Advertisement

காலகட்டம் வந்து விட்டது!

ஒரு பக்கம் சமூக வலைதளங்களின் வளர்ச்சி, இளைஞர் சமுதாயம் மாற்றத்தை நோக்கி பயணிப்பதைக் காட்டினாலும், மறுபக்கம் சந்தேகத்தின் அடிப்படையில் எழும் வதந்திகளில், நபரை அடித்துக் கொல்லும் நடைமுறை ஏற்கத்தக்கதல்ல.
எல்லாவற்றையும் காவலர் கண்டு கண்காணிக்க வேண்டும் அல்லது, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள், சமுதாய ஒழுங்கீனங்களை கண்டறிய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலை வருந்தத்தக்கது.
சமூக வலைதளங்கள் ஒரு மீடியாவாக மாறியது மட்டும் இன்றி, வதந்தி செய்திகளை பரப்பி, அதனால் ஏற்படும் உணர்வுகளால், பலரது உயிர்களை காவு வாங்குவது அபாயமானது.
அமெரிக்கா, பெரிய வல்லரசு நாடு, அதிக சட்ட திட்டங்களை கொண்ட நாடு. அங்கு அதிகமாக இளைஞர்கள், துப்பாக்கி வைத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில், பள்ளிகளில், பெரிய மால்கள் என்ற அங்காடிகள் ஆகிய வற்றில் நடந்த துப்பாக்கிச் சூடுகளை நடத்திய இளைஞர்கள் செயல், அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்க்கை அதிக முரண்களை ஏற்படுத்தியதால் அவலம் என்பது, இதற்கு சரியான பதிலல்ல.
இந்தியாவில் ஒரேயடியாக வறுமை கிடையாது. ஆனால், முறைகேடாக பணம் சம்பாதித்த கூட்டம் அதிகரித்து, அதைக் கவனிக்கும் பலர் மவுனமாக இருந்தது மாறி, இப்போது எல்லா விஷயத்திற்கும் தெருவுக்கு வந்து இஷ்டப்படி சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் நிலை வந்திருக்கிறது. இது தான் அப்பாவிகளை அடித்துக் கொல்லும் அராஜக குழு கலாசாரம் ஆகும்.
சமீபத்தில் நான்கு மாதங்களில், குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக அப்பாவிகளை அடித்துக் கொன்ற சம்பவங்கள், 25ஐ தாண்டி விட்டன. திருவண்ணா மலை அருகே நடந்த சம்பவம், 'கூகுள்' நிறுவனத்தில் பணியாற்றிய மிகவும் டீசண்டான பொறியாளர் ஹசன், தெலுங்கானா அரசுக்கு உட்பட்ட பகுதியில், கூட்டமாக வெகுண்ட மக்களால் கொல்லப்பட்டது என, பல இவற்றில் அடங்கும்.
உ.பி., மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் பின்தங்கியவை. மம்தா ஆளும், மே.வங்கம், ம.பி., ஒடிசா என்று நாடு தழுவிய மோசமான இயக்கமாக, ஆவேச கும்பல் கொண்ட ஜனநாயகமாக மாறியது ஏற்கத்தக்கதல்ல.
கொலையை விசாரிக்க இந்திய தண்டனைச் சட்டம் 304, கூட்டாக சேர்ந்து தாங்களாகவே ஒரு பரபரப்பில் எவரையும் இஷ்டப்படி அடித்துக் கொல்லும் செயலைத் தடுக்க, சட்டப்பிரிவு 34 போன்றவை உள்ளன.
இதைத் தவிர, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில், 'சைபர் கிரைம்' போலீஸ் பணி அதிகரித்திருக்கிறது. வதந்தி பரப்புவோரை கையாள இளைய தலைமுறை போலீசார், பல
யுக்திகளை கையாளும் வழிகளை கண்டறிந்து செயல்படுகின்றனர்.
ஆனாலும், இம்மாதிரி கண்டபடி அடித்துக் கொல்லும் வெறிக் கும்பல் போக்கை, தன் வழக்கு விசாரணையில் சாடிய சுப்ரீம் கோர்ட், இதைத் தடுக்க தனியாக இந்திய குற்றப்பிரிவு தண்டனைச் சட்டத்தில் வழி காண, மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளது.
சமூக வலைதளங்களில் அனுப்பப்படும் சில போட்டோக்களில், குறிப்பிட்ட நபரை விமர்சிக்க, அந்த நபரை மட்டும் இன்றி, அதன் பின்புலமாக, பாகிஸ்தான் டுவிட்டர் தள படங்கள் அல்லது
பிரபலங்களின் காலண்டர் படங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவை மிகவும் அபாயமானவை. இம்மாதிரி குற்றங்களில் ஈடுபட்டு, அதன் மூலம் தங்களை புத்திசாலிகள் என்று கருதுவது, அடிப்படை ஜனநாயக உரிமைகளை அறியாததாகும். நமது நாடு குட்டியான நாடு ஒன்றும் அல்ல. அதே சமயத்தில் சரியான செய்தி அல்லது முறையான தகவல்களைத் தரும் செய்தி இயக்கங்கள் பின்தங்கிவிட்டது போல, இம்மாதிரி கோஷ்டிகள் கருதுவது அபத்தம்.
ஏனெனில், செவித்திறன் குறைந்த, 11 வயது சிறுமியை சீரழித்த காமுகர்கள் கூட்டத்தை, அதே பெரிய அடுக்ககத்தில் வாழ்ந்த எவரும் கண்டறியாதது இன்றைய வாழ்வைப் படம் பிடிக்கிறது.
தாமதமாக இப்போது அங்கே இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பது, தும்பைவிட்டு வாலைப் பிடித்த கதை.
நல்ல வேளையாக, மத்திய அரசை விமர்சிக்க, இது, லோக்சபாவில் விவாதமாகி இருக்கிறது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களுக்கு ஏற்கனவே அரசு இவ்விஷயத்தை சரியாக கையாள யோசனை கூறியிருப்பதை பதிவு செய்திருக்கிறார்.
இந்த மக்கள் கும்பல் அராஜகத்தை கடுமையாக கையாள, மாநிலங்கள் முறையாக சட்டத்தைக் கையாள்வதுடன். அவர்களை தண்டிக்க வேண்டும் என்பது, மத்திய அரசின் கருத்தாக தெரிவிக்கப்
பட்டிருக்கிறது.
பல்வேறு சமூக பிரச்னைகள், ஊழல் புகார்கள் மாநில அரசுகளை வாட்டும் போது, இந்த
அராஜகத்தை தனியாக கையாள வேண்டிய
காலகட்டம் வந்திருக்கிறது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement