Advertisement

'டவுட்' தனபாலு

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: தொடர் போராட்டங்கள் காரணமாக, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளதாக, தமிழிசை கூறுவது அபத்தமானது. மாநிலம் குறித்து, தவறான கருத்தை, அவர் கூறக் கூடாது.


டவுட் தனபாலு: 'போராட்டங்களாலும், வன்முறை சம்பவங்களாலும், கடையடைப்புகளாலும், முதலீடுகள் வருவது தடைபடாது... கமிஷன்களாலும், ஆட்சியாளர்களின் இழுத்தடிப்பாலும் மட்டும் தான், பாதிக்கும்'னு சொல்ல வர்றீங்களா... முதலீட்டாளர்களுக்கு, தன் அலுவலகத்தின் கதவு திறந்தே இருக்கும்னு, கவர்னர் சொல்லி இருந்தாரே, அதனால தான், இந்த, 'டவுட்!'


----


துணை முதல்வர் பன்னீர்செல்வம்: காவிரி பிரச்னையில், 2007ல் இறுதி தீர்ப்பு வந்த போது, 24 மணி நேரத்தில், மத்தியில் இருந்த, காங்., -- தி.மு.க., கூட்டணி அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க முடியும். அமைக்காமல், வரலாற்று பிழை செய்து, தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது.


டவுட் தனபாலு: பத்தாண்டுக்கு முந்தைய விஷயங்களையே பேசிட்டு இருக்கீங்களே... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கணும்னு, உச்ச நீதிமன்றம் முன்னர் கெடு விதித்தபோது, 'அதெல்லாம், பார்லிமென்டின் பணி... நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது'ன்னு, மத்திய பா.ஜ., அரசு சொன்னதே... இப்பவும், 'ஸ்கீம்' என்றால், 'காவிரி மேலாண்மை வாரியம் மட்டும்தானா'ன்னு, 'டவுட்' எழுப்பி இருக்கே... இதுக்கெல்லாம் என்ன பெயர்...!


---


தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: ராணுவ கண்காட்சியை பார்க்க, லட்சக்கணக்கான மக்கள் சென்றுள்ளனர். போர்க் கப்பலை பார்க்க, முதல் நாளில் மட்டும், 25 ஆயிரம் பேர் வந்தனர். இது, பிரதமர் பின்னால், தமிழக மக்கள் உள்ளதை காட்டுகிறது.


டவுட் தனபாலு: மோடியின் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தால், நீங்க சொல்ற, 'லாஜிக்' சரி... நெடுங்காலமா, வருஷத்துல ரெண்டு மாசம் தீவுத்திடலில் நடக்குற பொருட்காட்சிக்கும், மக்கள் கூட்டம் கூட்டமா வர்றாங்க... இது, தமிழக அரசின் பின்னால், மக்கள் இருப்பதை காட்டுவதா சொன்னால் ஏற்பீங்களா என்ற, 'டவுட்'டை மட்டும் விளக்குங்க போதும்...!
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement