Advertisement

உண்ணும் உணவில்... உஷார்!

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வரை, உணவகங்களுக்கு சாப்பிடச் சென்றால், சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவரது விருப்பமாக இருந்தவை, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா தான். அதுவே, ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன், நான், புல்கா போன்ற ரொட்டிகளாகவும், பனீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன் போன்ற வட மாநில அல்லது சீன உணவுகளாக மாறி விட்டன.

ஒரு காலத்தில், உணவகங்களில் உணவு பரிமாறுபவர்களால், வாயால் சொல்லப்படும் அளவுக்கு, உணவுகளின் பெயர்கள் இருந்தன. அதன் பிறகு, ஒன்றிரண்டு பக்கங்களை கொண்ட, 'மெனு கார்டு' வழங்கப்பட்டது. இப்போது, பெரிய சைஸ், 'பைண்டு' செய்யப்பட்ட புத்தகம் போல, மெனு கார்டு மாறிவிட்டது.

அது போல, எப்போதாவது உணவகங்களுக்கு செல்வது என்றிருந்த நிலை மாறி, இன்றைய இளம் தலைமுறை, வார இறுதி நாட்கள் மட்டுமின்றி, வாரத்தின் பல நாட்களை, விதவிதமான உணவகங்களில் கழிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அதிக பணப்புழக்கம், வெளி வட்டாரத்தில் அதிக செயல்பாடு போன்றவற்றால், இளைஞர்கள் மட்டுமின்றி, நடுத்தர வயதினரும் கூட, அடிக்கடி வெளியிடங்களில் சாப்பிட வேண்டியதாகி விட்டது.

வெளியூர்களுக்கு சென்றால் கூட, கட்டுச்சோறு கட்டிச் சென்று, அந்த சோறு தீரும் முன், ஊர் திரும்பிய நம்மவர்கள், இப்போது, கட்டுச்சோறு என்பதை மறந்தே விட்டனர். மாறாக, வகை வகையாக, பல ஊர்களில், விதவிதமாக சாப்பிடுவதற்காகவே, வெளியூர்களுக்கு பயணம் மேற்
கொள்கின்றனர்.

மேலும், ஒரு போன் செய்தால் போதும், இத்தாலி நாட்டின் உணவான பீட்சா, நம் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடையிலிருந்து, சுடச்சுட வந்து விடும். 'இத்தாலியில் விற்கப்படும் அதே சுவை, மணம், உங்க பக்கத்து வீட்டு கடையிலும் கிடைக்கும்' என, அந்த நிறுவனம் உறுதியளிக்கிறது.

இத்தாலியில் உள்ள சீதோஷ்ணம் என்ன... நம் நாட்டின் இப்போதைய கால நிலை என்ன... அவர்களின் உணவு பழக்கம் என்ன... நம் உணவு பழக்கம் என்ன என்பதை, பீட்சா விரும்பிகள் யோசிப்பதே இல்லை. 'சொத சொத' என, பிய்த்து எடுத்து, வாயில் போட்டு, 'உள்ளே' அனுப்பி விடுகின்றனர்.

அனைவரின் கையிலும் இருக்கும் மொபைல் போன்களில், நிறைய, 'ஆப்'கள், உணவை வீட்டுக்கு கொண்டு வருபவையாகவே உள்ளன. சாதாரணமாக, சில ஆயிரம் ரூபாய்களில் ஆரம்பித்த அந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், சில ஆண்டுகளில், பல கோடியை சம்பாதிக்கும், 'மெகா' நிறுவனங்களாக மாறி விடுகின்றன.

அந்த அளவுக்கு, கோடிக்கணக்கான நம்மவர்கள், ஓட்டல் உணவுகளை, வீட்டுக்கு வரவழைத்து, அந்த நிறுவனங்களை கோடிகளில் புரள செய்கின்றனர்; வயிற்றை குப்பை மேடாக மாற்றி வருகின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கூட, சாதாரண கையேந்தி பவன்கள் முதல், காபி ஷாப் வரை, எதையும் விட்டு வைப்பதில்லை. தினமும் ஒரு சுவையை தேடித்தேடி ருசிக்கின்றனர்.

உணவகங்களில், வாரத்தில் நான்கு நாட்கள், விதவிதமான பெயர்களில் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அங்கு, நாடு வாரியாக, மாநில வாரியாக, ஊர் வாரியாக பரிமாறப்படும் உணவு வகைகளை, உணவு பிரியர்கள், வெகுவாக ரசித்து உண்கின்றனர்.

அந்த உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாக்கள், எண்ணெய், பொடிகள், நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா என, பெரும்பாலும் யாரும் யோசிப்பதே இல்லை.மார்கழி மாதத்து, வண்ண கோல மாவு கிண்ணங்களைப் போல, வரிசையாக வைத்திருக்கும் பல பொடிகளை துாவி, 'சாட்' எனப்படும், வட மாநில நொறுக்குத் தீனியை தருகின்றனர்.

நாக்கு வரை மட்டுமே ருசியாக இருக்கும் அவை, உணவுக்குழாயை துவம்சம் செய்யும் என்பது பற்றி, பலர் கவலைப்படுவதில்லை.இத்தகைய நொறுக்குத் தீனியிலிருந்து, உடலுக்கு தேவையான எந்த சத்தும் கிடைப்பதில்லை; மொத்தமும் குப்பை தான். பண விரயமும், ஆரோக்கிய கேடும் தான் நிதர்சனம்!

எனக்கு தெரிந்த குடும்பத்தில், 15 வயதான, அழகான சின்னப்பெண்ணுக்கு, புற்றுநோய். அதிர்ச்சி அடைந்த நான், அந்த குழந்தையின் தந்தையிடம், எப்படி வந்தது என, கேட்ட போது, 'அவ, அடிக்கடி வெளியில சாப்பிடுவா... அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்' என்றார்.புகைபிடித்தல், மது
அருந்துதல், மரபு வழி காரணம் போன்றவற்றுடன், உட்கொள்ளும் தரமற்ற உணவும், புற்று நோய் தாக்கத்திற்கு காரணம் என்பதை, டாக்டர்கள் கூறுகின்றனர்; கேட்பார் தான் யாருமில்லை!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தாள், அந்த குழந்தை. 'பிளஸ் 1ல், காமர்ஸ் எடுக்கப் போகிறேன், ஆன்ட்டீ... பி.காம்., படித்து, வங்கிப் பணியில் சேருவேன்' என்று கனவுடன் சொன்ன அவள், பிளஸ் 1ல் சேரவில்லை. அறுவை சிகிச்சைக்கு பின், ஆளே உருமாறி போயிருந்தாள்... பருவ வயதுக்கே உரிய வனப்புடன், நீண்ட பின்னலுடன், பூரிப்பாக இருந்த அந்த குழந்தையை, சில மாதங்களுக்கு பின், புகைப்படத்திற்கு பூ வைத்து தான் பார்க்க நேர்ந்தது.அப்போது எனக்கு ஏற்பட்ட துக்கமும், வருத்தமும் அளவிட முடியாதது.

இன்றும் எத்தனையோ, சிறு வயது குழந்தைகள் உட்பட பலரும், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, இதய நோய் என, விதவிதமான உபாதைகளால் துடித்துக் கொண்டிருக்கின்றனர். 10 வயதிலேயே பருவம் அடைவதும், 35 வயதிலேயே, 'மெனோபாஸ்' எனப்படும், 'துாரம்' நின்று போவதும், பெண்களில் பெரும்பாலானோருக்கு, குழந்தைகள் இல்லை என, கேட்கும் போது, இதயமே நின்று விடும் போல உள்ளது.

இவற்றிற்கெல்லாம் காரணம், தரமற்ற உணவு பழக்க, வழக்கங்களும், உணவில் சேரும், கண்ணுக்கு தெரியாத மோசமான ரசாயனங்களும் தான் என, மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்தாலும், கேட்பது யார்?

முன்பெல்லாம், பெரிய, சினிமா கதாநாயகர்களுக்கு தான், புற்றுநோய் வந்தது. ஆனால், இப்
போது நம் குடும்பத்தில் கூட, அந்த உயிர்க்கொல்லி நோய் இருப்பதை அறிகிறோம். மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களை பின்பற்றாதவர்களுக்கும், சில சமயங்களில், கொடிய நோய்கள் தாக்குகின்றன.அதற்கெல்லாம் காரணம், நாம் உண்ணும் உணவு தான்.

செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் விளைவிக்கப்பட்ட அரிசி, தானியங்கள், காய்கறிகள், பழங்கள்; வீரிய ஊசி போடப்பட்டு, செயற்கை முறையில் வளர்க்கப் படும் கோழிகள், பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள் போன்றவற்றால், வீட்டில் நாம் சமைத்து சாப்பிடும் உணவுகளும், 'ஸ்லோ பாய்சன்' எனப்படும், மெல்லக் கொல்லும் விஷமாக மாறி வருகின்றன.
அதையே, காரம், மசாலா, பதப்படுத்தப்பட்ட எண்ணெய், சுவையூட்டிகள், நிறம் மாற்றிகள் போன்றவற்றை அதிகம் சேர்த்து, உணவகங்கள் மற்றும் வெளியிடங்களில் சமைத்ததை சாப்பிடும் போது, ஆபத்து பல மடங்காகி விடுகிறது.

சமச்சீரான, சுகாதாரமான உணவு, உடற்பயிற்சி, சுத்தமான சுற்றுப்புறம் ஆகியவை, நம்மை காக்கும் கவசங்கள் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.எப்போதாவது ஒரு முறை ருசிக்காக, வெளியில், உணவகங்களில் சாப்பிடலாம்; தவறில்லை. அது போல, வெளியே தான் சாப்பிட்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளவர்கள் இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற எண்ணெய் இல்லாத, அதிக மசாலா சேராத, தொந்தரவு தராத, நம் நாட்டு உணவுகளை சாப்பிடலாம்.

சமீபத்தில், உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில், அவருடைய வீட்டில், பாதுகாப்பான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளால் சமைக்கப்பட்ட, சில அருமையான உணவுகளை, வந்திருந்த மற்றொரு உறவினரின் குழந்தைகள் கிண்டல் செய்தபடி இருந்தனர். இத்தனைக்கும், குழந்தைகளுக்கு பிடித்தமான விதத்தில், அந்த பதார்த்தங்களை அவர், 'ஸ்பெஷலாக' சமைத்திருந்தார்.
ஆனால், அடிக்கடி வெளியே, உணவகங்களில் சாப்பிட்டு பழகிப் போன நாக்கை வளர்த்திருந்த அந்த குழந்தைகளுக்கு, அவியலும், பொரியலும், பச்சடியும், கேலிக்குரிய பதார்த்தங்களாக தெரிந்தன.

'வீட்டில் சமைக்கும் உணவுகளை, ஏதாவது குற்றம், குறை கூறி, தவிர்த்து விடுகின்றனர். வெளியே அழைத்து செல்ல மறுத்தால், 'மொபைல் ஆப்' மூலம், உணவகங்களுக்கு, 'ஆர்டர்' செய்து, வீட்டுக்கே வரவழைத்து சாப்பிடுகின்றனர்' என, அந்த குழந்தைகளின் தாய், வருத்தத்துடன் கூறினார்.அந்த குழந்தைகளோ, இயல்புக்கு அதிகமாக பெருத்து, முகத்தில் பெரிய சைஸ் கண்ணாடி அணிந்திருந்தனர். ஆனால், விருந்தளித்த உறவினர் வீட்டு குழந்தைகள், இயல்பாக இருந்தனர்.

பணம் இருக்கிறது என்பதை காட்டுவதற்காக, குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று, உணவகங்களில் சாப்பாடு வாங்கிக் கொடுப்பது, பெருமைக்கு உரியதில்லை; தவறு என, பெற்றோர் உணர வேண்டும்.இது ஒரு புறமிருக்க, நடுத்தர வயதினரிடம், தற்போது
ஓரளவுக்கு, உணவு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றாலும், இது இன்னும் போதாது; அதிக மக்களை சென்றடையவில்லை.

நல்ல பத்திரிகைகள், நல்ல உணவு குறித்த புரிதலை, மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. எதை சாப்பிடலாம், எப்படி சாப்பிட வேண்டும், சிறு தானியங்களை உணவில் அதிகம் பயன்படுத்த வேண்டும், அதை எப்படி ருசியாக சமைப்பது போன்ற பல நல்ல தகவல்களை, 'தினமலர்'
போன்ற சில நல்ல பத்திரிகைகள், வாரந்தோறும் வழங்கி வருகின்றன.

அரிசியை மட்டுமே அதிகமாக உட்கொண்டு வந்தவர்கள், கோதுமைக்கு மாறினர். கோதுமையில், தேவையில்லாத ரசாயன பொருள் இருக்கிறது என்பதை அறிந்ததும், சிறு தானியங்கள் பக்கம், மக்கள் தங்கள் கவனத்தை திருப்பிஉள்ளனர்.அது போல, 'ஆர்கானிக்' எனப்படும், இயற்கையாக விளைவிக்கப்பட்ட தானியங்கள் மீதான விருப்பமும், பயன்பாடும் அதிகரித்துள்ளது,
வரவேற்கத்தக்கது!

தகவல் பரிமாற்றத்தின் தாக்கம் மற்றும் நோய்கள் குறித்த பயம் போன்றவற்றால், எதைச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்பதில், மக்கள் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், மக்கள் குழம்பி போகும் அளவுக்கு, ஏராளமான தகவல்கள், சமூக வலைதளங்களில் பெருகி வருகின்றன.

'வாட்ஸ் ஆப்'பில் வந்தது எனக் கூறி, அதை உண்மை எனக் கருதி, அப்படியே பின்பற்றுபவர்களும் உள்ளனர்; அது தவறு. இது போன்ற அறிவுரைகளை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள்; உங்கள் உடல் கூறும் மொழியை மட்டும் கேளுங்கள். உங்களுக்கு எது சேரும், சேராது என்பதை, உடல் அவ்வப்போது கூறும்; அதை பின்பற்றுங்கள்.நடைபயிற்சி, விளையாட்டு, நீச்சல், யோகா என, ஏதாவது ஒரு உடல் உழைப்பு சார்ந்த பயிற்சியை, உடலுக்கு கொடுத்து, உரம் ஏற்றுங்கள்.

அபிராமி,சமூக ஆர்வலர்

இ - மெயில்

ikshu1000yahoo.co.in
Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

  இப்பவே படிச்சு பத்திர படுத்திக்கோங்க. அமெரிக்காவுல இந்த குப்பை உணவு விற்பனை கூடங்கள் செய்யுற விளம்பர காசுலதான் டீவி பத்திரிக்கை செய்தி தாள் எல்லாம். அந்த நிலை இங்க வந்தா இந்த மாதிரி கட்டுரை எல்லாம் சென்சார் செய்யப்படும்

 • Thillai Kanagaratnam - Vancouver,கனடா

  மிக அருமையான கட்டுரை. இந்த கட்டுரையை தட்கால இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும். பள்ளிகளில் உணவுமுறை பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். சகோதரி அபிராமி அவர்கள் இதுபோன்ற கட்டுரைகள் நிறைய எழுதவேண்டும். தில்லை கனகரத்தினம் Vancouver

 • Kannan Iyer - Bangalore,இந்தியா

  அருமையான கட்டுரை அன்னம் பிரம்மா/கடவுள் என்கிற கருத்தும் அதில் வியாபாரத்திற்காக கலப்படம் செய்யக்கூடாது என்ற தர்மமும் தொலைந்து போய் வெகு நாளாகிறது அதனுடைய விளைவு தான் எங்கும் எதிலும் கலப்படம் இதற்கு மேல் வீர்ய மற்றும் ரசாயன உபயோகத்தினால் சத்தில்லாத உணவு காலத்தின் கொடுமை. இளைஞர்கள் விழிப்படைந்தால் மட்டுமே விடிவு

 • akilan - tamilnadu,இந்தியா

  அபிராமி அக்காவுக்கு வணக்கம். மிகவும் அற்புதமான கட்டுரை. படிக்கும்போதே பழைய நினைவுகள் சிந்தனைகள் மனதிற்குள் ஓடுகின்றன. மீண்டும் திரும்பி செல்ல மாட்டோமா என்ற ஏக்கம். தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி.

 • thyagarajan - chennai,இந்தியா

  மிக அருமையாக உள்ளது என்னை போல் மற்ற இளைஞர்களும் இதை படித்து உணர்ந்து நடப்பது நல்லது. மீண்டும் உங்ககளது சமூக விழிப்புணர்வு கட்டுரைகளை மிக ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement