Advertisement

'உண்மையை திரித்து பத்மாவத் திரைப்படம்'

சென்னை:''பத்மாவத் திரைப்படத்தில், உண்மை திரித்து கூறப்பட்டுள்ளது,'' என, ஆர்.எஸ்.எஸ்., மாநில பிரசார செயலர் சடகோபன் பேசினார்.

ஆர்.பி.வி.எஸ்.மணியன் எழுதிய, சித்தோர் ராணி பத்மாவதி வீர காவியம் வெளியீட்டு விழா, புத்தகக் கண்காட்சியில் நேற்று நடந்தது.
பத்மாவதி புத்தகத்தை, ஆர்.எஸ்.எஸ்., மாநில பிரசார செயலர் சடகோபன் வெளியிட, முதல் பிரதியை, முன்னாள் பேராசிரியர் மீனாட்சி கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.
புத்தகம் குறித்து நுாலாசிரியர் மணியன் பேசியதாவது:

ராணி பத்மினி என அறியப்படும் பத்மாவதி, ஹிந்துக்களின் மனங்களில், நிலைத்து நின்றுவிட்ட வரலாற்று நாயகி. அவள் வாழ்க்கை சம்பவங்களும், நம் மனங்களில் நிலைத்து நிற்கின்றன.
மீரா, ராதா, ஆண்டாளும், எந்த அளவுக்கு மக்கள் மனங்களில் இடம் பெற்றுள்ளனரோ, அதே அளவுக்கு பத்மினியும் இடம் பெற்றுள்ளார்.
பெயர் மாற்றம் செய்து, அவளது வாழ்வை கொச்சைப்படுத்தி, திரைப்படம் எடுப்பதை, கலைஞர்களுக்கான சுதந்திரம் என்ற பெயரில் நாம் அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவும் கூடாது.
விரைவில், வர இருக்கும் பத்மாவத் திரைப்படத்தில், எப்படி வரலாற்றை திரித்து கூறப்பட்டுள்ளது என்பதை விவரிக்கவே, இந்நுாலை எழுதியுள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.
நுால் குறித்து, ஆர்.எஸ்.எஸ்., மாநில பிரசார செயலர் சடகோபன் பேசியதாவது:
பத்மாவத் திரைப்படத்தில், உண்மை திரித்து கூறப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், வரலாற்றை திரித்து கூறும் காட்சிகள், இடம் பெற்றுள்ளன. பொய் சொல்லி, பத்மாவதியை அவமானப்படுத்துகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
முகலாய மன்னர்களை, நல்லவர்கள், வல்லவர்கள் என, வரலாறு கூறுகிறது. ஆனால், அவர்கள் பெண்கள் மீது நடத்திய கொடுமைகள், வன்முறைகள் எதையும், வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடவில்லை.
நம் நாடு சுதந்திரம் பெற்ற பின், ஒரு கோடி பேர் இடம் பெயர்ந்தனர்; 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில், பெண்கள் தங்கள் மனத்தை காக்க, கிணற்றில் குதித்து உயிரிழந்தனர். நாட்டின் உண்மையான சரித்திரம், மக்களுக்கு தெரிந்தால் தான், தேச பக்தி உருவாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement