Advertisement

டீ கடை பெஞ்ச்

அதிகாரிகள் பனிப்போரால் தவிக்கும் கான்ட்ராக்டர்!


''அரசு நிலத்தை ஆக்கிரமிச்சிண்டு, அதிகாரிகளுக்கு, 'கப்பம்' கட்டுனா சரியா போச்சா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.


''எந்த ஊரு வில்லங்கமுங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.


''சென்னை பக்கத்துல இருக்குற புழல் ஏரியை ஒட்டி, பொதுப்பணித் துறைக்கு சொந்தமா, பல ஏக்கர் நிலங்கள் இருக்கு... எல்லாமேஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தான் ஓய்... ''இதுல, 15 ஏக்கருக்கு மேல தனியார் ஆக்கிரமிப்புல இருக்கு... உதாரணமா, தண்டல் கழனி ஏரியாவுல, 2 ஏக்கர் நிலத்தை, தனியார் அரிசி ஆலை, காம்பவுண்ட் கட்டி ஆக்கிரமிச்சிருக்கு... இதை கண்டுக்காம இருக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு, 'கப்பம்' கட்டிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''ரமேஷ், நாளைக்கு பார்க்கலாம்...'' என, நண்பருக்கு கையசைத்தபடி வந்த அன்வர் பாய், ''பெண் அதிகாரிக்கு சென்னையில, 'டோஸ்' விழுந்திருக்கு பா...'' என்றார்.


''எதுக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.


''பெரம்பலுார் மாவட்டத்துல, ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்னு, 2012ம் வருஷமே முதல்வரா இருந்த ஜெயலலிதா அறிவிச்சாங்க... இதுக்காக, பாடாலுார் கிராமத்துல, 100 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்துனாங்க பா... ''இந்த ஏரியாவுல ஜவுளி பூங்கா வந்தா, அந்த பகுதியில இருக்குற கல் குவாரிகளை மூட வேண்டி வரும்... அதனால, குவாரி உரிமையாளர்கள் எல்லாம், ஒரு பெண் அதிகாரியை, 'கவனிச்சு' ஜவுளி பூங்கா பணியை தடுத்துட்டாங்க பா...


''பெண் அதிகாரியும், ஜவுளி பூங்கா சம்பந்தமான கோப்புகளை, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாம கிடப்புல போட்டாங்க... இது சம்பந்தமா, அரசுக்கு புகார்கள் போனது பா... சென்னையில இருக்குற தலைமை பெண் அதிகாரி, மாவட்ட பெண் அதிகாரியை கூப்பிட்டு, கடுமையா, 'டோஸ்' விட்டிருக்காங்க...


''இப்ப, ஜவுளி பூங்கா அமைக்குறதுக்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டிருக்காங்க... கல் குவாரிகளை மூடவும் உத்தரவு போட்டுட்டாங்க பா...'' எனக் கூறிய அன்வர்பாய், அவ்வழியே சென்ற பெண்ணை பார்த்து, ''யாரு... கிரிஜாவா... பால் வாங்க போறீங்களா... சாந்தா வரலீயா...'' என்றார்.


''பணம் வராம, கான்ட்ராக்டர் பரிதவிக்குறாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.


''எந்த துறையில வே...'' என்றார் அண்ணாச்சி.


''சேலம் மாவட்டம், மேட்டூர்ல இருக்குற மீன் விதை பண்ணையில, 1.68 கோடி ரூபாய் செலவுல, பண்ணை குட்டை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுற பணிகள் நடந்துச்சுங்க... ''இதுக்கான பில் தொகையை, பொதுப்பணித் துறை கணக்குல போடாம, மீன்வளத் துறை கணக்குல வச்சிருக்காங்க...


''அதோட, 'கட்டுமான செலவுக்குரிய ரசீதை, எங்களிடம் குடுங்க... கான்ட்ராக்டருக்கு நாங்க பணம் குடுத்துடுறோம்'னும் கேட்டிருக்காங்க... ''அதுக்கு, 'ஒப்பந்த தொகையை எங்க கணக்குல கட்டிடுங்க... நாங்க குடுத்துக்குறோம்... ரசீது எல்லாம் உங்களுக்கு அனுப்ப முடியாது'ன்னு பொதுப்பணித் துறையினர் சொல்லிட்டாங்க...


''இப்படி, ரெண்டு துறை அதிகாரிகள் இடையே நடக்குற பனிப்போரால, மூணு மாசமாகியும் பணத்தை வாங்க முடியாம, கான்ட்ராக்டர் பரிதவிக்குறாருங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.


நாயரிடம் விடைபெற்று, நண்பர்கள் கிளம்பினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement