Advertisement

ஆடு என கன்றுக்குட்டி இறைச்சி விற்பனை

சென்னை:சென்னையில், ஆட்டு இறைச்சியுடன், கன்றுக் குட்டி இறைச்சியை கலந்து விற்பனை செய்வது, உணவு பாதுகாப்பு துறையினரின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரியமேட்டில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 300 கிலோ கலப்பட இறைச்சியை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 15 மண்டலங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, பொதுமக்களுக்கு சுகாதாரமான இறைச்சி வழங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை, சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.ஆடுகளை, சுகாதாரமான முறையில் வெட்ட, புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை என மூன்று இடங்களில், மாநகராட்சி சார்பில், ஆடு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.அங்குள்ள மருத்துவர்கள், வியாபாரிகள் கொண்டு வரும் ஆடுகள், நோய்வாய்பட்டுள்ளனவா என்பதை பரிசோதித்து, அதன் பின் அவற்றை, வெட்டுவதற்கு அனுமதி வழங்குவர்.அது சுகாதாரமான இறைச்சி என்பதை, நுகர்வோருக்கு தெரிவிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில், ஆட்டு இறைச்சியின் மீது, முத்திரை வைக்கப்படும். நுகர்வோர், இதை கவனித்து, ஆட்டு இறைச்சியை வாங்க வேண்டும்.ஆனால், சில வியாபாரிகள், ஆடு தொட்டிக்கு எடுத்துச் செல்லாமல், அவரவர் கடைகளில், மறைவான இடங்களில், நோய்வாய்ப்பட்ட ஆடுகளை வெட்டி, சுகாதாரமற்ற இறைச்சியை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், சென்னையில் பல இடங்களில், ஆட்டு இறைச்சியுடன், கன்றுக்குட்டி இறைச்சியும் சேர்த்து, விற்பனை செய்யப்படுவது, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.நேற்று, பெரியமேட்டில் உள்ள நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள இறைச்சி கடையில் நடத்தப்பட்ட ஆய்வில், 300 கிலோ, கலப்பட இறைச்சி, பறிமுதல் செய்யப்பட்டது.புதன் கிழமை ஆய்வுமாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், புதன் கிழமை தோறும், இறைச்சி கடைகளில் ஆய்வு நடத்துகின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் மட்டும், பெயரளவில், இந்த ஆய்வு நடப்பதாக, அசைவ பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சுகாதார துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கால், சுகாதாரமற்ற இறைச்சியை உண்ணும் மக்கள், நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சுகாதார துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் மீது புகார் எழுந்ததால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இறைச்சி கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement