Advertisement

குடிநீருக்கு போர்வெல் தண்ணீர் வினியோகம்... வேதனை!:ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

உடுமலை:குடிமங்கலத்தில் பெரும்பாலான கிராமங்களில், குடிநீருக்கு போர்வெல் தண்ணீர் வினியோகம் செய்வதாக, கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அம்பராம்பளையம் மற்றும் தாமரைப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
கூட்டுக்குடிநீர் திட்டங்களின் கடைக்கோடியாக இருந்ததால், ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு காணப்பட்டது. இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்கள் பயன்படும் வகையில், திருமூர்த்தியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். அதன்படி, குடிமங்கலம் ஒன்றியத்தின், 23 ஊராட்சிகள் மற்றும் உடுமலை ஒன்றியத்தின், 3 ஊராட்சிகள் பயன்படும் வகையில், குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்தாண்டு செயல்பாட்டுக்கு வந்தது.
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு, ஊராட்சி நிர்வாகம் மூலம் பொதுக்குழாய்களுக்கும், வீடுகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. திருமூர்த்திக்கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்காது என, காத்திருந்த மக்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.போர்வெல் தண்ணீருடன் கூட்டுக்குடிநீர் திட்டநீரையும் கலந்து குடிநீராக வினியோகிக்கப்பட்டு வந்தது. தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்களும் சமாளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக போர்வெல் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விலைக்கு குடிநீர் வாங்கும் நிலை
சில கிராமங்களில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையே தண்ணீர் வினியோகம் இருந்து வருவதாகவும், இதனால் மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்ததண்ணீரை, குடிக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். அந்தந்த ஊராட்சிகளுக்கு தினமும் வழங்க வேண்டிய குடிநீர், போதுமான அளவு வழங்கப்பட்டு வருவதாகவும், ஊராட்சி நிர்வாகத்தின் வினியோகத்தில் தான் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.இப்பிரச்னைக்கு ஒன்றிய நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement