Advertisement

காவிரி விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க சிறப்பு கூட்டம்!

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க, சட்டசபை சிறப்புக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வரும், 16ம் தேதி, இக்கூட்டம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து, எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு விடவும், மத்திய அரசை வலியுறுத்தி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும், அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காவிரி பிரச்னையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக, பிப்., 22ல், முதல்வர் பழனிசாமி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.


தீர்மானம்
அதில், அனைத்து கட்சி தலைவர்களும் டில்லி சென்று, பிரதமரை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, பிரதமரை சந்திக்க, தமிழக அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது; அனுமதி கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, 'முதலில், மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தியுங்கள்' என, பிரதமர் அலுவலகத்திலிருந்து, தகவல் தரப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முதல்வர் பழனிசாமி, மார்ச், 3ல், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'உடனடியாக சட்டசபையை கூட்டி, பிரதமரை சந்திப்பது குறித்து, தீர்மானம் நிறைவேற்றலாம்; மத்திய அரசுக்கு அழுத்தம் தர, எம்.பி.,க்களை ராஜினாமா செய்ய சொல்வோம்' என, ஸ்டாலின் தெரிவித்தார். இதன்பின், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்தது.


அதன்படி, மார்ச், 9ல், டில்லியில், மத்திய நீர்வளத் துறை செயலர் தலைமையில், நான்கு மாநில தலைமை செயலர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான, செயல் திட்டத்தை வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த ஆலோசனை தொடரும் என, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், நாளை தமிழக சட்டசபை கூடுகிறது. நிதி அமைச்சரான, துணை முதல்வர் பன்னீர்செல்வம், 2018 - 19ம் ஆண்டிற்கான, தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அன்று கூட்டம் முடிந்ததும், சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.


அந்தக் கூட்டத்தில், 'காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆறு வாரங்களுக்குள் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்த, தி.மு.க., முடிவு செய்து உள்ளது.


ஜல்லிக்கட்டு
பட்ஜெட்டுக்கு மறுநாளான வரும், 16ல், சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, 2017 ஜன., 23ல், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வருவதற்காக, சட்டசபை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதேபோல, வரும், 16ம் தேதி, காவிரி பிரச்னைக்காக, சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  கூட்டம் நடத்துவதால் கர்நாடகம் தண்ணீர் விட போவது இல்லை. இப்படி கூச்சல் போடுவதை விட்டுவிட்டு அமைதியாக காய் நகர்த்தி சாதிக்கவேண்டும், கர்நாடக தேர்தல் முடியும் வரை கொஞ்சம் அடக்கி வாசித்து பின் குரலை உயர்த்தலாம். அதுவரை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் நீதிமன்றத்தை அணுகியும் முன்னேறலாம். அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்வது ஒன்றே குறி

 • balakrishnan - coimbatore,இந்தியா

  கூட்டம் நடத்தி ஆகப்போவது எதுவும் இல்லை, உறுதியாக இருக்கவேண்டும், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை உறுதியுடன் இருக்கவேண்டும், எந்த ஒரு சமரச திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது, அது தான் முக்கியம், மத்திய அரசு தமிழக அரசை ஒரு பலவீனமான அரசாக நினைத்துக்கொண்டிருக்கிறது, அது உடைத்தெறியப்படவேண்டும், இந்த சந்தர்ப்பத்தை தமிழக அரசு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மீண்டும் கூழைக்கும்பிடு போடக்கூடாது

 • rajan. - kerala,இந்தியா

  ஐயா சாமி அரசியல் வியாபாரிகளா, நீங்க கூட்டம் பொது கூட்டம் போட்டும் அமர்க்கள படுத்துறது ஆத்தோ ஆத்துன்னு ஆத்துறது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் இப்போ பெய்யுற மழை நீரை சேமிக்க உண்டான வழிவகைகளை பாருங்க. இப்படி பேசியே கோர்ஸா அதனை மழை நீரையும் கடலில் கொண்டு சேர்த்துடுவானுங்க அப்புறமா விவசாயிகளை கோவணம் கட்டி டில்லியில் ஆர்ப்பாட்டம் பண்ணவச்சு கூத்தடிப்பானுங்க இந்த கூத்தாடிகள். உறுபட்டியா எதையாச்சும் சிந்திக்கிறானுங்களா எல்லாம் சுய லாபம் சிந்தனைகள் ஓன்று தான் குறி.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  நதிகள் எந்த ஒரு மாநிலத்தின் சொத்தல்ல அது தேசீய சொத்து என அறிவிக்கவே கோர்ட்டுக்கு நாற்பதாண்டுகளானது .காவிரி விவகாரம் அரசியலாக்கப்பட்டபோதோ மொழியுடன் இணைத்துப்போராட்டங்ள் நடந்தபோது அதனால்வரும் பின்விளைவுகள் கோர்ட்டின் கண்ணில் படவில்லை அப்படி முன்னமே சொல்லியிருந்தால் கர்நாடம் தன்னிஷ்டத்துக்கு அணைகளை கட்டுப்படுத்தியிருக்கமுடியாது புதுப்புது அணைகள் கட்டியிருக்கமுடியாது . இப்போது யாரையும் திட்டிபலனில்லை. இந்த இறுதித்தீர்ப்பினால் நமக்கு ஒரு சிறிய பலன்கூட கிடைக்காது .வாரியம் அமைத்தாலும் கர்நாடகம் அதனை சிறிதும் மதிக்கப்போவதில்லை . வாரியத்தின் முடிவுகளையும் தீர்ப்புகளையும் காவிரித்தண்ணீரிலேயே எழுதிவைத்துக்கொள்ளலாம் .ஒவ்வொரு முடிவை எதிர்த்தும் கர்நாடகம் கோர்ட்டுக்குப்போகும் தடையுத்தரவு வாங்கும் .. ஆண்டுக்கணக்கில் தண்ணீர்விடாது. ராணுவதையே அனுப்பினாலும் மசியமாட்டார்கள்,பிரிவினை வாதம் பேசுவார். அங்குள்ள தமிழர்களைத்தாக்குவர் . .இத்தனை நாள் அவர்களோடு வாதாடிய நேரத்தில் நமது மாநிலத்தின் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம்குட்டை வாய்க்கால்களை சரி செய்திருந்தால் இந்நேரம் ஆண்டுக்கு ஒரு போக சாகுபடிக்காவது நீர் கிடைத்திருக்கும். ஆனால் நாம் ஆக்கிரமிப்பாளர்களுக்குத்தானே தவறாமல் வாக்களிக்கிறோம்? .நமது தவறுகளை திருத்திக்கொள்ளாமல் மற்றவர்களோடு மோதி மன நிம்மதியைக் கெடுத்துக்கொள்பவன் முட்டாள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement