Advertisement

வாழ்க்கை ஒரு வசந்த கீதம்

வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால் உன்னை நேசி! சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை நேசி!”என்ற வரிகளில் ஒளிந்திருக்கும்
அர்த்தம் உண்மையாக நேசிப்பது தான். நாம் உண்மையை இனிப்பானது, கசப்பானது என இரண்டு வகையாக பிரித்தால் இனிப்பான உண்மையை வெளிப்படையாக கூறிவிடுவோம். ஆனால் கசப்பான உண்மையை நாம் ஏற்க மாட்டோம் அல்லது அதை மறைக்க முயர்சிப்போம். நமது மகன் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்ததை வெளிப்படையாக கூறும் நாம், அவன் புகை பிடித்தான் என்று யாராவது கூறினால் அவரிடமே சண்டையிடுவோம்.
இங்கு கசப்பான உண்மையை நாம் ஏற்க மறுப்பதே காரணம். தலைக்கு டை அடிப்பது, ஹை ஹீல்ஸ் அணிவது, சிகப்பழகு கிரீம் உபயோகிப்பது எல்லாமே நாம் உண்மையை மறைக்கும் ஒரு முயற்சி தான். இவ்வாறு நாம் உண்மையை உணராமல் போகும்போது பொய்மைக்கு அருகில் செல்கிறோம் என்றே அர்த்தமாகிறது.

கணவரின் உண்மை : எல்லா பெண்களும் தங்களின் பிம்பமாகவே கணவரை காணும் போது ஆண்கள் அப்படி இருப்பதில்லை. கல்யாணமான புதிதில் நெருக்கமாக இருந்த கணவர் போகப்போக தன்னிடம் மனம்விட்டே பேசுவதில்லை என்ற கவலை பலருக்கும் உண்டு. காரணம் ஆரம்பத்தில் அவர் உங்களோடு பகிர்ந்த விஷயங்களை மகிழ்ச்சியாகவோ, அமைதியாகவோ கேட்ட நீங்கள் பின் அவரது தவறுகளை நேரிடையாக சுட்டிக்காட்டியிருப்பீர்கள் அல்லது கோபப்பட்டு இருப்பீர்கள். புகழை மட்டுமே விரும்பும் மனித மனம் எப்படி தவறுகளை உடனே ஏற்றுக்கொள்ளும். விளைவு…உண்மைக்கு தண்டனை கிடைக்கும் பொழுது பொய்மை பிறக்கிறது.
குழந்தைகளாக இருக்கும் போது நம்மை உற்ற தோழியாக கருதும் நம் பிள்ளைகள் டீன் ஏஜ் பருவத்தில் அவர்களுக்கான நண்பர்களை தேர்வு செய்துகொள்கிறார்கள். இங்கும் நாம் அவர்களிடம் குற்றம் கண்டறிந்ததன் விளைவு தான் இதற்கு காரணம். அதற்காக அவர்களை கண்டிக்காமலே வளர்க்க முடியுமா என்று என்னிடமும் கோபப்படாதீர். எதை எப்படி கூறினால் ஒருவரை வழிக்கு கொண்டுவரலாம் என்ற வித்தை அறிந்தவர்கள்தானே நாம்.

உண்மை உணருங்கள் : உண்மை எப்படி பட்டதாக இருப்பினும் அதை ஏற்கும் மன பக்குவம் வந்துவிட்டால் வாழ்வில் கவலைக்கே இடமில்லாமல் போய்
விடும். கசப்பான உண்மை ஒரு புறம் என்றால். அதை மறைக்கும் போது நம்மில் கோபம் இரட்டிப்பாகிறது. குழந்தைகள் நம்மிடம் மறைத்த உண்மைகள்தான் அதிக தவறுக்கு வழிவகுக்கின்றன. ஆரம்பத்தில் குழந்தை ஒரு பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால்
முதலில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். அதைவிடுத்து 'அதிக பணம் கட்டி படிக்கவச்சு என்ன பிரயோஜனம் எதுக்கும் லாயக்கு இல்லை' என்று, நீங்கள் புலம்பினால் உங்களிடம் மறைக்க முயலும். உங்கள் குழந்தை பின் எதையும் சொல்லாமலே விட்டுவிடும். இதையே கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள். மதிப்பெண் குறைய என்ன காரணம் பாடம் புரிய
வில்லையா, பாடம் நடத்துவது புரியவில்லையா, மனப்பாடம் ஆகவில்லையா, இப்படி பலவிதமாக ஆராயும்போது உண்மையான காரணத்தை நம்மால் கண்டறிந்து தீர்வு காண முடியும்.
இதேபோல் உங்கள் கணவர் ஆபிசில் எந்த பெண்ணிடமோ நெருங்கி பழகுகிறார் என்ற செய்தி உங்கள் காதுக்கு வரும்போது கண்ணகியாக கையில் சிலம்பை எடுக்காமல் நிதானமாக உண்மையை உணருங்கள். அந்த பெண் யார், எப்படி பட்டவர், அவருக்கும் உங்கள் கணவருக்கும் வேலையில் உள்ள முக்கியத்துவம் என்ன, என்று பலவிதங்களில் ஆராய்ந்து அறியுங்கள். அவரது தோழியை உங்கள் தோழியாக்கி கொள்ளுங்கள். முடியாவிட்டால் உங்கள் கணவரின்
நெருங்கிய தோழியாக நீங்கள் மாறுங்கள். ஏன் எனில் ஒரு மனைவியாக உங்கள் கணவரிடம் எந்த விஷயத்தையும் வாங்க முடியாது. நீங்கள் தோழியானால் முழுவதும் அவரை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் எதையும் மறைக்காமல் சமர்த்தாக உங்களிடம் எல்லாவற்றையும் ஒப்பிப்பார்.

உண்மைக்கு பாராட்டு : உங்களிடம் பகிரும் கசப்பான உண்மையை முதலில் நீங்கள் ஏற்க பழகுங்கள். அதை உங்களிடம் பகிர்ந்ததற்காக அவரை பாராட்டுங்கள். இது ஏற்கனவே தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வில் இருப்பவருக்கு சற்றே மன நிம்மதி தரும். பின், சரியான நேரம் பார்த்து அவரது தவறுகளிலிருந்து விடுபட அறிவுரை கூறுங்கள். இவ்வாறு நாம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அவர்களை வழி நடத்தும்போது நாமே அவர்களின் மன சாட்சியாக மாறிப்போவோம். அவர்களும் நம்மிடம் உண்மையை மறைக்க பொய் காரணங்களை தேடிக்
கொண்டிருக்க மாட்டார்கள்.உண்மையை உணர்ந்துவிட்டால் நமது பலம் பலவீனம் அனைத்தை
யும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். இது வருங்கால திட்டமிடலுக்கு வழிவகுக்கும். மேலும் நம்மை எவராலும் ஏமாற்றவே முடியாது என்பதும் ஒரு பலம் அல்லவா. அதுமட்டுமா நாம் பிறரின் பாராட்டையும் விமர்சனத்தையும் ஒன்று போல ஏற்றுக் கொள்வோம். மனம் சஞ்சலமில்லா நீரோடையாக போகும். எதையும் யாருக்காகவும் மறைக்க வேண்டியது இருக்காது வாழ்க்கையே ஒரு வசந்தகீதமாகிப் போகும்.

- ச. மதிப்பிரியா
முதுகலை ஆசிரியர்
சௌராஷ்ட்ரா ஆண்கள்
மேல் நிலைப்பள்ளி, மதுரை
mathipriya.sandeepgmail.com
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement