Advertisement

டீ கடை பெஞ்ச்

பத்திரப்பதிவு துறையில் இடமாறுதலுக்கு பேரம்!

''யாரும் வாயை திறக்கப்படாதுன்னு மிரட்டி வச்சிருக்கா ஓய்...'' என, காபியை பருகியபடியே, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.''பேச்சுரிமைக்கு தடை போட்டது யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக் கோட்டத்துல, ஆறு வனச்சரகங்கள் இருக்கு... இங்க வேலை பார்க்கற நேர்மையான ஊழியர்கள் பலர், வனவிலங்கு மரணங்கள், யானைகள் நடமாட்டம் பத்தி, பத்திரிகையாளர்களுக்கு தகவல் குடுப்பா ஓய்...''இதுல, 'பிதர்காடு, சேரம்பாடி வனச்சரக ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள்னு யாரும், பத்திரிகைக்காராள்ட்ட எந்த தகவலையும் சொல்லக் கூடாது... ஒங்க மொபைல் போன்களை எல்லாம் கண்காணிக்கிறோம்'னு உயர் அதிகாரிகள் மிரட்டியிருக்கா ஓய்...''பயந்து போன அவா, எந்த தகவலும் தர மாட்டேங்கறா... இதனால, வனப்பகுதியில, மர்மமா இறந்து போற புலி, யானை விபரங்கள் வெளியே தெரியாமலே போயிடறது ஓய்...'' என்றார் குப்பண்ணா.''செக்குல கையெழுத்து போடுற அதிகாரம் இருக்கிறதால, 50 சதவீதம் கமிஷனை கறாரா கேட்டு வாங்குறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.''எந்தத் துறையில வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.''உள்ளாட்சிகள்ல மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால, ஊரக வளர்ச்சித் துறையில, துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, செக்குல கையெழுத்து போடுற அதிகாரத்தை குடுத்திருக்காங்க பா...''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துல, ஒரு பெண் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இருக்காங்க...''இவங்க, குடிநீர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, செக்குல கையெழுத்து போடணும்னா, 50 சதவீதம் கமிஷன் வாங்கிட்டு தான் பேனாவையே திறக்குறாங்க பா...''கேட்டா, 'பல லட்சம் செலவுல, வீட்டுமனை வாங்கிட்டேன்... நிறைய செலவு இருக்கு'ன்னு காரணம் சொல்றாங்க...'' என்றார் அன்வர்பாய்.''அந்த மனையில வீடு கட்டுறதுக்கு, தனியா வசூல் நடத்துவாங்களே...'' என, அலுத்துக் கொண்ட அந்தோணிசாமி, ''வனிதா வீட்டுக்காரர் நேத்து, உங்களை தேடி வந்தாரே... பார்த்தீங்களா...'' என, அண்ணாச்சியிடம் கேட்க, அவர் உதட்டை பிதுக்கினார்.சில வினாடிகளுக்குப் பின், ''இடமாறுதலுக்கு பேரம் களைகட்டுது வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் அண்ணாச்சி.''எந்தத் துறையில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''பத்திரப்பதிவு துறையில, வருஷத்துக்கு ஒரு முறை, பொது மாறுதல் நடக்கும்... மூணு வருஷமா ஒரே இடத்துல இருந்தவங்களை, வேற இடத்துக்கு மாத்துவாவ வே...''இந்த வருஷத்துக்கான பொது மாறுதல் நடவடிக்கை துவங்கிட்டு... வருமானம் அதிகம் கிடைக்குற இடங்களை விரும்புற சார் - பதிவாளர்களை, சில புரோக்கர்கள் தேடி வராவ வே...''அவங்களிடம், 'நீங்க கேட்ட இடத்தை வாங்கி தர்றோம்... இவ்வளவு வெட்டுங்க'ன்னு பேரம் பேசுதாவ... இந்த பேரம் எல்லாம், துறையின் அமைச்சர், உயர் அதிகாரிகள் பெயர்களை சொல்லி தான் நடக்கு... இதெல்லாம், அவங்களுக்கு தெரியுமான்னு, சார் - பதிவாளர்கள் வட்டாரத்துல குழப்பம் நிலவுது வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement