Advertisement

இதய படபடப்பு பிரச்னைக்கு அப்பல்லோவில் நவீன சிகிச்சை

சென்னை:அசாதாரண இதய துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு, தென்மாநில அளவில், முதன் முறையாக, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர், பாலமுருகன், 47. இவருக்கு, ஐந்தாண்டுகளாக, இதய படபடப்பு பிரச்னை இருந்தது.இதயத்தில் படபடப்பு ஏற்படும் சமயத்தில், அவரால் செயல்பட முடியாது. சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து, இதயவியல் நிபுணர், கார்த்திகேசன் கூறியதாவது:அசாதாரண இதய துடிப்பு என்பது, வழக்கத்தை விட குறைவாக அல்லது வேகமாக இதயம் துடிக்கும். இதனால், ரத்த சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல், ரத்தம் உறையக்கூடும்.
உறைந்த ரத்தம், மூளைக்கு சென்றால், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னை ஏற்படும். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, நான்கு பேரில் ஒருவருக்கு, இப்பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த பிரச்னைக்கு, முப்பரிமாண, இதய மேப்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இதயத்தில் எந்த பகுதியில் அதிக துடிப்பு உருவாகிறதோ, அந்த இடத்தில் உள்ள, செல்கள் நீக்கப்படும்.
தற்போது, பாலமுருகனுக்கு, இதயத்தில் பிரச்னை இருக்கும் பகுதியை, மிக துல்லியமாக கண்டறிந்து, அந்த செல்களை நீக்குவதற்காக, செலுத்தப்படும் ஆற்றலை சரியாக நிர்வகிக்கும், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம், தென்மாநில அளவில், முதன்முறையாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement