Advertisement

டீ கடை பெஞ்ச்

ஸ்டாலின் மகனுக்கு முக்கியத்துவம் தர உத்தரவு!
''துணை முதல்வர் வந்ததால, பழனிசாமி ஆட்கள் வராம போயிட்டாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''ரெண்டு அணிகளும் இணைஞ்சும், இன்னும் தாமரை இலை தண்ணி மாதிரி தான் இருக்காவளா வே...'' என்றார் அண்ணாச்சி.

''ஆமாம் பா... தஞ்சை மாநகராட்சி, அ.தி.மு.க., முன்னாள் மேயர் சாவித்திரி மகன் திருமண வரவேற்பு சமீபத்துல நடந்துச்சு... இதுக்காக, நகர் முழுக்க வச்சிருந்த பிளக்ஸ் பேனர்கள்ல, முதல்வர் பழனிசாமி படங்களை, சின்னதா போட்டிருந்தாங்க பா...

''துணை முதல்வர் பன்னீர்செல்வம் படங்களை பெருசா போட்டிருந்தாங்க... அதே மாதிரி, உள்ளூர்காரரான ராஜ்யசபா, எம்.பி., வைத்திலிங்கத்துக்கு தனி மரியாதை குடுத்து, பிளக்ஸ் பேனர்கள் வச்சிருந்தாங்க பா...

''விழாவுக்கு பன்னீர்செல்வம், அவரோட ஆதரவாளர்கள் மட்டும் தான் வந்தாங்க... பழனிசாமி ஆதரவாளர்களான வைத்திலிங்கம் உட்பட நிறைய பேர் புறக்கணிச்சுட்டாங்க... பாவம், 'மாஜி' மேயர் நொந்து போயிட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''காத்து கிடந்தவங்களை மதிக்காம, கார்ல ஏறி போயிட்டாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அண்ணாச்சி.

''யாரைச் சொல்றீங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை சம்பந்தமா, சமீபத்துல, தலைமைச் செயலகத்துல பேச்சு நடந்துச்சு வே...

''ஆலை அதிபர்களுடன், அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் பேசினாவ... ராத்திரி, 9:00 மணி வரை பேசியும், பிரச்னை தீரலை... முடிவை தெரிஞ்சுக்க, விவசாய சங்கப் பிரதிநிதிகள், கூட்ட அரங்கிற்கு வெளியே காத்து கிடந்தாவ வே...

''கூட்டம் முடிஞ்சு கிளம்புன அமைச்சர்களும், அதிகாரிகளும், விவசாயிகளிடம் எதையும் சொல்லாம, கார்ல ஏறி போயிட்டாவ...

''தொழில் துறை செயலரை பார்த்து விபரம் கேட்கலாம்னா, அவரும் கண்டுக்காம போயிட்டாரு... இதனால, விவசாய சங்க பிரதிநிதிகள், கடும் கோபத்துல இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''மார்ச், 1ல இருந்து, தம்பிக்கு முக்கியத்துவம் அதிகரிக்க போகுதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''தி.மு.க.,வுல, ஸ்டாலின் மகன் உதயநிதியும், அரசியல்ல குதிச்சுட்டாரே... தி.மு.க., ஆர்ப்பாட்டத்துல கலந்துக்கிட்டு, அரசியல் வருகையை அறிவிச்சவர், அடுத்தடுத்து களம் காண இருக்காருங்க...

''இப்ப, அறிவாலயத்துல நடந்துட்டு இருக்குற மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு கூட்டங்களுக்கு வர்றவங்களிடம், அங்க இருக்குற இளைஞர் அணி நிர்வாகிகள் பேசுறாங்க...

''அப்ப, 'உதயநிதி தம்பியை வச்சு, உங்க மாவட்டத்துல கூட்டம் நடத்துங்க... மார்ச், 1ல ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை, தம்பியை வச்சு நடந்துங்க'ன்னு அழுத்தம் குடுத்துட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி; அவர் கூறியதைக் கேட்டபடியே, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    'பட்டத்தரசியின்' வழி வந்த வாரிசுகளுக்குத்தான் அரசுரிமை என்ற மன்னர்காலத்துக்கே போய்விட்டது கட்சி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement