Advertisement

சட்டங்களை மதிப்போம் சங்கடங்களை தவிர்ப்போம்

பழங்காலத்தில் மரபுகளே சட்டங்களாக இருந்தன. அதை மீறுவோர் குற்றவாளிகளாக கருத்தப்
பட்டனர். குற்றங்களின் அதிகரிப்பால், மரபினைவிட சக்தி வாய்ந்த, எழுதப்பட்ட விதிகளின் தொகுப்பு தேவையானநிலை உருவானது. அதுவே, பின் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்
களாக இயற்றப்பட்டு ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது. 'எந்த ஒரு ஜனநாயக ஆட்சியிலும், சட்டத்தின் ஆட்சியே மாட்சிமை பொருந்தியது,' என்கிறார் பேராசிரியர் டைசி.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வளையும் தன்மை கொண்டதால், தேவைக்கேற்ப
சட்டத் திருத்தங்கள் கொண்டுவர முடிகிறது. இந்திய தண்டனைச் சட்டம் அனைவருக்கும்
பொதுவானது.

சட்ட மீறல்கள்: குற்றத்திற்கேற்பஅதற்குரிய பிரிவுகளில் தண்டனை என தண்டனைச் சட்டங்களில் இருந்தாலும், குற்றங்கள் குறையவில்லை. சிலர் சொந்த இடத்தை பராமரிக்காமல், அரசின் பொது இடத்தை ஆக்கிரமிக்கின்றனர். கட்டடங்கள் கட்டுகின்றனர். அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்கின்றன. தாறுமாறான வாகன இயக்கங்களினால் ரோடுகள்
விழிபிதுங்குகின்றன.குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுதல், ெஹல்மெட் அணியாமை, அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதல் ஆட்களை வாகனங்களில் அழைத்துச் செல்லுதல் போன்ற விதி மீறல்கள் பயணிப்போரின் தலைவிதியை மாற்றிவிடுகின்றன. செல்ல வேண்டிய இடத்திற்கு பதிலாக, செல்லக்கூடாத இடத்திற்கு சென்றுவிடுகின்றனர்.தமது இடங்களைப்போல், பொது இடங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள நினைப்பதில்லை.பஸ் ஸ்டாண்ட், நீர்வழிப்
பாதைகள், குளங்கள், ஆறுகளில் சர்வசாதாரணமாக வீசப்படும் குப்பையே இதற்கு சாட்சி.
எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்கிறோம் என சமாதானம் அடைகிறோம். இது தன் கையால் தன் கண்களை குத்திக் கொண்ட கதையாகிறது. குப்பையால் தொற்று
நோய்கள் பரவும் அபாயத்தை நினைத்துப் பார்ப்பதில்லை.வரி கட்ட மறக்காதவர்கள்,
மறப்பவர்கள், மறுப்பவர்கள் என பிரிவுகள் உள்ளன. வங்கிகளில் வாங்கிய கடனை எப்படியாவது திரும்ப செலுத்தியாக வேண்டும் என நினைப்பவர்கள் உள்ளனர். கடனை செலுத்தவே கூடாது என சத்தியம் செய்து கடன் வாங்குபவர்களும் இருக்கின்றனர். இவர்களால் தராக் கடன், வராக் கடன் ஆகிறது. 'சட்டம் என்பது ஒரு பெரிய மீன் வலை. அதன் துளைகள் வழியாக சிறிய மீன்கள் தப்பித்துவிடும். பெரிய மீன்கள் வலையையே அறுத்துவிடும்,'என சீனா பழமொழி உண்டு. கலப்படத்திற்கு எதிரான போரை, அரசு தீவிரமாக மேற்கொண்டாலும் உண்ணும் உணவு, மருந்தில் கண்ணில் புலப்படாதவாறு கலப்படம் செய்து மக்களின் உயிருடன் விளையாடுவதை சிலர் நிறுத்துவதேயில்லை.

சட்டத்திற்கு மரியாதை : பிரதமராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசிக்க மதுரை வந்தார். சர்க்யூட் ஹவுசில் தங்கினார். அவரை வரவேற்க பள்ளி சிறுவர்கள்கைகளில் மலர்களுடன் காலை 9:00 மணி முதல் கோயில் வாசலுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதையறிந்த மொரார்ஜி தேசாய் கோபமுற்று, 'தற்போது காலை 10:00 மணி. பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டிய நேரத்தில் ரோட்டில், அதுவும் வெயிலில் நின்று கொண்டிருக்கின்றனர். குழந்தையும், தெய்வமும் ஒன்று. அத்தெய்வங்கள் தெருவில் வீணாக நிற்பதை நான் விரும்பவில்லை. பிறரை துன்புறுத்தும் இறைவழிபாடு ஏற்புடையதல்ல. குழந்தை களை உடனடியாக பள்ளிக்கு அனுப்புங்கள். வரவேற்பு எதுவும் எனக்கு வேண்டாம்,' என்றார். மக்கள் நலனின் அக்கறை கொண்டவரே, தலைவராக இருக்க முடியும் என செயலில் காட்டியவர் மொரார்ஜி தேசாய் போன்றவர்கள்.தவறாக பயன்படுத்துதல்தமிழக முதல்வராக அண்ணாதுரை 1967 ல் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் சென்னையில் குடிசை வீடுகள் அடிக்கடி தீ விபத்துக்குள்ளாகின. காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தடயவியல்துறை
இயக்குனராக இருந்த கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குழுவை அண்ணாதுரை நியமித்தார்.
அக்குழுவின் விசாரணை அறிக்கையை படித்த அண்ணாதுரை அதிர்ந்தார். தீ வைக்கப்பட்ட அனைத்து குடிசைகளும் ஒரே விதமாக பாதிப்பிற்குள்ளாயிருந்தன.குடிசைகளின் கூரைப்பகுதிகளில் மட்டும் தீ பற்றியிருந்தது. உள்ளே இருந்த பொருட்கள் சேதமடையவில்லை. உயிர்ச்சேதம், காயங்கள் இல்லை. குடிசைகளின் உரிமையாளர்களே, அவற்றிற்கு தீ வைத்ததாக அறிக்கை கூறியது.அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்ற போது, குடிசைகளில் தீ விபத்து
ஏற்பட்டால் அரசின் உதவித் தொகை 250 ரூபாய் வழங்கப்படும் என உத்தரவிட்டிருந்தார். அதைப் பெற தவறான வழியில் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டதை அறிக்கை தெளிவுபடுத்தியது.சட்டங்கள் மற்றும் திட்டங்களின் வெற்றி அரசின் கையில் மட்டுமல்ல; மக்களின் ஒத்துழைப்பும் முக்கியம். ஏழ்மையால் தவறு செய்தவர்களுக்காக மனம் இரங்கிய அண்ணாதுரை, இனி இதுபோன்ற தவறுகள் தொடரக்கூடாது என எண்ணினார். குடிசைகளில் வசிப்போரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார். ஒன்றை அடைய நாம் தேர்ந்தெடுக்கும் பாதை நன்றாக இருப்பதே நலம் என்கிறது கீதை.

நீதியின் குரல் : தன் கணவன் கள்வன் அல்லன் என பாண்டிய நெடுஞ்செழியன் அரசவையில் தகுந்த ஆதாரங்களுடன் வாதாடினாள் மண்மகள் அறியா வண்ணச்சீறடி படைத்தவள் என இளங்கோ அடிகளால் போற்றப்படும் கண்ணகி. உண்மையை உணர்ந்த பாண்டிய நெடுஞ்செழியன்,'ஆராயாமல் தீர்ப்பளித்த யானோ அரசன், யானே கள்வன்,' எனக்கூறி கண்ணகியின் கண்முன் தன் இன்னுயிரை துறந்தான். கணவனை இழந்தோருக்கு காட்டுவது இல், என கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறந்தாள். கன்றினை இழந்த பசு நீதி கேட்டு ஆராய்ச்சி மணியை அடித்தது. தன் மகன் தான் கன்றினை கொன்றது என அறிந்தான் மன்னன். மகன் என்றும் பாராமல் அதே தேர்க்காலில் தன் மகனை பலியிட்டு, பசுவிற்கு நீதி வழங்கினார் சோழ மன்னன்.
தவறிழைத்தோரே தீர்ப்பு வழங்க வேண்டிய இடத்திலிருந்தாலும், நியாயத்தை தீர்ப்பாக வழங்கி நேர் வழியில் நின்றதுடன், அன்றே சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை நமக்கு சுட்டிக்
காட்டிச் சென்றுள்ளனர். சட்டங்களை மதிப்போம்; குறைகளை குறைப்போம்;
குற்றங்களை தவிர்ப்போம்.

-ஆர்.சுகுமார்,
நில அளவைத்துறை அதிகாரி (ஓய்வு),சிவகங்கை
77087 85486.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement