Advertisement

ஆத்மாக்களின் திருப்தியே மணிகண்டனின் ஆத்மதிருப்தி


ஆத்மாக்களின் திருப்தியே மணிகண்டனின் ஆத்மதிருப்தி


@3br@@

மதுரையில் உள்ள பெரும்பாலான முதியோர் இல்லங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் அவசரத்திற்கும் ஆலோசனைக்கும் கூப்பிட வேண்டிய பெயர் மற்றும் போன் எண் பட்டியில் தவறாமல் ஒரு எண் இடம் பெற்றிருக்கும்.


அந்த பெயருக்கும் எண்ணுக்கும் சொந்தக்காரர்தான் மணிகண்டன்.


யார் இந்த மணிகண்டன்.


மதுரை எஸ்எஸ் காலனியில் வசிப்பவர் அப்பா இல்லை அம்மா தனலட்சுமி மட்டும்தான். அம்மாவை பிரிந்துதான் சந்தோஷம் என்றால் அது வேண்டாம் என்பதற்க்காக வேறு ஊருக்கு மாற்றலாக மறுத்து உயர்பதவியை விட்டவர்.


இப்போதும் முதியோர் இல்லத்தில் இருந்து யார் எப்போது கூப்பிட்டாலும் போய்விடுவேன், போய்விட்டு வந்து என் வேலையை முழுமையாக செய்துவிடுவேன், என் நிலமை தெரிந்து வேலை கொடுத்தால் பார்க்கிறேன் என்று சொன்னவர்.இவரது இந்த வார்த்தைக்கு பின் இருக்கும் மனித நேயத்தை பார்த்துவிட்டு ஏவிஎன் ஆரோக்யா ஆயுர்வேத மருத்துவமனை இயக்குனரின் செயலர் பணியினை வழங்கியுள்ளனர்.


யாருமற்ற நிலையில் அனாதை பிணம் என்று ஓன்று கூட மதுரையில் புதைக்கக்கூடாது என்பதற்காக அரும்பாடுபட்டு வருபவர்.இதானல் ஆதரவற்ற பிணத்தை யார் பார்த்தாலும் 'கூப்பிடு மணிகண்டனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகியிருப்பவர்.


எய்ட்ஸ்,டி.பி.,போன்ற நோய்களால் இறந்தவர்களின் உடலின் ஆத்மா கூட சலனப்பட்டு சாந்தி அடையக்கூடாது என்பதற்க்காக அப்படிப்பட்ட பிணங்களையும் இழுத்து போட்டு மகன் நிலையில் இருந்து அடக்கம் செய்யக்கூடியவர்.


உறவோ நட்போ இல்லை மணிகண்டன் நீங்கதான் பார்க்கணும் என்று போன் செய்து சொல்லிவிட்டால் போதும் உடனே வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு மாலை மரியாதையுடன் இறந்தவரின் பிள்ளையாக மாறி இடுகாட்டில் தனி ஒருவனாக இருந்து இறுதி சடங்குகளை செய்துவிடுவார்.இறந்தவருக்கு மறுநாள் செய்யவேண்டிய பால் ஊற்றுதல் போன்ற சடங்கையும், அமாவசை போன்ற நாட்களில் செய்யும் சடங்குகளையும் கூட மறாவாமல் செய்துவிடுவர்.


இதுவரை எத்தனை பேரின் உடலுக்கு இப்படி ஒரு பிள்ளையாக இருந்து சேவை செய்தோம் என்ற கணக்கு எல்லாம் எடுத்து வைத்தக்கொள்ளவில்லை, இதற்காக யாரிடமும் பணமும் கேட்பதும் இல்லை, இது போன்ற காரியத்திற்கு செய்வது புண்ணியம் குறைந்த பட்சமாக கோடித்துணியாவது வாங்கிக்கொள்ளுங்கள், ஆம்புலன்சு செலவையாவது ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினால் அதைத் தடுப்பதும் இல்லை.


ஆதரவில்லாத பிணங்களுக்கு ஆதரவாக இருந்து இறுதி சடங்குகள் செய்வது ஆயிரம் கோவில்களுக்கு போவதை விட பெரிய புண்ணியம் என்று மகா பெரியவர் சொல்லியிருக்கிறார்.அந்த வார்த்தையை மந்திரமாக ஏற்றுக்கொண்டு இறந்தவர்களின் ஆத்மா திருப்தியடைய நான் செய்யும் இந்த செயலால் எனக்கு ஆத்மதிருப்தி கிடைக்கிறது அது போதும் என்பவர்.


என் வருமானத்தில் எங்களுக்கான குறைந்தபட்ச தேவை போக இதற்கு செலவழிக்க எப்போதுமே குறையோ தடையோ இருந்தது இல்லை, என்ன ஒரு வருத்தம் என்றால் எவ்வளவோ சம்பாதித்த கொடுத்த தாய் தந்தையை கடைசியாக பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் விடக்கூட நேரமும் மனமும் இல்லாத சமூகமாக மாறிவருகிறதே நம் சமூகம் என்பதுதான் என் கவலை என்கிறார்.


வருடத்திற்கு நான்கு முறை காளவாசல் ஐயப்பன் கோவிலில் பெரிய அளவில் அன்னதானம் நடத்தி முதயோர் இல்லங்களில் உள்ள அனைவருக்கும் வடை பாயசத்துடன் சாப்பாடு வழங்கவும்,சபரிமலை ஐயப்பன் கோவில் போக ஆசைப்படுபவர்களை செலவு செய்து அனுப்பிவைப்பதும்,படிப்பு உள்ளீட்ட உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்பவர்களையும் இணைப்பவராகவும் இன்னும் இது போன்ற நல்ல பல சமூக காரியங்களால் இவரது ஒவ்வொரு நாளும் இவருக்கு இனிய நாளாக மாறிப்போகிறது.


'எல்லாத்தகுதியும் இருந்தாலும் இந்த பிணத்திற்கு உறவாக இருக்கும் வேலை செய்யறதால உனக்கு பெண் கொடுக்க தயங்குறாங்கப்பா' என்று உறவுகள் சொல்லும் போது, 'இது வேலையில்லை சமூக கடமை என்னை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பெண் வரட்டும் காத்திருக்கிறேன்' என்று உண்மை சொல்லி மணப்பெண்ணிற்காக காத்திருப்பவர்.


கும்பகோணத்து பாட்டிய நேத்ராவதியில் சேர்த்துடலாம்,தத்தநேரி சுடுகாட்டில் ஹரிட்ட சொல்லி குழி தோண்டச் சொல்லுங்க,கிழமாசிவீதி அன்னதானத்திற்கு வடையைக் கொண்டு போய்க் கொடுங்க,கடச்சேனந்தல் தாத்தாவை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துடுங்க என்ற ரீதியில் அடுத்தடுத்த போன் கால்களில் பிசியாக இருந்த மணிகண்டன் நிச்சயமாக மதுரையின் மணிமகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கல்தான்.
மணிகண்டனுடன் பேசுவதற்க்கான எண்:9244317137-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • karutthu - nainital,இந்தியா

    மணிகண்டன் அவர்களே உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் வளரட்டும் உங்கள் தன்னிகரில்லா சேவை இந்த சேவை இறைவனின் சேவை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement