Advertisement

இது என்ன புதிய பாதை?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது, இந்த அரசு நான்காண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள், சோடை போகவில்லை என்பதை காட்டியுள்ளது.
மொத்த எம்.பி.,க்களில், 325 பேர் அரசுக்கு ஆதரவு என்பதும், மாநில கட்சிகளில், அ.தி.மு.க., தந்த ஆதரவும், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சிகளின் வெளிநடப்பும், மத்தியில் ஆளும், பா.ஜ.,வைப் புறக்கணிக்கவில்லை என்பதன் அடையாளமாகும்.
காங்கிரஸ் தலைவர், ராகுல் தலைமைக்கு கிடைத்த, 126 ஓட்டுகளில், இனி தேர்தல் வரும் போது, திரிணமுல் போன்ற கட்சிகள், அவருக்கு முழு ஆதரவு தருமா என்று தெரியாது.
சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, மோடியை தனிப்பட்டு விமர்சிப்பவர் என்றாலும், இன்னமும் அவரது கட்சி குழப்பத்தில் இருப்பதையே காட்டுகிறது.
ராகுல் ஒரு மணி நேரம் பேசினார். ஆனால், அவர் கட்டித் தழுவி மோடியை திருப்திபடுத்த முயன்றதும், பின் தனது சகாக்களிடம், நடிகை பிரியா வாரியர் பாணியில், 'கண்ணடித்த விதமும்' லோக்சபா சரித்திரத்தில் இடம்பெறும்.
ஆனால், உலக தலைவர்களை சந்திக்கும் போது, சிலரை கட்டிப்பிடித்த மோடியின் செயலையும், அவர் ஆடை அணியும் விதத்தையும் பழித்த ராகுல், கட்டிப்பிடித்து, பின், 'கண்ணடித்த விதம்' மிகவும் சிறுபிள்ளைத் தனமானது.
அவர், 14 ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்தும், தலைவராக வலம் வர முடியவில்லை. ஆனால், இக்கேலிக்கூத்தை புதிய பாதையாக அரங்கேற்றி இருக்கிறார்.
பார்லிமென்ட் என்பது, சட்டம் அமைக்கும் தளம் என்பதை விட, இனி, 'கேரள நடிகையின் ஆர்வலர் ராகுல்' என்ற பெயரை அவருக்கு தரும்.
அவரது கட்சியின் தகவல் தொடர்பாளர்கள், இனி, இதன் வாயிலாக, 25 வயதுக்கு குறைவான வர்களின் ஓட்டுக்களை, காங்கிரஸ் அள்ளி விடும் என, விளக்கம் கூட தரலாம். அதேநேரத்தில், ராகுல் செயலை சபாநாயகர் கண்டித்தது,
கவுரவம் காக்க எடுத்த நடவடிக்கை.
'காங்கிரசையும். சிவனையும் அறிய உதவிய வர்கள், பா.ஜ.,வினர் 'என்ற, ராகுலின் பேச்சு அபத்தமானது. அதன் வாயிலாக, இந்திராவின் தேசிய உணர்வுக்கு புறமாக, இதுவரை வாழ்ந்ததாக பதிவு செய்திருக்கிறார் என்று கருதலாமா?
வரலாற்றில், 15 ஆண்டுகளுக்கு பின் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், முழுவதும், 39 எம்.பி.,க்கள் பேசினர். வேலைவாய்ப்பு குறைந்தது, ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் போன்றவற்றை ராகுல் பேசிய விதம், ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுகளாக இல்லை.
தெலுங்கு தேசம் எம்.பி., கல்லா என்பவர் பேசிய பேச்சில், முக்கியத்துவம் குறைவு. அவர் தான் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தவர். திரிணமுல், எம்.பி.,யான ராயின், 'கரன்சி நோட்டை செல்லாததாக்கியதில் பலர் வேலையிழந்தனர்' என, குற்றம்
சாட்டினார்.
ஆனால், அனைவரது புகார்களுக்கும் பதில் அளித்து, பல ஆதாரங்களையும், பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். மக்கள் விரும்பினால் மட்டுமே, பிரதமராக ஒருவர் வரமுடியும்
என்பதையும் தெளிவு படுத்தினார்.
தேவகவுடா, குஜ்ரால் உட்பட பலர்,
காங்கிரசால் அவமானப்பட்டதையும், குடும்ப ஆட்சியில் மட்டுமே, காங்கிரஸ் அக்கறை காட்டுகிறது என்றும், பிரதமர் விமர்சித்தார். ராகுல் கண்ணடித்த சம்பவத்தையும், அவர் சுட்டிக்காட்டி சாடினார்.
ஆனால், லோக்சபா விவாதங்கள் இனி தடைபடாமல் இருக்க, இந்த, 'நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்' உதவும் என்று கருதலாம். அதை விட, நாடு முழுவதும், லோக்சபா தேர்தல் நடக்கிற நேரத்தில், பத்துக்கும் மேற்பட்ட சட்டசபை தேர்தல்களும் ஒருசேர நடக்கும் வாய்ப்பு வரலாம்.
அந்த சூழ்நிலையை எளிதாக சமாளிக்க, பிரதமர் தயார் என்பதை, அவரது உரையில் தெரிவித்த கருத்துகள் காட்டுகின்றன. ஆனால், ராகுல் தலைமையில் கட்சிகள் அணிசேருமா அல்லது பா.ஜ., ஆளும் மாநிலங்கள் தவிர ஏனையவற்றில் உள்ள, முக்கிய ஆளும் கட்சிகளுக்கு சமமாக, பா.ஜ., ஈடு கொடுக்கப் போகிறதா என்பதே அடுத்த விவாதமாகும்.
அதற்கு முன் மற்ற தலைவர்களை ராகுலும், அவர் பேசும் அன்புச் சொற்களால், செயல்களால் ஈடுகட்டி, கூட்டணி வலையை சரியாக விரித்து ஓட்டுகளை அள்ளி, பிரதமர் பதவியை அடைவாரா என்பதை எளிதில் கணிக்க முடியாது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement