Advertisement

10 ஆண்டுகள் தாங்காத குடிநீர் குழாய்கள்:'கட்டிங்' பார்த்த அதிகாரிகளால் அவஸ்தை

மதுரை:மதுரை வைகை 2வது கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போட்டிபோட்டு, கமிஷன் பார்த்ததால், தரமில்லாத குழாய்கள் பதிக்கப்பட்டு, அவை உடைந்து ரோடுகளையும் பாழ்படுத்தி வருகிறது.


வீணடிக்கப்பட்ட திட்டம்

கடந்த தி.மு.க., ஆட்சியில் மதுரைக்கு கிடைத்த மிகப்பெரிய திட்டமாக வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் கருதப்பட்டது. ரூ.71 கோடியில் வைகை அணையில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு மதுரை வைகை வடகரை பகுதிகள் மற்றும் தென்கரையில் எச்.எம்.எஸ்., காலனி, வில்லாபுரம், சுந்தரராஜபுரம் உள்ளடக்கிய சுற்றுப்பகுதிகளில் இந்த தண்ணீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தில் குழாய்கள் வாங்கியதில் பெரும் முறைகேடு நடந்தது என அப்போதே பிரச்னைகள் எழும்பின. வழக்கம் போல அந்த எதிர்ப்புகள் அமுக்கப்பட்டு, குழாய்களும் பதிக்கப்பட்டன. இந்த திட்டத்தை 2010ம் ஆண்டில் அப்போதைய மேயர் தேன் மொழி தலைமையிலான கவுன்சிலில், துணை முதல்வரான ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

தாங்காத குழாய்கள்

நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அதிக அழுத்தமாக தண்ணீரை திறந்து விட்டால் தான், அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். இந்த குழாய்களில் மிகவும் குறைந்த அளவு அழுத்தம் கொடுத்தாலே குழாய்களின் இணைப்புகள் அழுத்தம் தாங்காமல் உடைந்து விடுகிறது. இதனால் இந்த குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதில் சத்யசாய்நகர் மெயின்ரோடு, சேசுமகால் ரோடு, சுந்தர ராஜபுரம் ஏ.ஏ., ரோடு உள்ளிட்ட பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

செயல்படுத்திய அதிகாரிகள்

வைகை குடிநீர் திட்ட பணிகளை அப்போது ஈரோட்டை சேர்ந்த சின்னச்சாமி அண்டு கோ என்ற நிறுவனம் டெண்டர் எடுத்து பணிகளை மேற்கொண்டது. அப்போது நகர் பொறியாளர் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் செயல்படுத்தினர். அவர் தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். உதவி பொறியாளர் அய்யனாரும் ஓய்வு பெற்றுள்ளார். உதவி செயற்பொறியாளரான ஜெயசீலன் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பணிமாறுதல் பெற்று துாத்துக்குடியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் கீழ் பணிபுரிந்த பல பொறியாளர்களும் தற்போது மாநகராட்சியில் பணிபுரிந்து வருகின்றனர். பொறியியல் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் 'கட்டிங்' கொடுக்க வேண்டிய கட்டாயம் தொடர்ந்து வருகிறது.

தீர்வு கிடைக்குமா

மாநகராட்சி அதிகாரிகள் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான பணிகளில் ஆர்வம் காட்டி வருவதால், ஏற்கனவே உள்ள 2ம் கட்ட குடிநீர் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. சுந்தரராஜபுரம் மார்க்கெட்டின் முன்பகுதியில் இருந்து சத்யசாய் நகர் செல்லும் ரோடு, சேசுமகால் ரோடுகள் குடிநீர் குழாய் பிரச்னை தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக தோண்டுவதும், சீரமைப்பதும் மீண்டும் தோண்டுவது என தொடர்ந்து வருகிறது.

குடிநீர் குழாயின் அழுத்தத்தை குறைக்கும் வகையில், இணைப்பை இரண்டாக பிரித்துவிட பொறியாளர்கள் முயற்சிக்கின்றனர். இதனால் இந்த பகுதி வீடுகளுக்கு தண்ணீர் முழுமையாக கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் நிலையும் உள்ளது.

பிரச்னைகள் தெரியாது

வார்டுகளின் பிரச்னைகள் தொடர்பாக உதவி கமிஷனர் தலைமையில் கூட்டங்கள் நடைபெறுகிறது. அவர் நிர்வாக பொறுப்புகளை மட்டும் கவனிக்கிறார். ஆனால் அன்றாட மக்கள் பிரச்னைகளான குடிநீர், பாதாள சாக்கடை, ரோடு என முக்கிய பிரிவுகளை பொறியியல் பிரிவு நடத்துகிறது. இப்பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து உதவி கமிஷனர் கவுசலாம்பிகை கூறுகையில், ''இது போன்ற பிரச்னைகளை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளகள் தான் கவனிக்கிறார்கள், இவை எங்களது பார்வைக்கு வருவதில்லை, அதனால் இப்பிரச்னை பற்றி தெரியவில்லை,'' என்றார்.

தொடர்ந்து கழிப்பறை அரசியல்

மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்த போது நகரில் பல இடங்களில் நவீன இலவச கழிப்பறைகளை தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் ஏற்படுத்தினார். இதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து அப்போதே தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது.
ஆனாலும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் கழிப்பறைகளை அமைத்தனர். ஆட்சி மாறியதும் இவை பரா மரிக்கப்படவில்லை. மாநகராட்சி தண்ணீர், மின்சாரம் இலவசமாக வழங்கிய நிலையில் இவை கட்டண கழிப்பறையாக மாறின.
டெண்டர் எடுப்பதிலும் முறைகேடுகள் நடந்து சில இடங்களில் பூட்டப்பட, சில இடங்களிலோ சுகாதார சீர்கேடு மிகுந்த கழிப்பறையானது. இதேபோல் சத்யசாய் நகர் பூங்கா அருகில் உள்ள கழிப்பறையும் பராமரிப்பற்ற நிலையில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது. இதன் அருகே ஓடும் (?) கிருதுமால் வாய்க்காலில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களை உற்பத்தி செய்யும் பண்ணையாக இது உள்ளது.

அனைத்து ரோடுகளும் 'அவுட்'

ஜெய்ஹிந்த்புரம், சத்யசாய் நகர், டி.வி.எஸ்., நகர், அழகப்பன் நகர் பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளும் பாழ்பட்டு கிடக்கிறது. தற்போது தனியார் கேபிள் நிறுவனம் ஒன்று, இந்த ரோடுகளில் கேபிள் பதிப்பதற்காக தோண்டி வருகிறது. இதனால் பல இடங்களில் குடிநீர் குழாய்களும் உடைபட்டு வருகிறது.

இப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் போஸ், சீனிவாசன் கூறுகையில், ''ரோடுகள் சீரமைப்பிற்கு மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்வது மிகவும் குறைவு. ஏதாவது ஒரு ரோட்டிற்கு மட்டும் நிதி ஒதுக்குவார்கள். தற்போதைய நிலையில் இந்த ரோடுகளை சீரமைக்க இன்னும் நீண்ட நாள் ஆகலாம்,'' என்றனர்.

ரூ.40 லட்சம் ஒதுக்கீடு

மாநில சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுந்தரராஜபுரம் மார்க்கெட் பகுதியில் இருந்து ஜீவா நகர் வரையிலான ரோடு சீரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற ரோடுகளுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. முறையாக வரிகள் செலுத்துவதில் இப்பகுதி முன்னிலையில் இருப்பதாக மாநகராட்சியே தெரிவித்து வருகிறது. ஆனால் பாதாள சாக்கடை, குடிநீருக்காக ரோடுகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளதால், இந்த பகுதியில் ரோடுகள் சீரமைப்பிற்கு மாநகராட்சி அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

புன்னகைக்காத பூங்கா:மக்கள் வரிப்பணம் ரூ.34 லட்சம் அவுட்

சத்யசாய்நகர் மெயின் ரோட்டின் அருகில் 2 ஏக்கரில் பூங்கா உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் பூங்கா 10 லட்சம் ரூபாயில் பொலிவுசெய்யப்பட்ட நிலையில் ஆட்சி மாறியது. அ.தி.மு.க, ஆட்சியாளர்கள் இந்த பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் பூட்டி வைத்திருந்தனர். இதனால் பூங்கா பாழானது. பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் மாநகராட்சியை வலியுறுத்தினர். சில மாதங்களுக்கு முன் கமிஷனர் அனீஷ்சேகர் பூங்காவை மீண்டும் சீரமைப்பதற்கு மத்திய அரசின் அம்ருட் திட்டத்தில் 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய பணிகள் நடந்து வருகிறது. முதலிலேயே இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தால் இந்த நிதிகள் வீணடிக்கப்படாமல், இந்த நிதியை வேறு பூங்கா மேம்பாட்டிற்கு பயன்படுத்தியிருக்கலாம். அரசியல்வாதிகளின் கூத்துகளால் மக்கள் வரிப்பணம் 34 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.


Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement