Advertisement

முஸ்லிம்களின் கனவு இது தான்!

முஸ்லிம்களின் புனித, ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து செய்யப்பட்டது குறித்து, சர்ச்சைக்குரிய விவாதங்கள் துவங்கி உள்ளன.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்
இருந்தே, அரசு தரப்பில் மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதை, தற்போதைய மத்திய அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.மாறாக, மானியத்திற்காக செலவு செய்யப்பட்ட, 700 கோடி ரூபாயை, முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்காக செலவிடப் போவதாக அறிவித்துள்ளது.

'மத்திய அரசின் செயலில், மத துவேஷம் இருக்கிறது' என, ஒரு தரப்பினர், கடுமையாக எதிர்த்து வந்தாலும், 'இப்படிப்பட்ட ஒரு மானியம் தேவையே இல்லை' என, பெரும்பாலான முஸ்லிம்கள் வெகு காலமாக சொல்லி வந்துள்ளனர்.அதன் செயல் வடிவம் தான் மத்திய அரசின்
அறிவிப்பாக வந்துள்ளது.

எனினும், இந்த புனித பயணத்தின் அடிப்படை கோட்பாடுகள் தெரியாமல், மத்திய அரசு மற்றும் மத ரீதியிலான அரசியல் அமைப்புகள் செய்து வரும் ஏமாற்று நாடகத்தை புரியாமல், பொதுமக்கள் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.'மத உணர்வுகளை கேடயமாக பயன்படுத்தி, அரசு தரப்பில் செய்யும் காரியங்கள் தான் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன' என, இந்த மானிய விவகாரத்தின் ஆழத்தை முழுமையாக அறிந்தவர்கள் கருத்து கூறுகின்றனர்.

ஹஜ் புனிதப்பயணத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை பார்த்தால், இதில் எத்தனை விதமான அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது புரியும்!ஒரு முஸ்லிம், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அவருக்கு யாரும் நிதி அளித்து, அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என, எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

உடல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் யார் தகுதி உடையவராக இருக்கிறாரோ, அவரே, புனிதப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்; அதுவே அவருக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.ஆனால், அரசு தரப்பு என்ன செய்தது... ஹஜ் புனிதப் பயணத்துக்கு மானியம் தந்தது. அப்படி செய்ததால், புனித பயணத்தின் அடிப்படை கொள்கை தோற்று விட்டதாகத்தான் கருத வேண்டி உள்ளது.
இப்படி அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராக, ஓட்டு அரசியலை மனதில் வைத்து,
ஆட்சியில் இருப்பவர்கள், அரசியல் செய்யும் நோக்கத்துடன், ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் வழங்கியதன் விளைவு, அதே மானியத்தை நிறுத்தப் போவதாக இன்று அறிவித்துள்ளது.

மானியத்தை நிறுத்துவதாக அறிவித்திருப்பதால், வெறுப்பு அரசியல் தான் மேலிடுகிறது. இதனால், அரசின் உண்மையான நோக்கம் வெளிப்படவில்லை.ஆனால், இப்படியொரு மானியமே கொடுக்கக் கூடாது என்பது தான், முஸ்லிம் மத அடிப்படை கோட்பாடு என்பதை யாரிடம் சொல்வது...மத்திய அரசின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பின் தான், இந்த விஷயத்தின்
அடிப்படை கோட்பாடுகளை மேற்கோள்காட்டி, அரசியல் அமைப்புகள் நிஜத்தை பேசத் துவங்கி உள்ளன.

'ஹஜ் புனிதப் பயணத்துக்கான மானியத்தை திரும்பப் பெறும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். அது போல, பிற யாத்திரைகளுக்கு வழங்கப்படும் மானியத்தையும் அரசு திரும்பப் பெறும் உத்தரவு வருமானால், கூடுதல் சந்தோஷப்படுவோம்' என, முஸ்லிம் தலைவர்கள் கூறியுள்ளனர்.'இது தான் இந்திய அரசியல் அமைப்பில் செழுமைப்படுத்தப்பட்டு
உள்ள மதச்சார்பற்ற தன்மையின் உண்மையான நோக்கம்' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஹஜ் பயணம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை பார்ப்போம். சவுதி அரசு, ஒவ்வொரு ஆண்டும், இந்திய முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு, 'விசா' வழங்க ஒப்பந்தம் செய்து உள்ளதோ, அவர்களில், 70 சதவீதம் பேரை, ஹஜ் கமிட்டி மூலம் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது.
மீதமுள்ள, 30 சதவீத ஹஜ் பயணியர், அரசின் அங்கீகாரம் பெற்ற, தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம், புனித பயணம் மேற்கொள்கின்றனர்.

ஹஜ் கமிட்டி மூலம் புனிதப்பயணம் செல்வோருக்கு தான், அரசு சார்பில் மானியம் வழங்கப்
படுகிறது. ஆனால், அரசு தரப்பில் கொடுக்கப்படும் மானியம், 'ஏர் - இந்தியா' விமானங்கள் மூலம் தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுகளால், மானியம் கொடுக்கப்படுவது, கொடுக்கப்படாதது போல ஆகி விடுகிறது.ஆக, அரசு தரப்பிலான மானியம் என்பதே, 'பம்மாத்து' வேலை தான் என, பலர் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது போலவே தெரிகிறது!

எனினும், முஸ்லிம்களின் ஓட்டுகளை குறி வைத்து, அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், தலைவர்களுக்கான மணி மண்டபங்கள், தலைவர்கள் பெயரிலான விழாக்கள், தலைவர்கள் மறைந்த தின அஞ்சலி, முஸ்லிம் விழாக்களுக்கான அரசு விடுமுறை என எதுவுமே, இது நாள் வரை, முஸ்லிம் மக்களை எந்த விதத்திலும் மேம்படுத்தவில்லை.

கடந்த, 60 ஆண்டுகளாக, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், முஸ்லிம்களின் ஓட்டுகளை மட்டும் குறிவைத்து அரசியல் செய்ததே தவிர, அவர்களுக்கான அரசியல் அங்கீகாரம் குறித்து, எந்த சூழ்நிலையிலும் நினைத்துப் பார்க்கவில்லை!இதை வைத்து, ஹிந்து பெரும்பான்மை அரசியலையும், மாற்று மதத்தினர் மீதான வெறுப்பு அரசியல் மூலம் லாபம் பெறும் பாரதிய ஜனதாவின் முயற்சியும் தான் வெற்றியடைந்ததே தவிர, முஸ்லிம்களின் வாழ்வியல் சூழல், எந்த விதத்திலும் மேன்மை அடையவில்லை.

ஹஜ் மானியத்தை மத்திய அரசு நிறுத்தியதும், 'நாங்கள் காலம் காலமாக கொடுத்து வந்ததை,
பா.ஜ., அரசு, மத துவேஷத்தோடு நிறுத்துகிறது' என, காங்கிரஸ் இப்போது கூக்குரல் எழுப்புகிறது. காங்கிரசை பின் தொடர்ந்து, மதவாத எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருக்கும், தி.மு.க., முஸ்லிம் அமைப்புகள், பா.ஜ.,வை எதிர்க்க, இதை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன.
முஸ்லிம்களை வெறும் அரசியல் அடையாளமாகவே, காலம் காலமாக பயன்படுத்தியது காங்கிரஸ் என்றால், அவர்கள் அடிச்சுவட்டை பின்பற்றியே, சிறுபான்மை அமைப்புகளும் செல்வது தான் வேடிக்கை! இதில், மேம்போக்கான அரசியல் பார்வை தான் இருக்கிறதே தவிர, ஆழமான பார்வை இல்லை.

இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதாலேயே, சிறுபான்மை இனத்தோருக்கு, அதிக சலுகைகள் அரசுத் தரப்பில் வழங்கப்படுவது போன்ற தோற்றம் வெளியே உள்ளது.சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தோர் அதிகமாக வாழும் இடங்களில், முறையான கல்வி கூடங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், குடிநீர் வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, மருத்துவமனைகள், வங்கிகள் என, எதுவுமே பெரும்பாலும் இருக்காது.

ஒரு சில இடங்களில் வங்கிகள் இருந்தாலும், முஸ்லிம்களுக்கு கடன் வழங்க தயக்கம் காட்டி வருகின்றன. ஆனால், அந்தப் பகுதிகளில், காவல் துறையினரின் தீவிர கண்காணிப்பும், உளவு அறியும் வேலைகளும், தங்கு தடையில்லாமல் தொடர்ச்சியாக நடக்கின்றன.இப்படி இந்தியா
முழுவதும், ஒரு சில இடங்களைத் தவிர்த்து, அனேக இடங்களில், முஸ்லிம்களுக்கு பெரிய அளவில் அரசு உதவிகள் இல்லை.

அதை செய்வதாகச் சொல்லி, அரசியல் செய்யும் கட்சிகள், முஸ்லிம்கள் வாழ்க்கையில் இருளைத் தான் கொடுத்துள்ளனவே தவிர, ஒளியேற்றவில்லை!தேர்தலுக்கு முன், அரசியல் கட்சிகள் சார்பில் பல விதமான சலுகை அறிவிப்புகள், இறந்த தலைவர்களுக்கு மரியாதை, மணிமண்டம் கட்டும் அறிவிப்பு என, 'வாண வேடிக்கை' மட்டும் காட்டிக் கொண்டிருக்கின்றனவே தவிர, முஸ்லிம்கள் முன்னேற்றத்துக்கான எந்த காரியத்தையும் உருப்படியாக
செய்யவில்லை.

முஸ்லிம் ஆதரவு கட்சிகள் கையாண்ட இந்த, மத யுக்தியைத் தான், தற்போது, பா.ஜ., அரசு வேறு விதமாக கையில் எடுத்து செயல்படுத்துகிறதோ என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.சில அரசியல்
கட்சிகளின் ஓட்டு வங்கி, சிறுபான்மை இனத்தோர் என்றால், பா.ஜ.,வின் இலக்கு, பெரும்பான்மை இன ஹிந்துக்கள்.கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லுாதர் கிங்கை அழைத்து, ஐக்கிய நாடுகள் சபையில் பேச வைத்தனர். வேறு நாட்டுத் தலைவர்களும் பேசினர். அவர்கள், கறுப்பினத்தவர் விடுதலையையும், அந்த மக்கள் மீது மற்றவர்கள் காட்ட வேண்டிய இரக்கம்-, கருணை குறித்தும் பேசினர்.

ஆனால், மார்ட்டின் லுாதர் கிங், வேறு கருத்தை முன் வைத்தார்...'கறுப்பின மக்களுக்கு, மற்றவர்களின் இரக்கமும், கருணையும் தேவையில்லை. மற்ற இனத்தவரைப் போல, கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களை, மனிதர்களாக மதித்து, மற்றவர்கள், நடத்தினால் போதும்' என்றார்.
இங்கே... இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் அதை தான் எதிர்பார்க்கின்றனர். சலுகை, இரக்கம், கருணை போன்ற எதுவும், யாரிடமிருந்தும் முஸ்லிம்களுக்கு தேவையில்லை.
மற்ற மதத்தவர்களைப் போல சுதந்திரமாகவும், சமமாகவும் நடத்தினால் போதும்! அந்த கனவு நிறைவேறும் நாள் எந்நாளோ!

இ - மெயில்: pudumadamjaffer1968gmail.com

புதுமடம் ஜாபர் அலி,
சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement