Advertisement

இப்படி ஒரு பத்து படம் எடுத்துட்டு செத்தாலும் பராவாயில்லை...


இப்படி ஒரு பத்து படம் எடுத்துட்டு செத்தாலும் பராவாயில்லை...


அது ஒரு அபூர்வமான புகைப்பட பயிற்சி பட்டரை
பெஸ்ட் போட்டோகிராபி தமிழ் பருவ இதழின் ஆசிரியர் பழனிக்குமார் ஏற்பாட்டில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் புகைப்படக்கலைஞர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த புகைப்படக்கலைஞர்களுடன், வல்லுனர்கள் பலர் பங்கேற்று போட்டோகிராபியைப்பற்றி பேசி,பழகி,பருகி,உண்டு,சுவாசித்து உறங்கி மகிழ்ந்த இனிய வைபவம் அது.
ஒவ்வொரு துறை நிபுணர்களும் தங்கள் படைப்பை பார்வையாளர்களுக்கு பரிமாறிவிட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.

அதில் ஒரு நிபுணரின் படங்களை பார்த்துவிட்டு பார்வையாளர் ஒருவர், 'உங்களை மாதிரி ஒரு பத்து படம் எடுத்துட்டு செத்து போனாக்கூட கவலையில்லை' என்றார்.
மொத்த அரங்கமும் ஆடிப்போனது,நீண்ட நேரம் அமைதிகாத்தது.

ஒரு கலைஞன் சக கலைஞனை அங்கீகரிப்பதே அரிதாகிப் போய்விட்ட இந்தக்காலத்தில் இப்படிப்பட்ட உச்சபட்ச பாராட்டு வார்த்தையைக் கேட்டால் யார்தான் ஆடிப்போகமாட்டார்கள்.
அப்படியொரு பாராட்டை பெற்ற புகைப்படக்கலைஞர்தான் செந்தில்குமார் ஸ்கந்தகிருஷ்ணன்.சென் போட்டோஸ் என்ற தலைப்பில் முகநுாலில் புகைப்படங்களை தொடுத்து வருபவர்.

தேனி மாவட்டத்துக்காரர் என்ஜீனியரிங் முடித்துவிட்டு தற்போது தாய்லாந்தில் ஐடி ஊழியராக பணியாற்றுகிறார்.வேலையில் ஏற்படும் அயர்ச்சியைப் போக்க இவர் தேர்ந்துதெடுத்தது புகைப்படத்துறை.

சிறுவயது முதலே புகைப்படத்தின் மீது காதல் என்றாலும் முழுமையாக தன்னை இந்த துறைக்கு அர்ப்பணித்துக் கொண்டது தாய்லாந்து சென்றபிறகுதான்.

இயற்கை மற்றும் செயற்கை ஔிச் சேர்க்கையுடன் இவர் எடுக்கும் படங்கள் இவைகள் எல்லாம் படமா?அல்லது ஒவியமா? என ஆச்சர்யப்படவைக்கின்றன.

அதற்கேற்ப அவரும் ஒவ்வொரு படத்திற்கும் தனது உன்னத உழைப்பை கொடுக்கிறார். மலைப் பின்னனியில் ஒரு காட்டு ராணியைப் போல படம் எடுக்கவேண்டும் என்றால் இடம்,மாடல்,லொகேஷன் தேர்வு என்று அதற்கே சில நாட்கள் செலவு செய்கிறார் அதன் பிறகே இவர் நினைத்தமாதிரி படங்களை எடுக்கிறார்.

இப்படி இவர் எடுக்கும் படங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் உழைப்பு மட்டுமின்றி செலவும் நிறையவே உண்டு.இவ்வளவு மெனக்கெட்டு எடுக்கும் படங்கள் அனைத்தும் இவரது சந்தோஷத்திற்காக மட்டுமே என்பது இன்னோரு ஆச்சர்யம்.

புகைப்படம் எடுப்பதற்க்காக இதுவரை 38 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார், நுாற்றுக்கும் அதிகமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

உங்கள் படத்தில் மட்டும் எப்படி இவ்வளவு ரிச்செனஸ் வருகிறது எங்கிருந்து இவ்வளவு அழகியல் இடம் பெறுகிறது என்பது போன்ற கேள்விகளுக்காகவே தனியாக போட்டோ ஒர்க் ஷாப்பும் நடத்திவருகிறார்.

இவர் பற்றியும் இவரது போட்டோ ஒர்க் ஷாப்பற்றியும் அறிந்து கொள்ள அவரது முகநுாலுக்கு விசிட் செய்யுங்கள்.

https://www.facebook.com/senthilkumar.kandhakrishnan

--எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement