Advertisement

'டவுட்' தனபாலு

இ.கம்யூ., தேசிய செயலர் டி.ராஜா: மாநிலத்திற்கு மாநிலம், வெவ்வேறு அரசியல் தன்மைகள் கொண்ட நம் நாட்டில், லோக்சபாவுக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, சாத்தியமே இல்லை.


டவுட் தனபாலு: 'சட்டசபை தேர்தல்களில் ஒரு மாதிரியாகவும், லோக்சபா தேர்தலில் வேறு மாதிரியாகவும் கூட்டணி வைக்கிறோம்... ஒரே நேரத்தில், இரண்டுக்கும் தேர்தல் வந்தால், எங்களுக்கும் கூட்டணி குழப்பம் வரும்; வாக்காளர்களும் குழம்பிடுவாங்க... எங்களுக்கு ஓட்டே தேறாது... அதனால, அதை கைவிடணும்'னு, வெளிப்படையாகச் சொன்னால் என்னங்கறது தான், என்னோட, 'டவுட்!'


-----


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்: அ.தி.மு.க., கட்டியுள்ள மதில் இல்லாத அரை குறை மாளிகையில், பல்பு மட்டுமில்லை; மெயின் சுவிட்சும் இல்லை; மின் இணைப்பும் இல்லை. 'எவருக்கும் பயன்படாத இருளடைந்த, பாழடைந்த கட்டடமாகத் தான், லோக் ஆயுக்தா மசோதா இருக்கிறது' என்பதை, மீண்டும் மக்களிடம் எடுத்துரைப்போம்.


டவுட் தனபாலு: எதுக்குங்க இவ்வளவு, 'தம்' கட்டி பேசிட்டு... அதான், 'இந்த ஆட்சி, விரைவில் முடியப் போகுது; தி.மு.க., ஆட்சி மலரப் போகுது'ன்னு சொல்லி வர்றீங்களே... ஆட்சியில் அமர்ந்தவுடன், லோக் ஆயுக்தா என்ற மாளிகையை, சட்டத்திருத்தம் மூலம் புதுப்பித்து, பிரகாசப்படுத்திட வேண்டியது தானே... 'அடுத்தவர் கட்டும் வீட்டுக்கு ஆயிரம் யோசனை; கட்டின வீட்டில் ஆயிரம் குறை'ன்னு, இதைத்தான் சொல்வாங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!


-------


விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா: ஜார்க்கண்டில், மாட்டிறைச்சி வியாபாரி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, மாலை அணிவித்து வரவேற்றதாக, எனக்கு எதிராக புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற வன்முறையை நான் ஆதரிப்பதாக, அனைவரும் கருதுகின்றனர்; இதற்காக, வருத்தம் தெரிவிக்கிறேன்.


டவுட் தனபாலு: கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை, வீட்டுக்கே அழைத்து, மாலை மரியாதை விருந்து கொடுப்பது, என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்னு தெரியாமல் தான், அப்படி செய்தீங்களா... இவ்வளவு நாள் கழித்து, நீங்க வருத்தம் தெரிவிப்பதைப் பார்த்தால், பா.ஜ., தலைமையிடம் பெருசா, 'வாங்கி'க்கட்டி இருப்பீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது...!
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • sagar saritha - Chennai,இந்தியா

    மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டாம் என்றும். மக்களை வெறும் ஒட்டு வங்கியாக பாராமல் இருந்தால் ஒரே நேரத்தில் எத்தனை தேர்தல்களை வேண்டுமானாலும் எதிர்நோக்கலாம். ஹ்ம்ம். இதெல்லாம் நடந்தா எட்டாவது அதிசயம் தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement