Advertisement

நந்தீஸ்வரர் கோவில் நிலம் 30 ஆண்டுகளுக்கு பின் மீட்பு

கூடுவாஞ்சேரி:நந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 25 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை, 30 ஆண்டுகளுக்கு பின், ஹிந்து சமய அறநிலையத் துறை பெண் அதிகாரிகள் மீட்டனர்.
விற்பனை
சென்னை அடுத்த, நந்தி வரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில், புகழ்பெற்ற நந்தீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஏராளமான சொத்துகள் உள்ளன.கோவில் எதிரே, சுவாமிக்கு அபிஷேகம் செய்யவும், பக்தர்கள் வசதிக்காகவும், சர்வே எண்: 332ல், 5.83 ஏக்கர் நிலப்பரப்பில் குளம் அமைக்கப்பட்டது.
சமீப ஆண்டுகளாக, இக்குளம், முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க.,வைச் சேர்ந்த சில நிர்வாகிகள், கோவில் நிலத்தை விற்பனை செய்தனர். இங்கு இடம் வாங்கியோர், வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.கடந்த, 30 ஆண்டுகளாக, கோவில் குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இது தொடர்பாக, நமது நாளிதழிலும், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 'ஆக்கிரமிப்பாளர்கள், 15 நாட்களுக்குள் இடத்தை அகற்றி கொள்ள வேண்டும்' என, இணை ஆணையர் அசோக்குமார் கூறினார்.
எதிர்ப்பு
ஆக்கிரமிப்பாளர்கள் இதை கண்டுகொள்ளாததால், உதவி ஆணையர் ரமணி தலைமையில், செயல் அலுவலர்கள், ஊழியர்கள், வருவாய் துறை அதிகாரிகள், குளம் பகுதியை ஆக்கிரமித்து கட்டியிருந்த, 21 வீடுகளை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நேற்று அகற்றினர்.அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த இடத்தின் மதிப்பு, 25 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, ஹிந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 30 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement