Advertisement

டீ கடை பெஞ்ச்

அதிகாரிகளை, 'படுத்தும்' எம்.பி.,யின் கணவர்!




''ஆளாளுக்கு பட்டியல் குடுத்து, பணி நியமனத்தை கிடப்புல போட்டுட்டாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.


''எங்க வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.


''மதுரை மாவட்டத்துல, 1,444 சத்துணவு மையங்கள் இருக்கு... இதுல, அமைப்பாளர், சமையலர், உதவியாளர்கள்னு, 600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியா கிடக்கு பா... ''இந்த காலியிடங்களை, பக்கத்து மையங்கள்ல இருக்குறவங்க கூடுதலா கவனிக்குறாங்க... காலியிடங்களை நிரப்ப, போன வருஷமே, மதுரை கலெக்டர் அலுவலகத்துல, நேர்காணல் முடிஞ்சிடுச்சு பா...


''ஆனா, மாவட்டத்தைச் சேர்ந்த, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மாவட்டச் செயலர் ராஜன் செல்லப்பான்னு, ஆளாளுக்கு சிபாரிசு பட்டியல் குடுத்து, மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடி குடுத்திருக்காங்க... இதனால, பணி நியமனங்களையே தள்ளி வச்சுட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.


''தினமும் ஒரு மணி நேரம் மட்டும் தான், வேலை பார்க்குறாங்க வே...'' என, அடுத்த தகவலுக்கு வந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...


''திருச்சி ஜெயில்ல இருந்து, ஜாமின்ல விடுதலை ஆகுறவங்களை கணக்கெடுத்து, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் குடுக்கணும்... இதுக்காக, ஒவ்வொரு மாவட்டத்துல இருந்தும், ஒரு போலீஸ்காரரை, திருச்சி ஜெயில் பணிக்கு அனுப்புவாவ வே... ''இவங்களுக்கு ஒரு வாரம் தான், இந்த டூட்டி குடுப்பாவ... அடுத்த வாரம் வேற ஒருத்தர் போவாரு வே...


''ஆனா, பெரம்பலுார் மாவட்டத்துல இருந்து, ஒரு பெண் ஏட்டு, ஆறு வருஷமா இந்த வேலைக்கு போறாங்க... இவங்க வீடு, திருச்சியில இருக்கு... தினமும் காலையில, 11:00 மணிக்கு கார்ல வந்துட்டு, மதியம், 12:00 மணிக்கு போயிடுதாங்க... ''திருச்சி, ஐ.ஜி., ஆபீஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் தயவுல, ஆறு வருஷமா இப்படியே காலம் தள்ளிட்டு இருக்காங்க வே...'' என்ற அண்ணாச்சி, ''என் தங்கச்சி வசந்தி, இன்னைக்கு ஊர்ல இருந்து வரா... நான் கிளம்புதேன்...'' எனக் கூறி, விடைபெற்றார்.


''அதிகாரிகளை படுத்தி எடுக்கறார் ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.


''யாரு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.


''திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்துக்கு, 44 பசுமை வீடுகள் ஒதுக்கியிருக்கா... இதுக்கான பயனாளிகள் தேர்வு நடந்துண்டு இருந்தது ஓய்... ''ஆனா, அ.தி.மு.க., பெண், வி.ஐ.பி.,யின் ஆத்துக்காரர், ஒன்றிய ஆபீசுக்கு வந்து, 'நான் சொல்றவாளுக்கு தான் வீடுகள் ஒதுக்கணும்'னு அதிகாரிகளுக்கு நெருக்கடி தரார் ஓய்...


''அதோட, 'எந்த வேலைக்கு டெண்டர் விட்டாலும், நல திட்டங்களா இருந்தாலும், என்கிட்ட கேட்டு தான், பயனாளிகள் பட்டியல் தயாரிக்கணும்'னு மிரட்டறார்... இவரால, ஒன்றிய அதிகாரிகள் நொந்து போய் கிடக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''வனரோஜாவும், சண்முகமும் வேகமா எங்க போறாங்க...'' என, தெருவை பார்த்து வியந்தபடியே அந்தோணிசாமி கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement