Advertisement

மழை கொட்டினாலும், வெயில் வாட்டினாலும்... ஒதுங்க இடமில்லை!மேட்டுப்பாளையத்தில் அவதிப்படும் பயணிகள்

மேட்டுப்பாளையம்:வருண பகவான் கொட்டித்தீர்த்தாலும், சூரியன் சுட்டெரித்தாலும், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பாதுகாப்பாக ஒதுங்க இடமில்லை. புதிதாக கட்டியுள்ள பிளாட்பாரத்திலும் எவ்வித அடிப்படை வசதியும் செய்யாததால், பயணிகள்
மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

கடந்த, 1898ல் மேட்டுப்பாளையத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. கோவைக்கு அகல ரயில் பாதை, குன்னுார், ஊட்டி பல்சக்கர ராக்பாருடன் கூடிய மலை ரயில்பாதை அமைக்கப்பட்டன. ரயில்கள் வந்து செல்ல, இரண்டு தண்டவாளம்மட்டுமே இருந்தது.
அகல ரயில்பாதையில், 13 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு மட்டும் பிளாட்பாரம் கட்டப்பட்டது. ஸ்டேஷனில் ஒரு பொது கழிப்பிடம், ஒரு முதல் வகுப்பு கழிப்பிடம், மூன்று இடங்களில் குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டன.
இங்கிருந்து, 13 பெட்டிகளுடன் சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் புறப்படும். கோவையில்,
11 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 24 பெட்டிகளுடன் பயணமாகும்.
11 பெட்டிகளை கோவையில் நிறுத்துவதற்கு பதிலாக மேட்டுப்பாளையத்திலேயே நிறுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.
புதிதாக மேலும் ஒரு தண்டவாளம், இரண்டு பிளாட்பாரம் அமைக்க முடிவு செய்து, கடந்த பிப்., 1ல் வேலை துவக்கப்பட்டது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையத்தில் புறப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்தும், பாசஞ்சர் ரயில் காரமடையில் இருந்தும் தற்காலிகமாக இயக்கப்பட்டன.

தண்டவாளம் அமைக்கும் பணி, மார்ச் மாதம் முடிந்தது. 23 பெட்டிகளுடன் நீலகிரி எக்ஸ்பிரஸ் நிற்க பெரிய பிளாட்பாரம், 11 பெட்டிகளுடன் கோவை பாசஞ்சர் நிற்க சிறிய பிளாட்பாரம், கடந்த ஜூன் மாதம் கட்டி முடிக்கப்பட்டது. புதிய பிளாட்பாரங்களில் மின்விளக்கு, கழிப்பிடம், குடிநீர் வசதி மற்றும் பயணிகள் நிழற்கூரை அமைக்கப்படவில்லை. திறந்தவெளி மைதானம்போல் பிளாட்பாரம் உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் இரவு, 7:40க்கு இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து, காலை, 6:00க்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இதில் வரும் பெரும்பாலான பயணிகள் ஊட்டி ரயிலில் சுற்றுலா செல்கின்றனர். ஊட்டி ரயிலில், கழிப்பிட வசதி இல்லை.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினமும் நான்கு முறை, கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு நான்கு முறை பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்
கின்றனர்.

போதுமான கழிப்பறை, குளியலறை மற்றும் குடிநீர் வசதி இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர். வெயில் சுட்டெரித்தாலும், மழை கொட்டினாலும், பிளாட்பாரத்தில் ஒதுங்க இடமில்லை. கடந்த இரு நாட்களாக மேட்டுப்பாளையத்தில் மழை பெய்தது.
ரயில் பயணிகள் அனைவரும் மழையில் நனைந்து கொண்டு, பிளாட்பாரத்தில் நடந்து சென்று ரயிலில் ஏறினர். மேலும், ரயில் வரும் வரை காத்திருக்க இருக்கை வசதி கூட இல்லை; ரயில் வரும் வரை கால்கடுக்க பயணிகள் காத்திருக்கின்றனர். உடமைகளுடன் தரையில் அமர்ந்திருக்கின்றனர். வெயில் சுட்டெரிக்கும்போது, பிளாட்பாரத்தில் நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பாசஞ்சர் ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் புதிதாக அமைத்துள்ள பிளாட்பாரத்தில் இரு இடங்களில் கழிப்பிடம், குடிநீர் வசதி, பயணிகள் காத்திருக்க நிழற்கூடம் அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்வதற்கு தேவையான நிதியை எம்.பி.,க்கள் ஒதுக்க வேண்டும்' என்றனர்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'பிளாட்பாரத்தில் மின்விளக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. குடிநீர், கழிப்பிடங்கள், மேற்கூரை பணிகளை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம்
செய்யும்' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement