Advertisement

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை:போகி பண்டிகைக்கு, பழைய பொருட்களை எரித்ததாலும், பனிமூட்டத்தாலும், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில், போகி பண்டிகையை முன்னிட்டு, பழைய பொருட்களை, மக்கள் தீயிட்டு கொளுத்தினர். காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் விதமாக, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டது.

இருப்பினும், பல இடங்களில், அதிகாலை பனிப்பொழிவின் போது, பிளாஸ்டிக், ரப்பர் போன்றவை எரித்து, போகி கொண்டாடப்பட்டது.இதனால், அதிகளவில் காற்று மாசு ஏற்பட்டது.
சென்னையில், பல இடங்களில், காலை, 7:00 மணி வரை, எதிரில் வருவோர் தெரியாத அளவிற்கு, மாசு அதிகமாக இருந்தது.புகை மாசு, போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்தது. முதியோர், குழந்தைகள் சுவாசிக்க சிரமப்பட்டனர்.
போகியை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், போகிக்கு முன்பும், போகி அன்றும், காற்று
தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், அதிகாலை, மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில், அதிகாலை, 300 முதல் 380 மைக்ரோகிராம் நுண்துகள்கள், காற்றில் கலந்திருப்பது தெரியவந்தது.
இயல்பாக, ஒரு கன மீட்டர் காற்றில், 100 மைக்ரோ கிராம் நுண் துகள்கள் இருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாகும். கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகிய நச்சு பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவிலேயே, காற்றில் கலந்திருப்பதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த, 2017ல் போகி அன்று நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்தபட்சமாக, 70 மைக்ரோகிராம் மாசும், அதிகபட்சமாக, 306 மைக்ரோகிராம் மாசும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement