Advertisement

கலை வடிவில் போராடவே விரும்புகிறேன் - கருத்தாய் சொல்கிறார் கார்த்திக் சுப்புராஜ்

கிரிக்கெட் போட்டியை நிறுத்தச் சொல்லி, சினிமா வெளியீடு வேண்டாமென்று, காவேரி மேலாண்மை வாரியம் வேண்டுமென்று, ஸ்டெர்லைட், நியூட்ரினோ வேண்டாமென்று... இது போராட்டங்களின் காலம். மற்றவர்களின் போராட்டங்களை விட, கலைத்துறையில் இருப்போரின் கருத்து என்ன என்று கேட்பதில், தமிழ்ச்சமூகம் ஆர்வமாய் இருக்கிறது. அதில், இளைய தலைமுறையின் அணுகுமுறை இன்னும் வித்தியாசமாய் இருக்கிறது.



அந்த வரிசையில், பீட்சா, ஜிகர்தண்டா என 'சுறுசுறு' படங்களைத் தந்து, சூப்பர் ஸ்டாரையே இயக்கும் வாய்ப்பு பெற்ற கார்த்திக் சுப்புராஜின் குரல், கவனிக்கத்தக்கதாயுள்ளது. திரைத்துறையின், 40 நாள் போராட்டத்திற்கு பிறகு கடந்த, 20ம் தேதி வெளியான முதல் தமிழ் படம், 'மெர்குரி'. பிரபுதேவா நடித்து வெளியான இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தின் 'ப்ரோமா'வுக்காக கோவை வந்த கார்த்திக் சுப்புராஜ், நம்மிடம் சொன்னது...


''முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் வெளியாகியுள்ள வசனமே இல்லாத படம், மெர்க்குரி. பிற மொழிகளில் பத்து நாட்களுக்கு முன்பாகவே திரைக்கு வந்துவிட்டது. தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக் காரணமாக தமிழில் ரிலீஸ் செய்ய இயலவில்லை. மொழியில்லாத 'மெர்க்குரி'யையும் வெளியிட வேண்டுகோள் விடுத்தோம். தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் அளித்த விளக்கம் நியாயமானதாக இருந்ததால், நாங்களும் உடன்பட்டோம்.


''தற்போது வெளியாகி மக்கள் தரப்பில், நல்ல விமர்சனங்கள் வருவதால் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தைப் பார்த்து விட்டு, ரஜினி சார், எங்களை வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். இயற்கை வளங்களை சுரண்டும் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்டூழியம், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை இந்த படம் பேசுகிறது.


''தற்போது நியூட்ரினோ, மீத்தேன் உள்ளிட்ட, 'கார்ப்பரேட் கிரைம்'களுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாகியுள்ள வேளையில் இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், கலை வடிவிலான எனது போராட்டமாக இதை வைத்துக்கொள்ளலாம். சமூகம் சார்ந்த பொறுப்புணர்வு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும் என்பதை இதில் வலியுறுத்தியுள்ளேன்.


காவிரி மேலாண்மை வாரியம், தமிழக மக்களின் நியாயமான கோரிக்கை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தான் இறுதியான முடிவை எடுக்க வேண்டும்,'' என்றார் கார்த்திக் சுப்புராஜ்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement