Advertisement

நா புரட்டும், 'நம்மவர்!'

மதியம், 1:15 மணி. மார்ச் வெயிலில், எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரங்கள் வெந்து கொண்டிருக்க, 'தெர்மாகோல்' போட்டு பராமரிக்கப்படாத, 'வைகை' எக்ஸ்பிரஸ், நான்காவது நடைமேடையில், ஆவி பறக்க நின்றிருந்தது.

'எஸ் - 4' பெட்டிக்குள் ஏறி நான் அமரவும், வைகை கிளம்பவும், எதிரில் இருந்த இளைஞர்களில் ஒருவன் பேசத் துவங்கவும் சரியாக இருந்தது.


'என்ன பதிலையே காணோம்...' கேட்ட இளைஞன், நக்கலாக நண்பனைப் பார்த்தான்.


சிரித்த நண்பன், 'உன் கேள்வியை இன்னொரு தடவை சொல்லு' என்றான். வைகை வேகமெடுத்தது.

'நடிகர் கமலோட தெளிவு, இப்ப இருக்கிற அரசியல்வாதிகள்ல யார் கிட்டே இருக்குன்னு கேட்டேன்!

''ஹா...ஹா...ஹா... எதை நீ தெளிவுன்னு சொல்றே?''

எல்லாமே தெளிவு தான். உதாரணத்துக்கு... மதுரை கூட்டத்துல ரசிகர்களைப் பார்த்து, 'நீங்க கொடுத்த காசு தான் பல்வேறு வழிகளில் சுத்தி வந்து, எனக்கு சம்பளமா வந்தது. அதுல தான் இந்த வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்குறேன்...

'என்னை வளர்த்து விட்ட உங்களுக்கு நான், என்ன செஞ்சிருக்கேன்னு யோசிச்சுப் பார்த்தப்போ, ஒண்ணுமே செய்யலைங்கிற குற்ற உணர்வு. அதான், மிச்ச வாழ்க்கையை உங்களுக்காக வாழணும்னு முடிவு பண்ணிட்டேன்'னு சொன்னாருல்ல... அந்த தெளிவு எப்படி?'


'பிரமாதம்! ஆனா, எனக்கு இந்த இடத்துல தான் இடிக்குது! காஞ்சனா - 2 படத்தோட பிரமாண்ட வெற்றியைப் பார்த்ததும், நடிகர் ராகவா லாரன்ஸுக்கும், இதே மாதிரி குற்றவுணர்வு வந்தது. உடனே என்ன பண்ணினார்... தன் சம்பாத்தியத்துல இருந்து, ஒரு கோடி ரூபாயை எடுத்து, நுாறு இளைஞர்கள் கையில கொடுத்து, மக்களுக்கு உதவச் சொன்னார்..


'தனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வை, சக நடிகர் இப்படி களையுறப்போ, கமல்ஹாசனுக்கு மட்டும் ஏன் அப்படித் தோணலை; ஆட்சிக்கு வந்து, மக்களோட வரிப்பணத்துல தான், தன்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்யணுமா என்ன?'


எழும்பூரில், நக்கலாக கேட்ட இளைஞன், இக்கேள்விக்கு பதில் தவிர்த்து, ஜன்னல் பார்த்தான். தாம்பரம் வரவேற்றது.


'வெறும், 6,000 ரூபாய்க்கு தன் ஓட்டை விற்கிற மக்களுக்கு எதுக்காக தன் சொந்த காசை எடுத்து செலவு பண்ணணும்?' செங்கல்பட்டு கடக்கும் வரை யோசித்த கேள்வியை, மூக்கை தடவிய படியே காட்டமாக வீசினான், முதலாமவன்.


'அப்படி கேளு! மக்கள் உள்ளத்துல கமல்ஹாசன் இருக்குற போதே, மக்கள் இப்படி தப்பு பண்ணியிருக்காங்களே... இப்போ அவர் சொல்ற படி, உள்ளத்துல இருந்து அவரை எடுத்து, இல்லத்துல வைச்சிட்டா, என்னென்ன தப்பு பண்ணுவாங்க... அப்படிப்பட்ட மக்களுக்கு எதுக்காக இவர் சேவை செய்யணும்னு நினைக்கணும்?''


மக்களுக்கு நல்லது பண்ணணும்னு கமல் நினைக்கிறது தப்புன்னு சொல்றியா?''


ச்சே...ச்சே, மக்களுக்காக அரசியலுக்கு வர்றது தப்பே இல்லை. ஆனா, ஆறு மாசத்துக்கு முன்னாடி, 'நான் குறி வைக்கப்பட்டதால் தான், எனக்கு இத்தனை கோபம். இன்னும் நான் அரசியலுக்கு வரவில்லை. வர வைத்து விடாதீர்கள்'ன்னு சுயநலத்தோட, பொங்குனது தான் ரொம்ப தப்பு.


இப்படிச் சொல்லிட்டு, மூணு நாளைக்கு முன்னாடி, ஈரோடு பத்திரிகையாளர் சந்திப்புல, 'நான் எதையும் எதிர்பார்க்கலேங்க. 'மாற்றம் வேண்டும்'னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க. மக்களில் ஒருவனாக நானும் எதிர்பார்க்கிறேன்'னு நா புரட்டிப் பேசினது, ரொம்ப ரொம்ப தப்பு!'அப்போ... அவருக்கு அரசியல் ஆசையே கிடையாதுன்னு முடிவு பண்ணிட்டே. அப்படித்தானே?'


'ஆசை இருந்ததா, இல்லையான்னு எனக்கு தெரியலை. ஆனா, அரசியல் பத்தி அவருக்கு
தெரியாதுங்கிறது தெரியும். இதுவும், அவர் சொல்லித் தான் தெரியும். 2017 ஜனவரில, அவர் வீட்டுல நடந்த பத்திரிகையாளர் சந்திப்புல, 'நீங்க அரசியலுக்கு வரணும், வழி நடத்தணும்னு மாணவர்கள் சொல்றாங்களே...'ன்னு நிருபர்கள் கேட்டாங்க.


அதுக்கு கமல், 'வந்துட்டு வந்துட்டு போகணுமே தவிர, அங்கேயே இருக்க முடியாது. எங்களுக்கு வேற வேலை இருக்கு; நல்லா தெரிஞ்ச வேலை இருக்கு. தெரிஞ்ச வேலையை விட்டுட்டு, தெரியாத வேலையை நான் ஏன் பார்க்கணும்?'னு கேட்டார்.ஆனா இப்போ, 'நீங்கள் தான் என் பேச்சு; தமிழகம் தான் என் மூச்சு'ன்னு மாணவர்கள் கிட்டே சொல்றார். ஒரு வருஷத்துக்குள், தெரியாத வேலை தெரிஞ்ச வேலையாயிடுச்சா என்ன?'நண்பனின் கேள்வியை செரிக்க முடியாமல் பெருமூச்சு விட்டான், நண்பன். இரு புறமும் காற்றை கிழித்த படி, 'மையமாய்' விரைந்து கொண்டிருந்தது, வைகை.


'மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அறிவு எதுக்கு? இதோ, முதல் மேடையிலேயே, வேலை இல்லா பிரச்னையை தீர்ப்பேன்னு சொல்லிட்டாரே!''ஆனா, எப்படின்னு சொல்லலையே... தவிர, 'வேலை இல்லாம இருக்கிறவங்க கை துாக்குங்க'ன்னு மதுரை கூட்டத்துல அவர் சொன்னப்போ, உடனடியா கை துாக்கினதுல அவருடைய ரசிகர்களும் அடக்கம் தானே! 37 ஆண்டுகளா தன் பேர்ல நற்பணிகளை பண்ணி, தன்னை வளர்த்து விட்டவங்களுக்கு, ஒரு வேலைவாய்ப்பை கூட, கமலால ஏற்படுத்திக் கொடுக்க முடியாதது பெரிய குற்றம் இல்லையா?


''எல்லாத்தையும் கமல் தான் செய்யணும்னா, அப்புறம் அரசு எதுக்கு இருக்கு?''எந்த அரசை சொல்றே... இப்போ பொறுப்புல இருக்கிற அரசையா? ஆனா, 'கடந்த, 50 ஆண்டுகளா, தமிழகத்தை ஆண்ட எல்லா கட்சிகளுமே, மக்களுக்கு துயரத்தை தான் தந்திருக்கு'ன்னு கமல் சொல்றாரே!கூடவே, '6,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டதுக்கு பதிலா, கொஞ்சம் யோசிச்சு, நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தீங்கன்னா, வருஷத்துக்கு உங்களுக்கு, ஆறு லட்சம் கிடைச்சிருக்கும்'னு சொல்றார்.அவர் வார்த்தைப்படி பார்த்தா, ஆட்சி நடத்திட்டு இருக்கிற கட்சியைத் தவிர்த்து, நல்ல கட்சியும் தமிழகத்துல இருக்கு. அப்படித் தானே? அப்படி ஒரு நல்ல கட்சி இருக்குறப்போ, அதை மக்களுக்கு அடையாளம் காட்டுறதை விட்டுட்டு, எதுக்கு இவர் புதுசா, ஒரு கட்சி ஆரம்பிக்கணும்?'


'அது... அது வந்து...' ஆறாவது முறையாக, தன் மூக்கை நீவி விட்டுக் கொண்டான் இளைஞன்.


விருத்தாச்சலம் கடந்து, விரைந்து கொண்டிருந்தது வைகை. தென்னக ரயில்வே விற்ற, கட்லெட்டை விட சுவையாய் இருந்தது, இளைஞர்களின் வாதம். கடைசி வாய், கட்லெட்டை வழித்தெடுத்து திணித்து, வாய் துடைத்துக் கொண்டேன். அமைதியாய் கடந்தன திருச்சியும், அடுத்த மூன்று மணி நேரமும்.'கமல் மேல உனக்கு அப்படி என்ன மச்சி கோபம்...' திண்டுக்கல் கடந்ததும், நண்பனின் முகம் பார்த்து, நேரடியாய் கேட்டான் இளைஞன்.


'கோபம் ஒண்ணும் இல்லை; வருத்தம் தான்! 'ஊழலை நான் மட்டும் ஒழிக்க முடியாது. எல்லாரும் சேர்ந்து தான் ஒழிக்கணும்'னு சொல்றவர், 'ஊழல் நடக்கிற துறைகளை பொது வெளிக்கு கொண்டு வாங்க'ன்னு ரசிகர்களுக்கு உத்தரவு போடுறவர்... தான் சார்ந்திருக்கிற
சினிமா துறையில நடக்கிற ஊழல்களை மட்டும், இன்னும் வெளிச்சத்துக்கு கொண்டு வராம இருக்கிறது ஏன்னு புரியலை!


''ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வருவாரோ என்னவோ!''ஓஹோ...! அப்போ, ஆட்சிக்கு வரலேன்னா... இப்ப மாதிரியே அமைதியா இருந்திடுவாரா? நடிகை ஸ்ரீதேவி பிரேத பரிசோதனை அறிக்கை சொன்ன, ஆல்கஹால் விஷயத்தைப் பத்தி கேட்குற போதே, 'அதைப் பத்தி எனக்குத் தெரியலேங்க'ன்னு நழுவுறவர், உயிரோடு இருக்குற, தன் திரையுலக நண்பர்களை அவ்வளவு சுலபமா காட்டிக் கொடுத்துடுவாரா என்ன...''அப்போ இந்த சிஸ்டத்தை யார் தான் சரி பண்றது?''


அதுக்கு என் கிட்டே இப்போதைக்கு பதில் இல்லை. ஆனா, கமல் அதுக்கான ஆளான்னு கேட்டா, 'ஆமா'ன்னு சொல்ல மனசு வரலை. இதை ஏன் சொல்றேன்னா, 'ரஜினி சொல்றதுக்கு முன்னாடியே, சிஸ்டம் சரியில்லைன்னு சொன்னவன் நான்'னு சொன்ன கமல், 2017 ஜனவரி பேட்டியில...'பன்னீர்செல்வம் ஆட்சித்திறனில் திறமையின்மைக்கான அறிகுறி இல்லாத போது, ஏன் அவரை மாற்ற வேண்டும்'னு கேட்டார். இப்படி, சிஸ்டம் கெட்டிருக்கா... இல்லையாங்கிற உறுதியே இல்லாத நபரால, எதை சரி பண்ண முடியும்னு நீ நினைக்கிறே?'மதுரை நிலையத்திற்குள் நுழைந்தது வைகை. தன் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொன்ன நண்பனை, அணைத்த படி இறங்கினான் இளைஞன். நடைமேடையில் இறங்கி நடந்த போது, மதுரை மேடையில் கமல் பேசிய வசனம் மனதிற்குள் ஓடியது...'தைரியமாக பேசி விட்டால் நியாயமும், தர்மமும், உண்மையும் உங்கள் பக்கம் இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்களா என்ன...'


வாஞ்சிநாதன்
இ-மெயில்:vanjinath40gmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • subramanian - coimbatore,இந்தியா

    திரு கமல் ஹாசன் அவர்கேள, அரசியல் வாதி யாக மாறிய உங்களுக்கு சில கேள்விகள் 1 . விஸ்வரூபம் பட பிரச்சனையின்போது இந்த நாட்டை விட்டே போய்விடும் மனநிலையில் இருந்தீர், அதேபோல் இப்போதும் இருக்கீறீர்களா?2 . காந்தி காந்தி என்று கூறுகிறீர்களே அவர் ஒருபோதும் எந்த மதத்தையும் இழிவாக விமரிசித்து கிடையாது நீங்கள் அப்படி தானா? 3 . காந்தி எல்லா நாளும் துவக்கத்திலும் முடிவிலும் பிரார்த்தனை செய்வார் நீங்கள் எப்படி ? 4 .உங்களின் வீரமும் ஆவேசமும் ஏன் இப்போது மட்டும் வெளிக்காட்டுகிறீர்கள்,ஏன் அம்மா இருந்தபொழுதும், கலைஞர் ஆக்ட்டிவாக இருந்தபொழுதும் பொங்கி பிரவகிக்க வில்லை பயமா? 5 . நீங்கள் உங்கள் வாழ்கை முழுவதும் உங்களின் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் தான் வாழ்கிறீர்களா? 6 . உங்களுக்கு தனி மனித ஒழுக்கம் கட்டுப்பாடு போன்றவற்றில் நம்பிக்கையுண்டா? 7 . உங்களின் மதச்சார்பின்மை என்பது இந்துமத நம்பிக்கையில்லாது மட்டும்தானா அல்லது அணைத்து மதநம்பிக்கை இல்லாததா? 8 . அவ்வாறு ஆயின் ஹிந்து மதத்தை போன்றே மற்ற மதங்களை விமரிசிக்க த்ராணி உண்டா? 9 . உங்களின் கோட்பாடு படி அனைவரும் சமம் எனில் சிறுபான்மையினர் என்ற பெயரில் சலுகைகள் பற்றிய உங்களின் கருத்துக்கள் என்ன? 10 . அடி முதல் நுனி வரை இங்கு லஞ்சம் உள்ளது,இதை வேரோடு பெயர்க்க உங்களின் செயல் திட்டம் என்ன? 11 . மத சார்பின்மை பெயரில் எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுவீர்களா அல்லது எதற்குமே வாழ்த்து கூறமாடீர்களா?12 .சமீபத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரை விமர்சித்த நீங்கள் ஏன் கிருத்துவர்களின் குருத்தோலை ஊர்வலத்தை விமர்சிக்க வில்லை ? 13 . பெரியாரின் கருத்துக்களை பெரிதும் மதிக்கும் நீங்கள் அவர்வழியில் தமிழ் காட்டுமிராண்டி பாஷை,தமிழர்கள் காட்டு மிராண்டிகள்,திருக்குறள் ஒரு தேவை அற்ற நூல் என்று கூறுவீர்களா? இவை அனைத்தும் ஒரு சாமானியனின் பார்வையில் அரசியல் வாதி கமல்ஹாசனின் நிலைப்பாடை தெரிந்து கொள்ளும் ஆவலில் எழுப்பப்பட்ட கேள்விகள்.

  • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

    .. கமலோ வேற எந்த பிரபலங்களா இருந்தாலும், ஏன் சாமான்ய கடைக்கோடி குடிமகனா ஆனாலும் வாய்ப்பு கிடைச்சா அரசியல் செய்வோம்னு நினைக்கிறதும், அப்படி அந்த வாய்ப்பு வரும்போது அதை ஏற்காத தயக்கம் வருவதும், துணிந்து வந்தபின் சில தடுமாற்றங்கள் வருவதும் சகஜமே... கமலும் அதற்கு விதி விலக்கல்ல.. என்னமோ பெரிசா குற்றம் கண்டுபிடிக்கிறீங்க... கமலுக்கு என்று ஒரு STRATEGY இருக்கும், அதன்படி நடக்கும் போது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் நிலையில்லாத மாதிரி தெரியலாம்... ஆனா அதுல ஒருத் தப்பும் இல்லை.. ஏன்னா நம்ம அரசியல்ல இதுவரைக்கும் இருக்கிறவங்க எல்லாரும் புத்தனும் காந்தியும் அல்ல.. சிஸ்டமும் பெர்ஃபெக்ட் இல்லை.. ஆக அவங்களை எதிர்த்து அரசியல்ல ஜெயிக்கணும்னா ஏன் நிற்கணும்னா கூட STRATEGY ரொம்ப அவசியம்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement