Advertisement

நான் ஒரு பார்வையில்லா 'ராஜா'...


நான் ஒரு பார்வையில்லா 'ராஜா'...

வெயில் வேகமெடுத்த ஒரு பகல் பொழுது

மதுரை-நத்தம் ரோட்டில் பாண்டியன் ஒட்டல் பின்புறம் உள்ள ரோட்டோர இளநீர் கடையை நோக்கி பாதம் சென்றது.

தென்னை ஒலையால் வேயப்பட்ட குடிசையில் அங்குமிங்குமாக இளநீர்கள் குவியல் குவியலாக காணப்பட்டது.அந்த இளநீர் குவியல்களுக்கு நடுவே உட்கார்ந்திருக்கிறார் நமது கட்டுரையின் நாயகன் ராஜா

உழைத்து உழைத்து கருத்துப்போன உடம்பு, பட்டன் இல்லாத பழைய சட்டை, இளநீர் கறைபடிந்த லுங்கி, எப்போதோ வாரிய தலை ஆனால் இது எல்லாவற்றையும் மறக்க செய்யும் வெள்ளந்தியான சிரிப்பு,இதுதான் பார்வை இல்லாத இளநீர் வியாபாரி ராஜாவின் அடையாளங்கள்.

ரேடியோவை திருகி பழைய பாட்டை ரசித்து கேட்டுக்கொண்டிருந்தவர் கடையின் வாசலில் நிழலாடுவதை உணர்ந்து பாட்டை நிறுத்திவிட்டு 'வாங்க இளநீர் சாப்பிடுங்க' என்று அன்போடு சொல்கிறார்.

நாம் யார் என்று அறிமுகம் செய்து கொண்டதும், ''ஓ..மணிகண்டன் சார் அனுப்பிச்சாரு ரொம்ப சந்தோஷம், நம் கடை இளநீரை சாப்பிட்டுவிட்டுதான் பேசணும்'' என்றவர் தட்டிப்பார்த்து ஒரு இளநீரை தேர்வு செய்கிறார் பின் அரிவாளை எடுத்து ஒரு துளி கூட சிந்தாமல் மிக லாவகமாக நிமிட நேரத்தில் வெட்டி நம் முன் நீட்டுகிறார், இளநீர் அவரது அன்பைப் போலவே அமிர்தமாக இனித்தது.

62 வயதாகும் ராஜாவிற்கு தெரிந்தது எல்லாம் இளநீர் விற்பது மட்டுமே.சிறு வயது முதலே மாலைக்கண் நோய் இருந்தது ஒன்பதாவது படிக்கும் போது பார்வையில் பிரச்னை அதிகரிக்கவே படிப்பை விட்டார் பிறகு இளநீர் வியாபாரத்தில் ஈடுபட்டார்.

இளநீர் வியாபாரத்தில் இவர் முன்னேற இவரது பார்வைத்திறனோ மிகவும் பின்னேறியது கடந்த பத்து வருடங்களுக்கு முன் சுத்தமாக பார்வை இல்லாமல் போனது.

பார்வை போனாலும் பதறாமல் தனது கைகளையே கண்களாக்கிக் கொண்டு முழு மூச்சாக வியாபாரத்தில் இறங்கிவிட்டார்.பார்வை இல்லாதவர் என்ற பரிதாபம் காட்டுவது இவருக்கு சுத்தமாக பிடிக்காது. உடல் வேகும் வரை மத்தவங்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது அதற்காக சாகும் வரை உழைக்கணும் என்று சொல்லும் இவர் கடந்த பல வருடமாக இதே இடத்தில்தான் இளநீர் கடை வைத்துள்ளார்.

நாகர்கோவில்,தேனி பகுதிகளில் இருந்து வரும் இளநீரை தரவாரியாக பிரித்து வைத்து விற்பனை செய்கிறார் இவருக்கு என்று வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உண்டு விடிந்ததில் இருந்து இருட்டும் வரை இவருக்கு இந்த கடைதான் உலகம்.

இளநீர் இவர் கையில் பம்பரம் போல சுழல்கிறது பார்வை இல்லாதவர் என்றாலும் இவரது அரிவாள் வெட்டு இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட பிசகியது இல்லை சிறு காயம் கூட ஏற்பட்டது இல்லை வாடிக்கையாளர்தரும் பணத்தை தொட்டுப்பார்த்தே அதன் மதிப்பை உணர்ந்து சரியாக மீதம் சில்லரை கொடுத்துவிடுவார் அதே போல சிலர் வெறும் தண்ணீர் மட்டும் கேட்பார் சிலர் பதமாக இளநீயுடன் சேர்த்து கேட்பர் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் இளநீயை தட்டிப்பார்த்தே எடுத்துவிடுவார் தனக்கு வியபாரம் நடக்கிறதோ இல்லையோ தன்னை நமபி சரக்கு போட்டவர்களுக்கு மிகச்சரியாக பணத்தை செட்டில் செய்துவிடுவார் வாழ்க்கைனா நம்பிக்கையும் நாணயமும்தானுங்களே முக்கியம் என்கிறார் சிரிப்புடன்.

இருட்டிய பிறகு ஊமச்சிகுளம் அப்பளக்காட்டில் உள்ள இவரது வீட்டிற்கு சென்றுவிடுவார் மனைவி குழந்தைகள் உண்டு என் எளிய குடும்பத்தை நடத்துவதற்கான வருமானம் வருகிறது இருப்பதைக் கொண்டு யாரையும் தொல்லை தராமல் வாழ்ந்து வருகிறோம்.

மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் இளநீர் வியாபாரம் சரியாக இருக்காது அப்போது மட்டும் கொஞ்சம் சிரமப்படுவேன் ஆனாலும் கடன் வாங்கமாட்டேன் கவலைப்படமாட்டேன் கடைக்கு வந்துருவேன் யாராச்சும் படியளப்பார்கள் என்கிறார் அவருக்கே உண்டான சிரிப்புடன்.

இவருக்கு என்று கொடுக்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை யாரோ ஒருவர் அபகரித்துக்கொண்டு இவரை விரட்டிவிட்டாராம் இவருக்கு என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியவில்லை என்னைக்கூட ஏமாற்றக்கூடிய ஆட்கள் இருக்காங்கய்யா என்று சொல்லி இப்பேதும் சிரித்தார்-இந்த சிரிப்பில் சந்தோஷம் இல்லை மாறாக வேதனைதான் வௌிப்பட்டது.

இவருடன் பேசுவதற்கான எண்:8098314510.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    ஐயோ கடவுளே இவரையுமா ஏமாற்றுகிறார்கள்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement