Advertisement

இது நல்ல துவக்கம்...

தமிழகத்தில், 'லோக் ஆயுக்தா' மசோதா, சட்ட சபையில் நிறைவேறியது, ஒரு நல்ல விஷயமாகும். இந்த அமைப்பின் தலைவராக, உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது முன்னாள் நீதிபதி அல்லது ஊழல் தடுப்பு அமைப்பில் அதிக அனுபவம் வாய்ந்த ஒருவர், தலைவராக நியமிக்கப்படுவார்.
தமிழகத்தைப் பொறுத்தளவில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடுபிடியால், சபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, இந்த மசோதா நிறைவேறி உள்ளது.

இனி இந்த அமைப்பு, இருமாதங்களில் உருப்பெறும்; இதற்கான உத்தரவாதம், சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் தரப்பட்டிருக்கிறது.நாடு முழுவதும், 20க்கு மேற்பட்ட மாநிலங்கள், இந்த நடைமுறையை ஏற்றிருக்கின்றன. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு
பணியாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், இந்த விசாரணை வளையத்தில் வரலாம்.

ஏற்கனவே ஊழல் எதிர்ப்பு நெருக்கடி போராட்டம் நடத்திய, அன்னா ஹசாரேயின் செயல், அனைவருக்கும் தெரியும். அதற்கு பின் மத்திய அரசு, 'லோக் ஆயுக்தா' சட்டத்தை, 2014ம் ஆண்டில் கொண்டு வந்தது.இன்று, தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட இந்த, 'லோக் ஆயுக்தா' நடைமுறைப் படுத்தப்பட்டவுடன், மிகப்பெரும் பதவியில் இருந்தபடி ஊழல் செய்தவர்களை பிடித்து சிறையில் அடைக்கலாம் என்பது பொருள் அல்ல. எனினும், பல்வேறு திருத்தங்கள் தேவை என்று கூறி, எதிர்க்கட்சியான, தி.மு.க., வெளிநடப்பு செய்தது, அவசரச் செயல். தமிழக அரசின் இச்சட்டம், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதலுக்கு பின் நிறைவேறும்.

மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை, அன்றைய பிரதமர் அலுவலக நிர்வாக பொறுப்பில் இருந்த, இன்னாள் புதுச்சேரி முதல்வர், இதுநாள் வரை இழுத்தடித்தார். இப்போது, அங்கும் இச்சட்டம் அடுத்த மூன்று மாதங்களில் வந்து விடும் என, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய அரசே இன்னமும், 'லோக்பால்' அமைப்பை நிறைவேற்றாமல் இருக்கிறது.ஆனால், அன்னாஹசாரேயின் வலதுகரமாக இருந்த கெஜ்ரிவால், இன்று எப்படி இருக்கிறார்? ஊழல், சட்டவிதிகளை மீறும் அமைச்சர்கள், நிர்வாக மோதல்கள் என்ற புகார்கள் பற்றி, அவர் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில், மக்கள் தீர்ப்பில் அவர், 'மகேசன்' ஆனதாக புரிந்து கொண்டிருக்கிறார்.

அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வரும் வகையில், 'பயோ மெட்ரிக்' பதிவு, ஊழல் புகார் வந்தால் விசாரணை, கோப்புகளை நகர்த்துவதை கண்காணிக்கும் நிர்வாகம் ஆகியவற்றை, மத்திய அரசு கைக்கொண்டிருக்கிறது. அதைத் தவிர, பொருளாதார குற்றங்களை கையாண்டு, மிகப் பெரும் அரசியல்வாதிகள் மீதான முதற்கட்ட விசாரணை அடிப்படையில், அவர்களில் பலர் ஜாமின் பெற நீதிமன்றத்திற்கு அலைவது, நாடு பார்த்திராத சம்பவங்கள்.

இதை ஏற்காத பலரும், 'இது பழிவாங்கும் நடவடிக்கை' என, கூறுகின்றனர். அதே போல சமூக வலைதளங்கள் தரும் செய்தி, முகநுால் பரப்பும் புரட்டுகளால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை தடுப்பது ஆகியவை எளிதல்ல.

நாட்டில், 130 கோடி மொபைல் போன்கள் புழக்கத்தில் இருப்பது, இம்மாதிரியான தவறு களை செய்ய பலரை ஆட்படுத்துகிறது. ஆனால், 'மொபைல் புரட்சி'யை தடுத்தால், நாம் பின்தங்கி விடுவோம்.தவிரவும், மற்றொரு புதிய தகவலாக நிர்வாகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் அமரும், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., போன்ற பலருக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம், மற்ற சில பொது விதிகள் பற்றிய, முறையான ஞானம் இல்லை. இதை, ஒரு ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது.

வங்கிகள் வாராக்கடன் விஷயத்தில், 'ஊழல் குற்றச்சாட்டு புகார்' வந்ததும், மிகப்பெரும் வங்கி அதிகாரியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கவும், வழி இருக்கிறது. அவர் ஊழலற்றவராக இருந்தால், அந்த விசாரணை முடியும் முன், 'ஊழல் பட்டியலில்' இடம் பெற்று விடுவார். ஆகவே, இம்மாதிரியான விசாரணைக்கு, தற்போதுள்ள பிரிட்டிஷ் ஆட்சி இயற்றிய சட்டப் பிரிவுகளை மாற்றியாக வேண்டும்.

மோடி அரசு இதுவரை, ஆயிரத்துக்கும் அதிகமான அர்த்தமற்ற அரசு சட்டங்களை அகற்றி, நிர்வாக வசதி மேம்பட முயற்சிக்கிறது.இவற்றை எல்லாம் பார்க்கும் போது, இன்றைய நிலையில் இம்மாதிரியான நல்லதொரு அணுகுமுறை வந்தாலும், முதலில் அமலாக்கம் செய்யும் போது, அடுத்தடுத்து அவற்றில் என்ன புதிய புதிய கேள்விகள் சட்டரீதியாக வரும் என, இப்போது கூறமுடியாது.

இச்சட்டம் முதலில் நிறைவேறி, உயர் பொறுப்பில் உள்ளவர்கள் அதன் பிரிவுகளை உணர்ந்து,
தங்கள் பணிக்காலத்தில் பயணிக்க நேரிடும். அது முதல் வெற்றியாக நிச்சயம் கருதப்படும்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement