Advertisement

'ஸ்மார்ட்' கார்டு அச்சிடும் பணி முடக்கத்தால்...பரிதவிப்பு! ரேஷன் பொருள் கிடைக்காமல் மக்கள் அவதி

திருப்பூர்:மாவட்ட அளவில், ஐந்து சதவீத 'ஸ்மார்ட்' கார்டுகள் செயலிழந்த நிலையில், புதிய கார்டு 'பிரின்ட்' செய்ய முடியாமலும், ரேஷனில் பொருட்கள் பெற முடியாமலும், மக்கள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களில், 7.06 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. மொத்த கார்டுதாரர்களில், 99 சதவீதம் பேர், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக, ஸ்மார்ட் கார்டு மூலமாக, பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
புதிய ஸ்மார்ட் கார்டுகள் மட்டும், சென்னையில் தனியார் நிறுவனம் மூலமாக அச்சிட்டு வழங்கப்படுகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கார்டுகளை திருத்தம் செய்தால், அந்தந்த மாவட்டத்தில், பிரின்ட் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.பொது சேவை மையங்களில், 30 ரூபாய் கட்டணத்தில், கார்டு பிரின்ட் செய்ய வசதி இருந்தது. திருத்தம் செய்யப்பட்ட 'ஸ்மார்ட்' கார்டுகளை பயன்படுத்தி, ரேஷன் கடையில் பொருட்கள் பெறுவதில் பலத்த சிக்கல் ஏற்பட்டது. கடையில் உள்ள 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'ஸ்கேன்' செய்து, பொருட்களை வாங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
பொதுசேவை மையங்களில் பிரின்ட் செய்யப்பட்ட கார்டுகளை, பயன்படுத்த முடியாமல் மக்கள் தடுமாறி வருகின்றனர். பல்வேறு வகையில் சிக்கல் ஏற்பட்டதால், பொதுசேவை மையங்களில் இந்த சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, இரண்டரை மாதங்களாக, 'ஸ்மார்ட்' கார்டு பிரின்ட் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு வழங்கிய, 'ஸ்மார்ட்' கார்டுகளை, திடீரென பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக, மாற்று 'ஸ்மார்ட்' கார்டுகள் பெற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். ரேஷன் கடையில், 'ஸ்மார்ட்' கார்டு ஸ்கேன் ஆகாதபட்சத்தில், எந்தவொரு பொருட்களும் பெறமுடியாமல், ஏழை, எளிய மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: 'ஸ்மார்ட்' கார்டு பழுதானதால், ரேஷன் கடையில் பொருட்கள் பெற முடியவில்லை. பொது சேவை மையத்தில், மாற்று கார்டு அச்சிடும் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக, ரேஷன் கடையில் பொருட்கள் பெற முடியாமல் சிரமப்படுகிறோம். பொதுசேவை மையங்களில், கார்டு அச்சிடுவது எளிதாக இருந்தது. திடீரென அந்த சேவை நிருத்தப்பட்டதால், நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒட்டுமொத்தமாக, பொது வினியோக திட்டம் முடங்கும் அபாயத்தில் உள்ளது, என்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement