Advertisement

5 ஆண்டாகியும் சூரிய மின் விளக்கு... கிடைக்கவில்லை! பசுமை வீடு பயனாளிகள் ஆதங்கம்

கடலூர் : மாவட்டத்தில் கடந்த 2013-14ம் நிதியாண்டில் கட்டப்பட்ட பசுமை வீடுகளுக்கு 5 ஆண்டுகளாகியும், சூரிய சக்தி மின் விளக்குகள் அமைக்கப்படாததால், பயனாளிகள் எப்போது கிடைக்கும் எனகாத்திருக்கின்றனர்.
தமிழகத்தை கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்றிடும் வகையில் கடந்த 2011ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., சூரிய சக்தி மின் விளக்குகளுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தை அறிவித்தார். அதில், சொந்த இடத்தில் கூரை வீட்டில் வசிப்பவர்கள், 400 சதுர அடியில் கான்கிரீட் வீட்டை அவர்களாகவே கட்டிக்கொள்ள தகுதி உள்ள பயனாளிகளைத் தேர்வு செய்து பணி ஆணை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிற்கும் கம்பி, சிமென்ட், செங்கல், கதவு, வாசல்கால் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான கூலிக்காக 1.80 லட்சம் ரூபாயும், சூரிய சக்தி மின் விளக்கு வைத்திட 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒவ்வொரு வீட்டிற்கும் 2.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.அதன்படி மாவட்டத்தில் கடந்த 2011-12ம் நிதியாண்டில் 2,723 பயனாளிகளுக்கும், 2012-13; 2013-14; 2014-15ம் ஆண்டுகளுக்கு தலா 2,713 பயனாளிகளுக்கும், 2015-16 நிதியாண்டிற்கு 742 பயனாளிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 604 பசுமை வீடுகள் கட்ட பணியாணை வழங்கப்பட்டது.
மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ஆயிரத்து 604 பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் 2011-12; 2012-13 நிதியாண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட 5,436 வீடுகளுக்கு மட்டும் சூரிய சக்தி மின் விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
2013-14 நிதி ஆண்டு முதல் 2015-16ம் நிதியாண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட 5,546 வீடுகளுக்கு சூரிய சக்தி மின் விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் காலம் கடத்தப்பட்டு வந்த நிலையில், 2014-15; 2015-16ம் நிதியாண்டுகளில் கட்டப்பட்ட பசுமை வீடுகளுக்கு சூரிய சக்தி மின் விளக்கு பொறுத்தப்பட்டது.
2013-14 நிதியாண்டில் கட்டப்பட்ட 2,713 பசுமை வீடுகளில் 391 வீடுகளுக்கு நீண்ட இழுபறிக்கு பின் சூரிய சக்தி மின் விளக்குகள் பொறுத்தப்பட்டது. மீதமுள்ள 2,322 வீடுகளுக்கு பொறுத்தப்படவில்லை.
இதனால், பயனாளிகள் தினம், தினம் அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் வந்து விடும் எனக் கூறி காலம் கடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 2013-14ம் நிதியாண்டு கடலுார் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பசுமை வீடுகளுக்கு சூரிய மின் சக்தி விளக்கு அமைக்க எடுத்த நிறுவனத்தின் ஒப்பந்தம், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. அதனை எதிர்த்து அந்த நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளாதல், விடுபட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு சூரிய சக்தி மின் விளக்கு பொறத்தப்படாமல் உள்ளது என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement