Advertisement

சோலையாறு அணையில் தண்ணீர் திறப்பு...மழையால்... மனநிறைவு!படிப்படியாக நிரம்புகிறது பரம்பிக்குளம்

சோலையாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறுவது நிறுத்தம் செய்யப்பட்டு, பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், அந்த அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் வால்பாறையில், மே மாதம் இறுதியில் கோடை மழை பெய்தது. மூன்று ஆண்டுக்கு பின், கோடை மழை தீவிரமாக பெய்ததால், வறட்சி நீங்கியது. மானாவாரி விவசாயிகள் பயிர் சாகுபடியை துவங்கினர்.
இதையடுத்து, ஜூன் முதல் வாரத்தில், தென்மேற்கு பருவமழை பெய்தது. மழை துவங்கிய போது, சமவெளிப்பகுதியில் தீவிரமாக பெய்தது. அதன்பின், மழை பொழிவு குறைந்தது.
ஆனால், வால்பாறை, சோலையாறு, நீராறு உள்ளிட்ட பகுதிகளில், பருவமழை ஆரம்பம் முதலே தீவிரமாக பெய்கிறது.
மேல் நீராறு, கீழ் நீராறு அணைகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்ததால், கடந்த, 1ம் தேதி சோலையாறு அணையின், 160 அடி உயரத்துக்கும் நீர்மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில், வால்பாறை மலை பகுதியில், ஒரு வாரமாக இடைவிடாது மழை பெய்கிறது. காற்று வேகமாக வீசியதால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது. மண் சரிவும்; மழைக்கு தாக்குப்பிடிக்காமல் வீடுகளும் இடிந்தன.
இதனால், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. நேற்று காலை மழையின் தீவிரம் குறைந்ததால், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டன.
சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று முன்தினம் அதிகாலை, அணையின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதேபோன்று, சேடம்டேம் வழியாக, பரம்பிக்குளம் அணைக்கும் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 2,837 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 528 கனஅடி தண்ணீரும்,
சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 164.49 அடியாக உயர்ந்தது.
சோலையாறு அணைக்கு வினாடிக்கு, 8,572 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 8,612 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.
இதனால், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 37.25 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 9,354 கனஅடி தண்ணீர் வரத்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,407 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்று காலை நிலவரப்படி, 83.20 அடி வரை தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,207 கனஅடி நீர்வரத்து உள்ளது.
அணையில் இருந்து, 83 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்துக்கு உட்பட்ட சோலையாறு அணை நிரம்பி, 12 நாட்களாகிறது. இதையடுத்து, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இதனால், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, நான்கு லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு இந்தாண்டு தண்ணீர் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோன்று, சமவெளிப்பகுதியில் பெய்யும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், இரு மாவட்ட பாசன விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழையளவு நிலவரம்!
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):
வால்பாறை - 49, சோலையாறு - 38, கீழ்நீராறு - 80, மேல்நீராறு - 75, பரம்பிக்குளம் - 45, காடம்பாறை - 35, மேல்ஆழியார் - 8, பொள்ளாச்சி - 37, நவமலை - 11, சர்க்கார்பதி - 15, வேட்டைக்காரன்புதுார் - 26.6, மணக்கடவு - 76.6, துாணக்கடவு - 35, பெருவாரிப்பள்ளம் - 48, நல்லாறு - 19, நெகமம் - 8 என்ற அளவில் மழை பெய்துள்ளது.-- நிருபர் குழு -
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement