Advertisement

அரசு சிமென்ட் வினியோகத்தில் தாமதம்... மாதக்கணக்கில் காத்திருக்கும் பயனாளிகள்

அவிநாசி : அவிநாசியில், 'அம்மா' மானிய சிமென்ட் வாங்க, விண்ணப்பித்து, நான்கு மாதங்களாகியும், கிடைக்காததால், கட்டடம் கட்டுவோர் பாதித்துள்ளனர்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கட்டுமான செலவை குறைக்க, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், மானிய விலையில், அம்மா சிமென்ட் விற்கப்படுகிறது. ஒரு மூட்டை, 190 ரூபாய் வீதம், குறைந்தது, 50 முதல், அதிகபட்சம், 100 மூட்டை வரை விற்கப்படுகிறது.
அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட மக்கள், சிவில் சப்ளை மூலம், மானிய சிமென்ட் பெற்று, பயனடைகின்றனர். சிமென்ட் வேண்டி விண்ணப்பிப்போரின் விவரங்கள், 'ஆன்-லைன்' மூலம், பதிவேற்றம் செய்யப்பட்டு, சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பதிவு மூப்பு அடிப்படையில், பயனாளிகளுக்கு சிமென்ட் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 'ஆன் லைனில்' விண்ணப்பிக்கும் போதே, சிமென்ட்டுக்குரிய தொகையையும், மக்கள், வங்கி வரைவோலையாக செலுத்தி விடுகின்றனர்.
அதன்படி, அவிநாசி நுகர்பொருள் வாணிப கழகத்தில், கடந்த, பிப்., மாதம் விண்ணப்பித்தவர்களுக்கு கூட, இதுவரை சிமென்ட் கிடைக்கவில்லை.
சிமென்ட் கேட்டு விண்ணப்பித்த சிலர் கூறுகையில், 'பெரும்பாலும், இடிந்த வீடுகளை பராமரிக்க, மராமத்து பணிகளை செய்வதற்காக தான் மானிய சிமென்ட்டை மக்கள் வாங்குகின்றனர். ஆனால், மாதக்கணக்கில், காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், ஒழுகும் கூரைகளை சரி செய்வது உட்பட பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாமல். சமீபத்தில், பெய்த மழையில், சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது,' என்றனர்.
அவிநாசி அருகேயுள்ள அணைப்புதுார் அலுவலகத்தில், 45 பேர், கடந்த நான்கு மாதமாக காத்திருப்போர் பட்டி யலில் உள்ளனர். சிமென்ட் கேட்டு, செலுத்திய தொகை, 80 லட்சம் ரூபாய், முடங்கிக் கிடக்கிறது.
இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் முருகேசனிடம் கேட்ட போது, 'பதிவு மூப்பு அடிப்படையில், ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவிநாசியில், சிமென்ட் சப்ளையில் தாமதம் இருப்பதாக கூறப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, சமாளித்தார்.

சபாநாயகர் கவனத்துக்கு...
தமிழகத்திலுள்ள சில முன்னணி நிறுவனங்கள், அரசுக்கு சிமென்ட் சப்ளை செய்கின்றன. இதில், அவிநாசி, காங்கயம், அங்கேரிபாளையம் பகுதிகளில் உள்ள குடோனுக்கு, ஒரு நிறுவனம், சப்ளை செய்கிறது. 'மற்ற நிறுவனங்களை காட்டிலும், இந்நிறுவனம், சிமென்ட் சப்ளை செய்வதில், அதிக காலம் தாழ்த்துகிறது' என, சம்மந்தப்பட்ட துறையினரே கூறுகின்றனர்.இதுகுறித்து, அரசின் கவனத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும், பெரிதாக நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இந்நிலையில், இன்று அவிநாசியில் நடக்கவுள்ள அரசு விழாவில் பங்கேற்கவுள்ள, தொகுதி எம்.எல்.ஏ., சபாநாயகர் தனபால், சிமென்ட் தட்டுப்பாடு விவகாரத்தில், கவனம் செலுத்த வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement