Advertisement

மூன்றாண்டு காலம் முடங்கி கிடக்குது திட்டம்: கானல் நீராகும் நீச்சல் குளம்!அறிவித்ததை கட்டவில்லை; கட்டியதை திறக்கவில்லை!

கோவை நகரில், சர்வதேச தரம் வாய்ந்த நீச்சல் குளம் எதுவும் இல்லாமல் இருப்பது, இங்குள்ள பல நுாறு நீச்சல் வீரர், வீராங்கனைகளை பெரும் விரக்தி அடைய வைத்துள்ளது.

கோவை நகரிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஏராளமானோர், சிறந்த நீச்சல் வீரர், வீராங்கனைகளாக உள்ளனர்; இவர்கள், தற்போது தனியார் நீச்சல் குளங்களையே நம்பியுள்ளனர். அவற்றிலும் போட்டிக்கு பயிற்சி எடுக்கும் வகையிலோ, சர்வதேச தரத்திலோ எந்த நீச்சல் குளமும் இல்லை. இருபது லட்சம் மக்களுக்கும் அதிகமாகவுள்ள இந்த நகரில், அன்றாடப் பயிற்சிக்கான நீச்சல் குளங்களும் மிகவும் குறைவாகவே உள்ளன.

இடமெல்லாம் இருக்கு!

இதனால், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இங்கு நீச்சல் குளம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. காந்திபுரத்தில், மத்திய சிறைச்சாலை மைதானத்தில் இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த 2014ல், அக்டோபரில், விளையாட்டு ஆணைய அதிகாரி சம்பு கல்லோலிக்கர், இந்த இடத்தை ஆய்வு செய்தார். நீச்சல்குளம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க, 5.63 ஏக்கர் நிலம் தேவையென்று ஆணையம் கோரியது.

அதில், நான்கு ஏக்கர் நிலத்தை இதெற்கென்று ஒதுக்கி, அரசாணையும் வெளியிடப்பட்டது. மொத்தம், 50 மீட்டர் நீளத்தில், நீச்சல் குளம் அமைக்க, 1.75 கோடி ரூபாயும், விளையாட்டு விடுதிக்கு, 60 லட்சம் ரூபாயும், உள் விளையாட்டு அரங்கத்திற்கு, 1.5 கோடி ரூபாயும் ஒதுக்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்று வரையிலும், ஒரு செங்கல் கூட இதற்காக எடுத்து வைக்கப்படவில்லை.

இத்திட்டம் குறித்து, கோவையை சேர்ந்த சதாசிவம், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில், சில தகவல்களைக் கோரியிருந்தார். அதற்கு, 'மாநகராட்சி இடத்தை ஒப்படைத்த பிறகு தான் சொல்லமுடியும்' என்று கைவிரித்து விட்டது விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். இடமே இன்னும் ஒப்படைக்கப்படாததால், திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்பது விடை தெரியாத கேள்வியாகவுள்ளது.

சென்னையில் பல இடங்களில், மாநகராட்சி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பிலான நீச்சல் குளங்கள், தரமாக பராமரிக்கப்படுகின்றன. சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, தேனி உள்ளிட்ட இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் கூட சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்ட தரமான நீச்சல்குளங்கள் உள்ளன. அங்கு பயிற்சி பெறும் வீரர்கள், வீராங்கனைகள், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலுமான நீச்சல் போட்டிகளில் பரிசைத் தட்டி வருகின்றனர்.
கோவை நகரில், 16 தனியார் ஓட்டல்களில், பயிற்சியாளர்களுடன் கூடிய நவீன நீச்சல்குளங்கள் உள்ளன. இவற்றில், கட்டணம் மிக அதிகம்.
ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள், இதில் பயிற்சி பெறுவது சாத்தியமில்லை. ஆணையம் மற்றும் மாநகராட்சி சார்பிலான நீச்சல் குளங்கள் இல்லாததால், இவர்கள் பெரும் விரக்தியில் உள்ளனர்.

காத்திருக்கும் பெற்றோர்!

தனது இரு குழந்தைகளையும் நீச்சல் பயிற்சிக்கு அனுப்பும் கோவையை சேர்ந்த ஆடிட்டர் மோகன் கூறுகையில், ''விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் நீச்சல்குளத்தில், பயிற்சி பெற்றால் மட்டுமே, தேசிய, சர்வதேச போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்க இயலும். எனது இரு குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு, 35 ஆயிரம் ரூபாய் செலவழித்து பயிற்சி பெற வேண்டியுள்ளது. \
தேனி, நெல்லை போன்ற விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல்குளங்களில் வெறும், 4,000 ரூபாய் தான் கட்டணம். போட்டிகளில் பங்கேற்கும் செலவும் குறையும். தரமான பயிற்சியும் கிடைக்கும். கோவையில் அப்படியோர் நீச்சல்குளத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,'' என்றார்.
இவர் மட்டுமின்றி, ஏராளமான பெற்றோர், இதே வருத்தத்தில் உள்ளனர். கோவை காந்தி பார்க்கில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், சீரமைப்பதாகக் கூறி, மூடப்பட்டது.
ஒன்றே கால் கோடி ரூபாய் செலவில், புதுப்பிக்கப்பட்டுள்ள அந்த நீச்சல் குளமும், பல மாதங்களாக திறக்கப்படவில்லை. இது எப்போது திறக்கப்படும்; விளையாட்டு ஆணைய நீச்சல் குளம் எப்போது கட்டப்படும் போன்ற கேள்விகளுக்கு எந்த அதிகாரியிடமும் பதில் இருப்பதாகத் தெரியவில்லை.
அறிக்கை வருமா, வராதா?

கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) குமார் கூறுகையில், ''2014ல் இருந்து இதில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான், எட்டு மாதங்களாகத்தான் பொறுப்பு அலுவலராக பணியாற்றுகிறேன். கடந்த வாரம் தான் கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரனிடம் இந்த நீச்சல்குளம் சம்பந்தமாக அறிக்கை கேட்டுள்ளேன். அது வந்த பின்னர் நீச்சல்குளம் அமைக்கும் பணிகள் வேகம் பெறும்,'' என்றார்.-நமது நிருபர்-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement