Advertisement

கொடூரன் தஷ்வந்துக்கு உறுதியானது தூக்கு : சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி

சென்னை: ஏழு வயது சிறுமியை, பாலியல் வன்முறை செய்து, கொலை செய்து, உடலை எரித்த வழக்கில், கொடூரன் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

சென்னை, முகலிவாக்கத்தைச் சேர்ந்தவன், தஷ்வந்த்; வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த, ஏழு வயது சிறுமியை, துாக்கி சென்று, பாலியல் வன்முறை செய்து, கொலை செய்தான்.
பின், பெட்ரோல் ஊற்றி, உடலை எரித்துள்ளான். இச்சம்பவம், 2017 பிப்ரவரியில் நடந்தது.

வழக்கு பதிவு : இந்திய தண்டனை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், தஷ்வந்துக்கு எதிராக, மாங்காடு போலீசார், வழக்குப் பதிவு
செய்தனர். ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த், பெற்ற தாயை கொலை செய்ததாக, மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த தஷ்வந்த், பின் பிடிபட்டான்.
சிறுமியை பாலியல் வன்முறை செய்து, கொலை செய்த வழக்கை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி, வேல்முருகன் விசாரித்தார். தஷ்வந்துக்கு துாக்கு தண்டனை விதித்து, 2017 பிப்ரவரியில் தீர்ப்பு அளித்தார். தண்டனையை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை உறுதி செய்ய, அரசு தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள், எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் எமிலியாஸ், கூடுதல் வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், பிரபாவதி ஆகியோர் ஆஜராகினர்.
உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் தரப்பில், வழக்கறிஞர், வி.கண்ணதாசன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களும் முடிந்து, ஏப்., ௨௮ல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில், நேற்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். தஷ்வந்துக்கு, துாக்கு தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, நீதிபதிகள் உறுதி செய்தனர்.
நீதிபதிகள் விமலாவும், ராமதிலகமும், ஒரே தீர்ப்பை அளித்தாலும், தனி தனியாக தீர்ப்பு எழுதி உள்ளனர்.

வேதனை : நீதிபதி, எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவு: திருமணம் செய்து வைத்து, மகளை பிரியும் அந்த மகிழ்ச்சியான தருணத்தில்கூட, பெற்றோருக்கு மிக கஷ்டமாக இருக்கும்; வேதனையாக இருக்கும். அப்படி இருக்கும் போது, மரணத்தின் வழியாக மகளை பிரிவது என்பது கொடுமையானது. அதுவும், கொடூரமான, மிருகத்தனமான முறையில், மகள் கொலை செய்யப்பட்டது, அந்த பெற்றோருக்கு எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும்.
அந்த வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. மன வேதனை, துயரத்தை அளவிட, வார்த்தைகள் போதாது. மனிதாபிமானமற்ற முறையில், கொலை செய்யப்பட்டு கிடக்கும் குழந்தையை பார்க்கும் போது, அவர்களின் மனம் எந்த அளவுக்கு வேதனைப்பட்டு இருக்கும் என்பது புரிகிறது. எவ்வளவு ஆறுதல் கூறினாலும், அவர்களுக்கு ஏற்பட்ட வலிக்கு, நிவாரணம் கிடையாது.இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, அரசு தரப்பு, குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
குழந்தைகள் எந்த வித துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல், மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்வுக்கு அரசியலமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. ஆனால், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.தாயாரை கொலை செய்ததாக, மற்றொரு வழக்கு, தஷ்வந்த் மீது உள்ளது. அந்த வழக்கு பற்றி இங்கு கூறினாலும், அதற்குள் இந்த நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள சாட்சியங்களை தான், நீதிமன்றம் ஆராய்கிறது.

மரண தண்டனை : குற்றம் சாட்டப்பட்டவர் அந்த அளவுக்கு ஆபத்தானவர், அவரை விட்டு வைத்தால், சமூகத்துக்கு ஆபத்து என, நீதிமன்றம் கருதினால், மரண தண்டனை விதிப்பதை தவிர, வேறு வழியில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஆத்திரம் அல்லது அழுத்தம் காரண மாக, இந்த கொலை நடக்கவில்லை. பெண்கள் மீதான இச்சையினால் ஏற்பட்டது.
சிறுமியின் குரல் வளையை அழுத்தியதால், அவளது குரல் வெளிஉலகுக்கு கேட்க கூடாது என்பது மட்டுமின்றி, நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டே பிரித்து விடவும் துணிந்து, அதைச் செய்து விட்டார். அதன்பின், குற்றத்தை மறைக்க மேற்கொண்ட செயல், கொடூரமானது.
பூவாக மலர வேண்டிய மொட்டை, மலர்வதற்கு முன், சாம்பலாக்கி விட்டார். இத்தகைய கொடூர செயலை செய்வதற்கான மனநிலையானது, செயலை விட கொடூரமானது.
மிருகத்தனமான, கொடூரமான செயலை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பாலியல் உணர்வை தீர்த்துக் கொள்ள, குழந்தையை கொன்று, உடலை எரித்த செயல்,
அவரது கொடூர மனநிலையை வெளிப்படுத்துகிறது. தகுந்த தண்டனை விதிப்பது தான், குற்றத்துக்கு எதிராக நீதி கேட்கும் சமூகத்தின் கதறலுக்கு, நீதிமன்றம் அளிக்கும் பதிலாக இருக்கும். குற்றத்துக்கு ஏற்ப, தண்டனை விதிக்கப்பட வேண்டும். எங்கள் முன் உள்ள இந்த குற்றத்தை, பெருந்தன்மையாக பார்க்க முடியாது. மரண தண்டனைக்கு எதிரானவர்கள், உணர்வுகளுக்கு சரண் அடைந்து விட்டதாக, இந்த உத்தரவை கூறுவர். நம்மில் பலர், ஒரு எறும்பை கொல்வதற்கு கூட விரும்ப மாட்டார்கள்.பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர், உடல் ரீதியாக, மன ரீதியான வலியை, வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும். பாலியல் கொடுமையை ஒரு சிறுமி அனுபவிக்கும் போது, அவரது திருமண உறவிலும் பிரச்னை ஏற்படும்.
அவர் ஏன் மவுனமாக, அந்த வேதனையை அனுபவிக்க வேண்டும்? உதவிக்கான கதறல் என்று தான், அந்த மவுனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.எனவே, மரண தண்டனையை மாற்றுவதற்கு, எந்த நியாயமும் இல்லை; இது, அரிதினும் அரிதான வழக்கு என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இருந்து விலகி செல்ல, எந்த காரணமும் இல்லை. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி எஸ்.ராமதிலகம் பிறப்பித்த உத்தரவு:நீதிபதி விமலாவின் தீர்ப்பில், நான் உடன்படுகிறேன். சிறுமியை கூட்டாக பாலியல் வன்முறை செய்த வழக்கில், உச்ச நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது. மரண தண்டனை விதிப்பதற்கான, அரிதினும் அரிதான வழக்கு இது என்ற முடிவுக்கு வருவதில், எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதனால், விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிடுவதற்கு, எந்த காரணமும் இல்லை.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement