Advertisement

கோலிவுட் கதவில் 'டூ-லெட்' விருது!

'தமிழ் சினிமா எடுக்குறதுக்கு கேமரா தேவையில்லை, சவுண்ட் ரிக்கார்டர் போதும் என்று கேலி பேசி வந்த வெளிநாட்டினரின் வாயை அடைத்து, நம்மைப்பற்றியும் பெருமை பேச வைத்திருக்கிறது டூ-லெட்' என்று நெகிழ்வுடன் கூறுகிறார் ஒளிப்பதிவாளர். சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் செழியன்.

* அந்த நாள் ஞாபகங்கள்...
பிறந்தது, வளர்ந்தது சிவகங்கை. அப்பாவின் சினிமா ரசனையும், அம்மாவின் வாசிப்புத் திறனும் எனக்குள் எனக்கே தெரியாமல் ஒரு கலைஞனை உருவாக்கின. இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தேன். சமூக நாடகங்கள், கையெழுத்துப் பத்திரிகை என அந்த நாட்கள் கழிந்தன. பின் 1993ல் திரைப்பட இயக்குனராகும் ஆசையில் சென்னைக்கு பயணமானேன்.அப்புறம் வழக்கம் போல சென்னை 'ஒரு வசதியான சிறைச்சாலை' என்று உணரும் நிலை. பின், இயக்குனர் ருத்ரைய்யா தான், 'நீ முதல்ல சினிமாட்டோகிராபி கத்துக்கோ, அப்ப தான் காட்சி நுணுக்கங்களை புரிஞ்சுக்க முடியும்'னு சொன்னார். அதுக்காக, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கிட்ட உதவியாளரா சேர்ந்து சில படங்கள் வேலை பார்த்தேன்.


* இனி ஒளிப்பதிவாளர் செழியனா பேசுங்க...
நல்ல ஒளிப்பதிவாளன் பேசக்கூடாது, காட்டணும். கல்லுாரி, தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என 9 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளரா வேலை பார்த்துருக்கேன். உலக சினிமா குறித்து சில நுால்களும் எழுதிருக்கேன்.


* அப்போ உங்களுக்குள்ள இருந்த இயக்குனர்?
அவன் தாங்க இவ்வளவு நாளா எனக்குள்ள இருந்த ஒளிப்பதிவாளனை இயக்கிட்டு இருந்தான். இப்போ 'டூ-லெட்'னு ஒரு படத்தை இயக்கி தேசிய விருதும் வாங்கியிருக்கான்.


* டூ-லெட் பற்றி சொல்லுங்கள்...
2007ல் சென்னையில நான் வீடு தேடி அலைஞ்ச அனுபவங்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. அதை வச்சு ஒரு கதை எழுதினேன். பல பேர்கிட்ட அந்த கதையை சொன்னேன். யாரும் தயாரிக்க முன்வரவில்லை. அப்புறம் என் மனைவி பிரேமா தான், நாமளே தயாரிக்கலாம் என
எனக்கு ஊக்கம் கொடுத்தாங்க.


* எவ்ளோ பட்ஜெட்?
எங்க உழைப்பை விட பெரிசா எந்த பட்ஜெட்டும் இருக்காதுன்னு நினைக்கிறேன். அந்த அளவுக்கு, வீட்டு செலவை கூட சிக்கனம் பண்ணி உழைச்சுருக்கோம்.


* உழைப்பிற்கேற்ற பலன் இருந்ததா?
2017 நவம்பர் கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழா. உலகம் முழுவதும் இருந்து 300 படங்கள்
பங்கேற்றன. அதில் சிறந்த படமாக 'டூ-லெட்' அறிவிக்கப்பட்டது. என் மனைவி, ஆனந்தக் கண்ணீரோட மேடைக்கு நடந்து வந்ததை நினைக்கும்போது, அவ்வளவு கஷ்டமும் எங்க போச்சுன்னே தெரியலங்க. இப்போ 65வது தேசிய விருது பட்டியலிலும் சிறந்த படமாக 'டூ-லெட்'. சொல்ல வார்த்தையில்லை.


* சரி... டூ-லெட் எங்களுக்கு என்ன தரும்? நாங்க எப்போ பார்க்கிறது.
ஈரான் இயக்குனர் அப்பாஸ் சொல்வாரு, 'ஒரு படம் திரையில் பாக்கும்போது எவ்வளவு நம்ப முடியுதோ அவ்வளவு துாரம் அது நல்ல படம்'. அந்த வகையில் 'டூ-லெட்' நுாறு சதவிகிதம் நம்பும்படியா இருக்கும். ஒரு வாழ்க்கையை இவ்வளவு பக்கத்துல பார்க்க முடியுமானு உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்க வைக்கும். இரண்டு மாதத்தில் தியேட்டருக்கு வரும்.
அது மட்டுமில்லாம, 'ஒரு நல்ல படம், முடியும் போது தான் ஆரம்பிக்குதுனு சொல்லுவாங்க'. அப்படி படம் பார்த்த பிறகு உங்களுக்குள்ள ஓடப்போற கதையில தான் டூ-லெட்டின் வெற்றியே இருக்கு.


* படத்துல பெரிய நடிகர்கள் யாரும் இல்லையா?
உணர்ச்சிகளை கடத்துவதற்கான கருவி தானே நடிகர்கள்... இதுல என்ன பெரிசு, சிறுசு...? இந்த
படம் நல்ல நடிகர்களையும் அடையாளம் காட்டும்.


* படம் பார்த்த பிரபலங்கள்...
பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன். 30 வருஷமா தமிழ் படமே பாக்குறது இல்லைனு சொன்னவர். அவர்கிட்ட படம் காமிச்சோம். 'எக்ஸலண்ட் மூவி'னு பாராட்டினார். 'ரொம்ப நேர்மையா படம் பண்ணி இருக்கீங்க'னு நெகிழ்ந்தார்.


* ஆமா, படத்துல இசையமைப்பாளரே இல்லையாமே...
ஆமாங்க. ஒரு திரைப்பட விழாவில் படம் பாத்து முடிச்ச அப்புறம், எங்களுக்கு வாழத்துச்
சொன்னவங்கட்ட படத்துல மியூசிக் சேர்க்கலாமானு கேட்டோம். அவங்க ஷாக் ஆகி, 'என்ன படத்துல மியூசிக்கே இல்லையா?' அப்டினு கேட்டாங்க.
அந்த அளவுக்கு சவுண்ட் எபெக்ட்ஸ் மட்டும் வச்சு ரொம்ப நேர்த்தியா பண்ணிருக்கோம்.
இசையை விட மவுனத்திற்கு பலம் அதிகம்னு தோணுச்சு. அவ்வளவு தான்.

மேலும் பேச: chezhian6gmail.com
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement