Advertisement

'டவுட்' தனபாலு

பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான்: கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும், பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் ஏற்ற வகையில், கச்சா எண்ணெய் விலை, நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

டவுட் தனபாலு: அந்தத் துறையின் அமைச்சரா இருந்து கொண்டு, சாமானிய மக்கள் மாதிரி, யாருக்கு நீங்க கோரிக்கை வைக்குறீங்க... இந்த விஷயத்தில், மிதமிஞ்சிய மெத்தனமா இருந்தீங்கன்னா, லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்குத் தான் பாதிப்பு ஏற்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை...!


தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன்: 'ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும், அ.தி.மு.க., அரசை அசைக்க முடியாது' என, முதல்வர் கூறியிருக்கிறார். ஒரு ஸ்டாலினை சட்டசபையில் பேச விடுவதற்கே, அஞ்சி நடுங்கும் நீங்கள், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் என்ன நடக்கும் என்பதை, புரிந்து கொள்ள வேண்டும்.


டவுட் தனபாலு: அமளி, வெளிநடப்பு, மறியல், சட்டை கிழிப்புன்னு, சட்டசபையே ரணகளமா இருக்கு... ஒரு ஸ்டாலினுக்கே இப்படின்னா, ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால், அது பன்மடங்கு பெருகிடும்னு சொல்ல வர்றீங்களா... ஆளுங்கட்சியில், ஆயிரம் பூசல்கள் இருக்கும்போதே, ஒரு எம்.எல்.ஏ.,வை கூட உங்களால, ஈர்க்க முடியலை... இதுல, இந்த வீரவசனம் எல்லாம் மக்களிடம் எடுபடுறது, 'டவுட்' தான்...!


மக்கள் நீதி மையம்தலைவர் கமல்ஹாசன்: மரியாதை நிமித்தமாகவே, ராகுலை சந்தித்தேன். இந்த சந்திப்பின் போது, அரசியல் குறித்தும் பேசினோம். அதேநேரம், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.



டவுட் தனபாலு: குறுகிய கால இடைவெளியில், ராகுலை அடுத்தடுத்து நீங்க சந்தித்து வர்றது, கூட்டணிக்கான அச்சாரம் இல்லாமல் வேறென்ன... தமிழகத்தில், நீண்டகால தோழமை கட்சித் தலைவரான ஸ்டாலின்கூட, ராகுல் விஷயத்தில், இவ்வளவு ஆர்வம் காட்டலையே... இது தானே, 'டவுட்'டை கிளப்பி வருது...!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement