Load Image
Advertisement

மோடி-இஸ்ரேல் பிரதமர் சந்திப்பு : 10 சிறப்பு அம்சங்கள்

 மோடி-இஸ்ரேல் பிரதமர் சந்திப்பு : 10 சிறப்பு அம்சங்கள்
ADVERTISEMENT
புதுடில்லி : ஆறு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அவரது மனைவிக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபுகளை மீறி பிரதமர் மோடியே விமான நிலையத்திற்கு சென்று, இஸ்ரேல் பிரதமரை கட்டி அணைத்து வரவேற்றார்.

நேற்று இரவு இஸ்ரேல் பிரதமர் மற்றும் அவரது மனைவிக்கு பிரதமர் மோடி தனியாக விருந்து அளித்தார்.


சிறப்பம்சம் :

1. இரு நாட்டு பிரதமர்களும் டில்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில் இன்று பிற்பகலில் சந்திக்க உள்ளனர். பின்னர் கூட்டாக அறிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் பிரதமருடன் 130 தொழில்துறை பிரதிநிதிகள் வந்துள்ளனர். இஸ்ரேலில் இருந்து அதிகப்படியாக தொழில்துறையினர் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பதால் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

2. இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுபிக்கதக்க ஆற்றல், விமானநிலைய நடைமுறைகளில் மாற்றம், சைபர் பாதுகாப்பு, படங்கள் மற்றும் குறும்படங்களை இணைந்து தயாரிப்பது உள்ளிட்ட ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. டில்லி விமான நிலையம் வந்த நேதன்யாகுவை பிரதமர் மோடி கைகுலுக்கியும், கட்டி தழுவியும் வரவேற்றார். இந்த போட்டோக்களை டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ள மோடி, இந்தியா வந்துள்ள எனது நண்பர் பிரதமர்; நேதன்யாகுவை வரவேற்கிறேன். உங்களின் இந்திய வருகை, வரலாற்று சிறப்புமிக்கதாகும். இதனால் இருநாடுகள் இடையேயான நட்புறவு மேலும் பலப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

4. 2003 ம் ஆண்டு ஏரியல் ஷாரேனுக்கு பிறகு இந்தியா வரும் 2வது இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது இஸ்ரேல் பிரதமர், மும்பை, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல உள்ளனர். குஜராத்தில் இரு தலைவர்களும் சாலை மார்க்க சுற்றுப் பயணமும் செல்ல உள்ளனர்.

5. நேதன்யாகு, இந்திய பிரதமர் மோடி இஸ்ரேலுக்கும் எனக்கும் மிக நெருங்கிய நண்பர். உலக பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் இரு நாடுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இந்த பயணம் நல்ல வாய்ப்பாக அமையும் என்றார்.

6. மேலும் அவர் கூறுகையில், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது போன்றது இந்தியா - இஸ்ரேல் உறவு. ஆனால் ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக ஐ.நா.,வில் நடந்த ஓட்டெடுப்பில், இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா ஓட்டளித்ததால் மிகுந்த அதிருப்தியில் உள்ளோம். அது இரு நாடுகள் இடையேயான உறவை பாதிக்காது. அது சிறு கருத்து வேறுபாடு மட்டுமே என்றார்.

7. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இதற்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானதிற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 127 நாடுகள் ஓட்டளித்தன.

8. கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கு, பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார். கடந்த 2 ஆண்டுகளாகவே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துடனான உறவை இந்தியா வலுப்படுத்தி வருகிறது.

9. நேதன்யாகுவின் இந்திய பயணத்திற்கு முன்பு தான், இஸ்ரேலிடம் 8000 ஏவுகணை தடுப்பு டேங்குகளை வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் போட உள்ளதாக இந்தியா அறிவித்திருந்தது. 500 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்திய ராணுவமம், மத்திய அரசும் ஆலோசித்து வந்தது.

10. இந்தியாவிற்கு ஆயுத சப்ளை செய்யும் முக்கிய நாடு இஸ்ரேல். ஆண்டுக்கு சராசரியாக 1 பில்லியன் டாலர் அளவிற்கு ராணுவ உபகரணங்கள் இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்படுகிறது. ஆனால் இதனை முடிவுக்கு கொண்டு வந்து, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதற்காக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பதில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்க மோடி திட்டமிட்டு வருகிறார்.


வாசகர் கருத்து (15)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement