Advertisement

வளர்ச்சி என்றால் எது?

கர்நாடக மாநிலம் சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கிற காலத்தில், சில சம்பவங்கள் அம்மாநிலத்திற்கு அவப்பெயரைத் தருகின்றன.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கர்நாடகா முக்கியமானது. முதல்வர் சித்தராமையா மேல்தட்டைச் சேராத அரசியல்வாதி. அவர் எதையும் இயல்பாக கையாளுவதுடன், எந்தப் புகார் ஆனாலும், சளைக்காமல் பதிலளிப்பார். சட்டசபை வளாகம் அமைந்திருக்கும் பகுதி அருகே, ஊழல் புகார்களை விசாரிக்கும், 'லோக் ஆயுக்தா' என்ற அமைப்பின் அலுவலகம் உள்ளது. அங்கு சில வழக்கறிஞர்கள் சென்று, தங்கள் பணிகளை முடித்து, மதியம் திரும்பும் நேரத்தில், தேஜஸ்சர்மா என்ற இளைஞர், அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு, உள்ளே சென்று, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி, விஸ்வநாத் ஷெட்டியை கத்தியால் குத்தியிருக்கிறார்.
நல்ல வேளையாக, அங்கு அவருக்கு பாதுகாப்பாக இருந்த துப்பாக்கி வீரர், இந்த நபரை மறித்து தடுத்திராவிட்டால், அங்கேயே ஷெட்டி இறந்திருப்பார். சர்மா என்பவர், தகவல் கேட்டு உரிமைகளைப் பெறும் சட்ட மனுக்களுடன் அங்கு வருவது உண்டு.
இப்போதைய விசாரணைகளில், நீதிபதி ஷெட்டிக்கும், இவருக்கும் மனஸ்தாபம் இருந்ததாக தெரியவில்லை. லோக் ஆயுக்தா நீதிபதி டேபிள் மீது பாய்ந்து, அவரை கத்தியால் குத்திய வெறிச்செயல், மிக மோசமான சூழ்நிலையின் அடையாளம்.
கர்நாடக ஐகோர்ட், நீதிபதிகள் வீடுகளுக்கு அதிக பாதுகாப்பு, லோக் ஆயுக்தா அலுவலகத்தில், 'மெட்டல் டிடெக்டர்' பாதுகாப்பு ஆகியவை, இப்போது அமலாகி இருக்கிறது. அலுவலகங்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பை பல தடவை கேட்டும், அரசு அமல்படுத்தவில்லை. முதல்வர் சித்தராமையா, கர்நாடகத்தின் கவுரவத்தைக் காக்கும் மூன்று வண்ண கொடியை உருவாக்கி, அதைப் பறக்கவிடும் முனைப்பில், பத்தில் ஒரு பங்கு கூட நீதிபரிபாலனம் செய்யும் அமைப்புகளுக்கு முன்னுரிமை தரவில்லை என்பது, இச்சம்பவத்தின் அடையாளம். இவ்வழக்கு விசாரணை முடியும் போது, மாநில அரசு நீதித்துறையை எந்த அளவு மோசமாக கருதியது என்பது தெரியும். காங்கிரஸ், எம்.எல்.ஏ., ஹாரிஸ் மகனான, முகமது நால்பாட் என்பவர், மதுபான விடுதியில், வித்வத் என்பவரை உயிர் போகுமளவு தாக்கியது, மிகக் கொடூரமானது. நால்பாட் என்பவருக்கு எதிரிகள் ஏராளம் என்றும், அவர்களை அவர் தாக்கும் கொடூரமான முறை, 'ஹிட்லர் பாணி'யாகும் என, ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கு விசாரணை, தேர்தல் நடைபெறும் காலத்தில் கூட வரலாம்.
மேலும், மற்றொரு சம்பவமாக, பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு விசேஷ சலுகை, முதல்வருடைய ஒப்புதலில் தரப்பட்டது என்ற கருத்தை, அவர் மறுத்துள்ளார். ஆனால், உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியோ, 'சிறையில், 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை இருக்கிறது; அதன் தலைமை டாக்டர் பரிந்துரையின்படி, சசிகலாவுக்கு சில வசதிகள் தரப்பட்டன' என்கிறார். சிறைத்துறை ஊழல் விவகாரம், இத்தேர்தலுடன் முடிந்தால் நல்லது.
இக்குழப்பங்களுக்கு நடுவே, 'லிங்காயத்' என்ற சைவம் சார்ந்த மதப்பிரிவு மடங்களுக்கு, தனி மத அடையாளம் தர, அரசுக்கு நிபுணர் குழு அளித்த பரிந்துரை, தேர்தல் சமயத்தில் முரணாக மாறி இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றதும் இதற்கான முடிவை அரசு முடிவு செய்யும் என்பது, முதல்வர் கருத்தாகும்.
சைவ சிந்தாந்த கோட்பாட்டில் உள்ள, 'லிங்காயத்துக்களை' பிரிக்கும் முயற்சியை அரசு ஊக்குவிப்பதாக, இப்பிரிவுகளைச் சார்ந்த துறவிகள் அதிருப்தி தெரிவித்துள்ளது, மக்கள் மனதில் அதிகமாக உள்ளது. பொதுவாக, 'செக்யூலர்' தத்துவம் கொண்ட காங்கிரசுக்கு, இப்போது இதில் என்ன அக்கறை?
திரிபுராவுக்கு அடுத்ததாக கர்நாடகாவை வீழ்த்த, பிரதமர் மோடி எடுத்துள்ள, 'ஊழல் புகார்' எந்த அளவு அதிகரிக்கும் என்பது இனி தெரியும்.
அதே சமயம், 2025ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டத்தை, சில நாட்களுக்கு முன்னதாக வெளியிட்ட சித்தராமையா, 'ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் மக்களிடம், 165 உறுதி மொழித் திட்டங்களை அறிவித்தோம்; அதில், 150 பல்துறை வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன' என்ற அவரது வாதத்தை, காங்கிரஸ் தேர்தல் பிரசார உத்தியாக கூட மாற்றலாம். அந்த விளக்கத்தில், மீண்டும் அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 'பழிவாங்கும் அரசியல்' என்ற வார்த்தை அரசியலில் குறையலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement