Advertisement

மாமூலில், 'கல்லா' கட்டும் கலால் போலீஸ் 'டாஸ்மாக்' கடை ஒன்றுக்கு வாரம் ரூ.500

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும், 'டாஸ்மாக்' மதுபான கடையில், வாரம், 500 ரூபாய் வசூலித்து, அவர்கள் செய்யும், 'கோல்மால்' தனத்தை கண்டும், காணாமல், கலால் போலீசார் எனப்படும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், 'சைலன்ட்டாக' உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 'டாஸ்மாக்' மதுபான கடைகள், திருமழிசை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மண்டல அலுவலகங்கள் மூலம் செயல்படுகின்றன. மாவட்டத்தில், தற்போது, 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 80 சதவீதம் கடைகளில், 'குடி'மையம் இல்லாமல் செயல்படுகிறது.
குடிமையம் இல்லாத டாஸ்மாக் கடைகளுக்கு அருகில், சிலர், சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து, நள்ளிரவு, 10:00 மணி முதல், மறுநாள் பகல் 12:00 மணி வரை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
சில மதுபான கடைகளில், பணிபுரியும் ஊழியர்கள், மதுபாட்டில் மூடியை நுாதன முறையில் திறந்து அதில் தண்ணீர் ஊற்றி, கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர்.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கடைகள், காக்களூர் ஏரிக்கரை அருகில் உள்ள கடைகள், திருத்தணி, பூந்தமல்லி, அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும், இதுபோன்ற சட்டவிரோத செயல் நடக்கிறது.
இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க, திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரில் சிலர், கடை ஒன்றுக்கு வாரம், 500 ரூபாய் வீதம் வசூலிக்கின்றனர். உதாரணமாக, திருவள்ளூர் கலால் போலீசார் எல்லைக்குள், 36 கடைகள் உள்ளன. இதில் ஒரு கடைக்கு, 500 ரூபாய் வீதம், 18 ஆயிரம் ரூபாய் வசூலாகிறது. ஒரு மாதத்திற்கு, 72 ஆயிரம் ரூபாய் வசூலாகிறது.
இதைத் தவிர, திருட்டுத்தனமாக செயல்படும் குடிமையங்கள் மூலம், மாதம், 5,000 ரூபாய். விடுமுறை நாட்களில் செயல்பட்டால், அன்று ஒரு நாள் மட்டும் 10 ஆயிரம் ரூபாய்; கிராமங்களில் திருட்டுத்தனமாக செயல்படும் மது விற்பனை செய்வோரிடம் இருந்து வாரம்தோறும் மாமூல் என, மாதம் பல லட்சம் ரூபாய் வசூலாகிறது.
இதனால், மதுவிலக்கு அமலாக்க பிரிவு எனப்படும் கலால் பிரிவில் பணியாற்ற, காவலர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அவ்வப்போது, சென்னை யில் இருந்து, தனிப்படையினர் வந்து, சட்டவிரோத மாக செயல்படும் கடைகளை ஆய்வு நடத்தி, மது பாட்டில்களை பறிமுதல் செய்தாலும், உள்ளூர் போலீசார் மற்றும் கலால் போலீசார் உதவியுடன் மீண்டும் கனஜோராக நடக்கிறது என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, காவல்துறை உயர் அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்களை, கூண்டோடு கலைத்து, புதிதாக தேர்வான காவலர்கள், உதவி ஆய்வாளர்களை பணியில் நிரப்ப வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement