Load Image
Advertisement

கோவையில் அதிகரிக்கும் மான் கறி வியாபாரம் உயிர் கொல்லும் ருசி! உண்போருக்கு ரேபிஸ் நோய் தாக்கும் அபாயம்!

 கோவையில் அதிகரிக்கும் மான் கறி வியாபாரம் உயிர் கொல்லும் ருசி! உண்போருக்கு ரேபிஸ் நோய் தாக்கும் அபாயம்!
ADVERTISEMENT
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், காட்டு மான்களை நாய்களைக் கொண்டு வேட்டையாடி, அவற்றை அதிக விலைக்கு விற்பது அதிகரித்துள்ளது; இந்த மான் இறைச்சியை உண்போருக்கு, சில ஆண்டுகளுக்குப் பின், 'ரேபிஸ்' எனப்படும் வெறி நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக வனத்துறை எச்சரித்துள்ளது.

மொத்தம் 670 சதுர கி.மீ.,பரப்புள்ள கோவை வனக்கோட்டத்தில், ஏழு வனச்சரகங்கள் உள்ளன. இதில், கடமான், புள்ளி மான், சருகுமான், குரைக்கும் மான், சிறுமுகை வனப்பகுதியில் மட்டும் அரிதாக காணப்படும் வெளிமான் உட்பட ஐந்து வகையான மான்கள் வாழ்கின்றன. வனப்பகுதியில் வறட்சி நிலவும் போது, உணவு மற்றும் தண்ணீருக்காக, இந்த மான்கள், வனத்தை ஒட்டியுள்ள வயல் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது, காலம் காலமாக நடந்து வருகிறது.
ஆனால், சமீபகாலமாக இந்த மான்கள் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கோவை, சிறுமுகை, பெ.நா.பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வனச்சரகங்களில், கடந்த சில மாதங்களாக, மான்கறி வைத்திருப்போர், வனத்துறையிடம் அதிகளவில் சிக்கியுள்ளனர். ஏராளமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவில், மான் வேட்டையாடப்படுவது, வன உயிரின
ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வனத்தில் உள்ள மிருகங்களால் வேட்டையாடப்படுவதை விட, நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தியும், வேட்டை நாய்கள் மூலமாகவும் மனிதர்களால் கொல்லப்படும் மான்கள்தான் அதிகம். இவ்வாறு, கொல்லப்படும் மான்களின் தோல், எலும்பு, போன்றவை மண்ணில் புதைக்கப்பட்டு, கொம்புகள் மற்றும் இறைச்சி மட்டும் விற்பனைக்கு வருகின்றன.
இவற்றை வாங்கி உண் போருக்கு, சில ஆண்டுகளில் 'ரேபிஸ்' நோய் தாக்கி, உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக வனத்துறை எச்சரிக்கிறது.

மான் வேட்டையைத் தடுப்பதற்கு, வனத்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை பணியாளர் எண்ணிக்கையை விட, வேட்டைக் கும்பலின் எண்ணிக்கை, பலம் அதிகமாகவுள்ளது.
வனத்துறையினர், வன உயிரின ஆர்வலர்கள், பொது மக்கள் எல்லோரும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே இதைத்தடுக்க முடியும்.

மூன்று வருஷம் ஜெயில்!

கோவை டி.எப்.ஓ., சதீஷ் கூறுகையில், ''கோவை வனக்கோட்டத்தில், சமீபத்தில் மான் கறியுடன் பிடிபட்ட சிலர், வேட்டை நாய்களை பயன்படுத்தியே மான்களை வேட்டையாடியுள்ளனர். வேட்டை நாய்களால் கொல்லப்பட்ட மான்களின் இறைச்சியை உண்போருக்கு, சில ஆண்டுகளில் 'ரேபிஸ்' நோய் தாக்கி, உயிரிழக்கும் அபாயம் அதிகம் உள்ளது. மான் இறைச்சி வைத்திருப்போருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்,'' என்றார். -நமது நிருபர்-


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement