Advertisement

உப்பாறு அணையில் புனரமைப்பு பணி ரூ.7.85 கோடி:இனி, தடையின்றி தண்ணீர் தேங்கும்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உப்பாறு அணையில்,புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, 7.85 கோடி ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. திருப்பூர், பி.ஏ.பி., திட்டத்தின் உப திட்டமாக, தாராபுரம் கெத்தல்ரேவ் மற்றும் வேலாயுதம்பாளையம் கிராமங்களின் குறுக்கே, உப்பாறு அணை அமைந்துள்ளது.
அணை அமைக்கப்பட்டு, 50 ஆண்டுகளான நிலையில், மண் அணை, மேற்புர தார்ரோடு, அணையின் கீழ்புற வடிநீர் கால்வாய், கீழ்புற சாய்தள வடிநீர் கால்வாய் போன்றவை சேதமாகியுள்ளது. இந்நிலையில், அணையை புனரமைக்க ஏதுவாக, 7.85 கோடி ரூபாய் ஒதுக்கப்
பட்டுள்ளது.

இந்நிலையில், புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அணையின் இருபுறமும், 1,600 மீட்டர் நீளத்துக்கு புனரமைக்கப்படுகிறது. அணையின் இடது புறத்தில் வெள்ள பாதுகாப்பு கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டுதல், மண் அணையின் மேற்புறம், கீழ்புறமும், பக்கவாட்டு பாதுகாப்பு சுவர்கள், 1,900 மீட்டர் நீளத்துக்கு புனரமைப்பு செய்யப்படுகிறது.

மண் அணையின் மேற்புறமும், அணுகுசாலைகளும், 2,400 மீட்டர் நீளத்துக்கு தார்ரோடு அமைக்கப்பட உள்ளது. அணையின் பாதுகாப்புக்காக, 600 மீட்டர் நீளத்துக்கு கம்பிவேலி அமைத்தல், மழை மானி, தட்பவெப்ப நிலை அறியும் கருவி, மின் விளக்கு போன்றவை அமைக்கப்பட உள்ளன.
கலெக்டர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த விழாவில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், பணிகளை துவக்கி வைத்தார். விழாவில்,
எம்.பி., செல்வக்குமார் சின்னையன், எம்.எல்.ஏ.,க்கள் தனியரசு, காளிமுத்து, டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உப்பாறு பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக, உப்பாறு அணை எவ்விதமான பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் மோசமாக இருந்தது.
இதனால், பல மீட்டர் துாரத்துக்கு வாய்க்கால் சேதமடைந்தது.

இதனால், சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழை நீர், முறையாக அணைக்கு வருவதில் தடை ஏற்பட்டது. இப்போது, அணைக்கான பல கட்டமைப்புகளை ஏற்படுத்த, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

கால்வாய் சீரமைப்பு, அணுகு சாலை அமைப்பு உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேறும் போது, உப்பாறு அணை நல்ல நிலைக்கு வரும். அதேபோல், மழை நீரும் அதிகளவில் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. எனவே, பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement