Advertisement

டீ கடை பெஞ்ச்

திருடனிடமே, 53 சவரன், 'அடித்த' இன்ஸ்பெக்டர்!

''அ.தி.மு.க.,வினரே வெளிலே காத்துண்டு இருக்க, முதல்வரை, தி.மு.க., பிரமுகர் ராஜ மரியாதையோட பார்த்துட்டு போயிருக்கார் ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எங்க வே...'' என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.


''முதல்வர் பழனிசாமி, சமீபத்துல திருச்சியில இருக்கற, 'மாஜி' அமைச்சர், சிவபதி
ஆத்துக்கு வந்தார் ஓய்... அப்ப, முதல்வரை பார்த்து, மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி, செல்ல ராஜாமணி, மனு குடுத்தார்...


''அவர் கூட, தி.மு.க., மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர், தர்மராஜும், முதல்வரை பார்த்து பேசினார் ஓய்... இவா சந்திப்புக்கு, அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி செயலர், கார்த்திகேயன் ஏற்பாடு பண்ணியிருக்கார்...


''நிறைய, அ.தி.மு.க., நிர்வாகிகளே, சிவபதி ஆத்துக்கு வெளிலே நின்னு முதல்வரை வரவேற்ற நிலையில, தி.மு.க., பிரமுகர் ராஜ மரியாதையோட பார்த்துட்டு போனது, அவா காதுல புகையை வரவழைச்சுடுத்து ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.


''கடைகளை அகற்றும் விஷயத்துல அடக்கி வாசிக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் அண்ணாச்சி.


''யாரைச் சொல்றீங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.


''மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல நடந்த தீ விபத்தால, அங்க இருக்குற கடைகளை அகற்றணும்னு, பா.ஜ., இந்து முன்னணி எல்லாம் போர்க்கொடி துாக்குனாங்கல்லா... கோர்ட் உத்தரவுப்படி, இப்ப கடைகளை அகற்றிட்டு இருக்காவ வே...


''இந்த விஷயத்துல, தி.மு.க.,வினர் சத்தமே காட்டாம இருக்காவ... ஏன்னா, கோவில்ல நிறைய கடைகளை, தி.மு.க., பிரமுகர்கள் தான், 'பினாமி' பேர்ல எடுத்து நடத்துதாவ வே...


''இன்னும் சிலர், உள்வாடகைக்கு விட்டும் சம்பாதிச்சிட்டு இருந்தாவ... இப்ப, கடைகளை எடுத்ததுல, இவங்களுக்கு தான் நஷ்டம்னு சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.


''சினிமாவுல மட்டும் தான் நேர்மையா நடிச்சு இருக்காரு பா...'' என, கடைசி விஷயத்திற்கு தாவிய அன்வர்பாயே தொடர்ந்தார்...


''சிங்கம், தீரன்னு போலீஸ் பெருமை பேசுற படங்கள்ல, சென்னை புறநகர்ல இன்ஸ்பெக்டரா இருக்குற ஒருத்தரும் நடிச்சிருந்தார்... சினிமாக்கள்ல மட்டும் நேர்மையானவரா நடிக்குற இவர், நிஜத்துல நேர்மாறா நடந்துக்குறாரு பா...


''சமீபத்துல ஒரு திருடனை கைது செஞ்சவர், 73 சவரன் நகை, பல லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் பண்ணியிருக்கார்... இதுல, 20 சவரனை மட்டும் கணக்குல காட்டிட்டு, மத்ததை அமுக்கிட்டாரு பா...


''திருடன்ட்ட, 20 லட்சத்தை பறிமுதல் பண்ணி, ரெண்டை மட்டும் தான் கணக்குல காட்டியிருக்கார்... இதுக்கு, அதே ஸ்டேஷன்ல வேலை பார்க்குற குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருத்தரும் உடந்தை பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.


அப்போது, பெஞ்சுக்கு வந்தவரை பார்த்த அண்ணாச்சி, ''வாரும் ரமேஷ்... நீரும், உம்ம தம்பி கிருஷ்ணனும், சிட்லபாக்கம் பக்கம் இடம் வாங்கி போட்டீயளே... வீடு கட்டலையா...'' என விசாரிக்க, அரட்டை தொடர்ந்தது.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இரண்டு கட்சிகளும் சும்மா மக்களுக்காக தான் 'ஊடல்' நாடகம் நடத்துகிறார்கள். காசு கொட்டுகிறவனுக்கு, எதிர்க்கட்சியானாலும் ராஜ மரியாதைதான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement