே சாய விதிமீறல்களுக்கு அடித்தளமிடுவதால், மூன்றாம் நபர்களிடம் ஆலையை ஒப்படைப்பதை, தடுப்பது அவசியமாகிறது.
இதுவும் முறைகேடே...
இது குறித்து, ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் குமார் கூறுகையில், ''பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், சிறப்பாக இயங்கும் சாய ஆலைகளுக்கும், இதுபோன்ற விதிமீறல் ஆலைகளால் அவப்பெயர் ஏற்படுகிறது. சாய ஆலைகளை லீசுக்கு விடும் வழக்கம் தவறானது. ஆடை உற்பத்தி துறையினர், விதிகளை பின்பற்றி இயங்கும் சாய ஆலை களுக்கு மட்டுமே ஆர்டர் வழங்குவது என்கிற கொள் கையை கடைபிடிக்கவேண் டும். முறைகேடு ஆலைகளுக்கு ஆர்டர்கள் வழங்குவது, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு துணை போவதற்கு ஒப்பானது,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement