Advertisement

பைக் திருட்டு வழக்குகளில் காவல் துறை...அலட்சியம்! தொடருகிறது நகை பறிப்பு சம்பவங்கள்

அதிகரித்து வரும் பைக் திருட்டுகளை, காவல்துறை கண்டு கொள்ளாதது, நகை பறிப்பு கும்பலுக்கு சாதகமாக வருகிறது.புதுச்சேரி மாநிலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் விற்பனையாகிறது. வாகனங்கள் விற்பனையாகும் அதே அளவிற்கு அவை திருடுபோகும் சம்பவங்களும் நடக்கிறது. புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் திருடுபோகும் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சர்வ சாதாரணமாக பைக்குகள் திருடப்படுகிறது.நகர பகுதியை பொறுத்த வரையில், போதிய இட வசதியில்லாததால், இரவு நேரத்தில் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன. அப்படி நிறுத்தப்படும் வாகனங்களை மர்ம ஆசாமிகள் எளிதாக திருடி சென்று விடுகின்றனர். மேலும் குறிப்பிட்ட சில மாடல் வண்டிகள் அதிகளவில் திருடு போகிறது. அந்த வாகனங்களில் எந்த வகையான சாவியையும் போட்டு திறந்து விடுகின்றனர்.திருடப்படும் வாகனங்கள் உடனடியாக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு, தெரிந்த மெக்கானிக் மூலமாக ஒவ்வொரு பாகமாக தனித்தனியாக பிரித்து விற்று விடுகின்றனர். பழைய இரும்பு கடைகளில் எடைக்கு போடப்படுகிறது. பைக்குகள் மட்டுமல்லாமல் கார், லாரி போன்ற வாகனங்களையும் திருடிச் சென்று உடைத்து விற்று விடுகின்றனர்.ஆனால் வாகனங்கள் திருடு போவது குறித்து பெரும்பாலான பொதுமக்கள் புகார் செய்ய தயங்குகின்றனர். பைக் கிடைக்காது, எதற்கு தேவையில்லாமல் அலைய வேண்டும் என்று பொதுமக்கள் புகார் கொடுப்பதில்லை. அப்படியே போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுத்தாலும் பத்து நாள் கழித்துவாங்க. நல்லா தேடுங்க என்று போலீசார் திரும்பி அனுப்பி விடுகின்றனர்.சறுக்கல்கொலை, கொள்ளை கண்டுபிடிப்பு புலனாய்வு விகிதத்தில், இந்தியாவின் நெம்பர் ஒன் 1 இடத்தில் புதுச்சேரி போலீசார் உள்ளனர். ஆனால், பைக் திருட்டில் கண்டுபிடிப்பு விகிதம் மோசம். கடந்த 2014ம் ஆண்டு 290 மோட்டார் வாகனங்கள் திருடுபோனது. இவற்றில் 130 வாகனங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. புலனாய்வு 44 சதவீதமாகும். 2015ம் ஆண்டு, 329 மோட்டார் வாகனங்கள் திருடு போனதில் 112 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வாகன கண்டுபிடிப்பு சதவீதம் 34. இதேபோல், 2016ம் ஆண்டு 367 மோட்டார் வாகனங்கள் திருடு போனதில், வெறும் 113 வாகனங்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டு பிடிப்பு சதவிகிதம் வெறும் 30 தான்.நகை பறிப்புக்கு களவு பைக்நகை பறிப்பில் ஈடுபட்டு சிக்குவோர், பெரும்பாலும் திருட்டு வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். நகை திருட்டில் ஈடுபடும் முன், அவர்கள், முதலில் இருசக்கர வாகனங்களை திருடுகின்றனர். மேலும் அவற்றில், பிரஸ், வக்கீல், டாக்டர், மாநகராட்சி என, முக்கிய துறைகளின் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்கின்றனர். காவல் நிலையங்களில், இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக, மாதந்தோறும், 10க்கும் அதிகமான புகார்கள் வருகின்றன. ஆனால், ஓரிரு புகார்களை தவிர, மற்றவற்றை பெறாமல், போலீசார் அலைய விடுகின்றனர். இது, நகைபறிப்புக்காக, இரு சக்கர வாகனங்களை திருடுவோருக்கு சாதகமாகி விடுகிறது.கடந்த சில வாரங்களாக புதுச்சேரி, வில்லியனுார் உள்பட பல்வேறு இடங்களில் மீண்டும் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதற்கும் திருடுபோன பைக்களுக்கும் தொடர்பு உள்ளது. ஒவ்வொரு பைக் திருட்டுக்கு பின்பும் ஒரு நகை பறிப்பு சம்பவம் அரங்கேறுகிறது என்பதே உண்மை. பைக் திருட்டை புதுச்சேரி போலீசார் சீரியசாக எடுத்துக்கொள்ளாவிட்டல், நகை பறிப்பு சம்பவங்களையும் தடுக்க முடியாது என்பதை போலீசார் உணர வேண்டும்.

- நமது சிறப்பு நிருபர்-

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement