Advertisement

பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் ராமு தாத்தா

கோலி சோடா சினிமா குழுவினர் தங்கள் சினிமா விளம்பரத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து எவ்வித எதிர்பார்ப்பும் இ்ல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்பர்வகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசும் பணஉதவியும் வழங்கி கவுரவித்தனர்.அவர்களி்ல் ஒருவர்தான் மதுரை ராமு தாத்தா

எண்பத்தைந்து வயதாகும் இவர் கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளியவர்களுக்காக பத்து ரூபாய்க்கு சாப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார்.

விருதுநகர் அருகே உள்ள வில்லுாரைச் சேர்ந்தவர், தனது 13 வயதில் ஒட்டலில் சர்வராக உழைக்க ஆரம்பித்தார் பல ஊர்களில் பல ஒட்டலில் வேலை பார்த்து இருக்கிறார்.

அப்படி ஒரு சமயம் வடலுார் போயிருந்த போது பசிப்பிணியகற்றும் வள்ளலார் ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார், அங்குள்ளவர்கள் வயிறார சாப்பிட்டு மனமார வாழ்த்துவதைப் பார்த்தார்,அப்போது முதல் தானும் இது போல முடிந்தவரை எளியவர்களின் பசி அகற்றும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தார்.

மதுரை குருவிக்காரன் சாலையில் தெரு ஒரத்தில் ரோட்டுக்கடை போட்டு ஒரு இட்லி பத்து பைசாவிற்கு விற்று தனது தொழிலை ஆரம்பித்தார் அப்போது முதல் இப்போது பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடுவது வரை காசு இல்லாதவர்கள் இவரது கடையில் இலவசமாக சாப்பிட்டுவிட்டு போகலாம், மேலும் தினமும் பத்து இருபது சாப்பாட்டை பார்சாலாக கட்டி நடக்கமுடியாதர்களுக்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு வருவார் இப்போது வயதாகிவிட்டதால் கொடுத்தனுப்பிவிடுகிறார்.

குருவிக்காரன் சாலையில் இருந்தவர் படிப்படியாக வளர்ந்து இப்போது இருக்கும் மதுரை அண்ணா நிலையம் பகுதிக்கு வந்தார், இவரது மனைவி பூரணத்தம்மாள் இவருக்கு துணையாக இருந்தது மட்டுமின்றி இவரது தொழிலுக்கு, தொண்டுக்கு துாணாகவும் இருந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்புதான் ராமுவின் மனைவி பூரணத்தம்மாள் இறந்துபோனார் இறக்கும் தருவாயிலும் கணவரை அழைத்து எந்த சூழ்நிலையிலும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு சாப்பாடு போடுவதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

''அந்த மகராசி இல்லாம நான் மனதால் கஷ்டப்படுறேன், ஆனா கடைக்கு நம்பி வரக்கூடிய தொழிலாளர்கள் ஏழைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இந்த வயதிலும் இஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று நெகிழ்கிறார் ராமு தாத்தா.இவரின் குடும்பத்தினரும் இவருக்கு நிறையவே உதவுகின்றனர்.

அந்தந்த மாதம் உணவு பொருள் வாங்குவதற்கும், வேலையாட்களுக்கு சம்பளம் போடுவதற்கும் எவ்வளவு செலவாகுமோ? அதை வைத்துதான் சாப்பாட்டின் விலையை நிர்ணயம் செய்கிறேன், எனது செலவிற்கு கட்டுப்படியானால் போதும் ஒரு பைசா லாபம் வேண்டாம். மதிய சாப்பாடு பத்து ரூபாய்க்கு தருவது போல இப்போது காலையில் இட்லி தோசையும் குறைந்த விலைக்கு தருகிறேன்.

யார்ட்டேயும் எந்தவித உதவியும் எதிர்பார்ப்பது இல்லை இருந்தாலும் சில புண்ணியவான்கள் தேடிவந்து உதவும் போது மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன், அப்படித்தான் கோலி சோடா குழுவினர் வழங்கிய பரிசினையும் பாராட்டையும் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லும் ராமு தாத்தா தொல்லையாக நினைத்து மொபைல் போனிற்கு விடை கொடுத்துவிட்டார்.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  தமிழகம் எல்லா வகையிலும் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது.பத்து ரூபாய்க்கு சாப்பாட்டை பாராட்ட வேண்டும்.ஆனால் தமிழ் நாட்டில் இன்னொரு விஷயமும் உள்ளதே இருபது ரூபாய்க்கு வாக்குகள்?

 • kannan - Madurai,இந்தியா

  பாராட்ட வார்த்தைகள் வரவில்லை. உங்களை வணங்குகிறேன் ஐயா. அதுவும் நீங்கள் பிறந்த மண்ணில் நான் பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அன்னை மீனாட்சியின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

 • Sandru - Chennai,இந்தியா

  மிகவும் அபூர்வமான உயர்ந்த மனிதர்

 • Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா

  மனித நேயம் இவர் மூலம் ஏழை மக்களுக்காக செயல் படுகிறது கோடி கோடியாய் சம்பாரிக்கும் நபர்கள் செய்யாததை ஒரு சாதாரண நபர் செய்வது பணம் இருந்து செயல் பாடாதவர்களுக்கு ஒரு எடுத்து காட்டு

 • Varadharajan Abt - Madurai,இந்தியா

  தெய்வங்கள் பலவடிவ உருவங்கள் கொண்டு தோன்றுகிறார்கள். அந்த உருவான இன்று மதுரை ராமு தாத்தா. மனதார வணங்குகிறேன்.

 • Thiyaga Rajan - erode,இந்தியா

  டாஸ்மாக் தமிழன் மிஸ் யூஸ் பண்ணுவான் ,பாத்திரமறிந்து தர்மம் பண்ணனும்

 • Ray - Chennai,இந்தியா

  மனமுண்டானால் மார்க்கமுண்டு இது பணத்தால் வந்ததல்ல மனத்தால் வந்தது பெரிய பெரிய ஓட்டல் செயின் என்று ஊருக்கு ஊர் வளைத்துப் போடுகிறார்களே அவர்கள் என்ன சொல்வார்கள்?

 • M Pandiarajan - New York,யூ.எஸ்.ஏ

  "அறம் செய்ய விரும்பு". "தானத்தில் சிறந்தது அன்ன தானம்". திரு.ராமு அவர்கள் பல ஆண்டுகளாக சிறந்த அறம் செய்து வருகிறார். இவருக்கு இனி இல்லை பிறவி. ( கருத்து போடும் அன்பர்கள் எங்கே? தயவுசெய்து இங்கும் வந்து வாழ்த்து மழை பொழிந்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள்.)

 • nandaindia - Vadodara,இந்தியா

  ஐயா உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். வாழ்க உங்கள் தொண்டு

 • KUMAR. S - GUJARAT ,இந்தியா

  நீங்கள் நீடூழி வாழவும் உங்கள் சேவை தொடரவும் எங்களது வாழ்த்துக்கள்...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  வாழ்க வளர்க, உங்களைப்போல எல்லோரும் மாறிவிட்டால் பிறகு இந்த பணத்திற்கு விஷம் என்னும் பெயர் மாறி அவசியமான வடிவில் இருப்பது என்று அழைக்கப்படும்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  வடலூர் வள்ளலின் வழியில் ஒரு பசிப்பிணி மருத்துவர் அவர் பணிதொடர வாழ்த்துவோம் வாரீர்

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை உண்டி கொடுத்த்தோர் உயிர் கொடுத்த்தோர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement