Advertisement

'டவுட்' தனபாலு

தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்: ஆண்டிப்பட்டி தொகுதிக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடத்தாவிட்டால், மக்களை திரட்டி போராடுவேன்.


டவுட் தனபாலு: ஆண்டிப்பட்டி, எம்.எல்.ஏ.,வாக மக்கள் உங்களை தேர்வு செய்தால், கூவத்துார் மற்றும் புதுச்சேரி சொகுசு விடுதிகளில் முகாமிட்டு, உங்க சொந்த அரசியலை கவனிக்குறீங்க... பதவியைப் பறித்தால், அந்த வழக்கு முடிவுக்கு வரும் முன்னரே, இடைத்தேர்தல் நடத்த கோரிக்கை வைக்குறீங்க... 'நீங்க ஓய்வெடுக்க, எதுக்கு மீண்டும் தேர்தல்'னு, மக்கள் எழுப்புற, 'டவுட்' உங்களுக்கு கேட்குதா...!



தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என, தமிழக அரசு கூறியுள்ளது, வெறும் கண்துடைப்பு தான். நிரந்தரமாக மூடவில்லை என்றால், மீண்டும் மக்களின் மிகப் பெரிய போராட்டத்திற்கு, தமிழக அரசே காரணமாகிவிடும்.



டவுட் தனபாலு: பல மாத போராட்டங்களுக்குப் பிறகு, 13 உயிர்களை பலிகொடுத்து, இப்போது தான், துாத்துக்குடியில், அமைதி திரும்பி வருது... அது உங்களுக்குப் பொறுக்கலையா... உங்க அரசியலுக்கு, அப்பாவிகளை உசுப்பேற்றுவது சரியா... விரைவில், தி.மு.க., ஆட்சின்னு முழங்கி வரும் நீங்க, 'ஆவது ஆகட்டும், நாங்க இருக்கோம்; ஆட்சிக்கு வந்ததும், அனைத்தையும் சரி செய்திடலாம்'னு சொல்வது தானே, அழகு... அதைச் சொல்ல ஏன் மனசு வரலை என்பது தான், மக்களின், 'டவுட்!'



இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான தண்ணீரை திறந்து விடுவதாக கர்நாடக அரசு கூறுவது நகைச்சுவையானது.


டவுட் தனபாலு: காலங்காலமாக இதுதானே நடந்து வருது... புதுசா கண்டுபிடிச்ச மாதிரி, குற்றஞ்சாட்டுறீங்களே... 'கர்நாடகாவில் நல்ல மழை பெய்தால், காவிரியில் நீர் திறக்க எந்தப் பிரச்னையுமில்லை'ன்னு, அம்மாநில அரசே வெளிப்படையாகச் சொல்லி வருவது, உங்களுக்குத் தெரியாதோ என்பது தான், மக்களின், 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    முத்தரசன் பஞ்சாலான பந்தால் குமாரசாமியை அடிக்கிறார். குருமாசாமியையும், அவருக்கு பின்பலமாக உள்ள காங்கிரசையும் எதிர்த்து அறிக்கை விடாதது கம்யூனிஸ்டுகளின் அரசியல் நாடகம்தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement