Advertisement

ஓடும் குதிரை நான் - ஆர்ப்பரிக்கும் ஆர்.கே.சுரேஷ்

கண்ணான கண்ணா, உனைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா' எனப் பாடத் தோன்றும் உருவம். நடிப்பில் நண்பனாக இல்லையெனில் எதிரிகளை துண்டாடுவார். புன்னகையால் ரசிகர்களை பூரிக்க வைக்கும் இவர், நகைச்சுவை உட்பட நவரச நடிப்புகளை தருபவராக வலம் வருகிறார். அவர்... ஆர்.கே.சுரேஷ். வில்லனாக சினிமாவில் நடிக்க துவங்கி, 'இப்படை தோற்கின், ஹரகர மகாதேவகி, காளி, மூச்சு, பள்ளிப் பருவத்திலே, பில்லாபாண்டி, வேட்டைநாய், தனிமுகம்' என பல படங்களில் நடித்த சுரேஷ், தினமலர் வாசகர்களுக்காக பேசியதிலிருந்து...

* உங்களை பற்றி?

சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம். உறவினர் நடிகர் சங்கிலி முருகன் மூலம் சினிமாவில் நடிக்க வந்தேன். அப்போது 16 வயது என்பதால் வீட்டில் அனுமதிக்கவில்லை. இதனால்
எம்.பி.ஏ., முடித்தேன். சினிமா ஆர்வத்தில் நடனம், சண்டை, குதிரையேற்றம், மேடை நாடகம், கூத்துப்பட்டறையில் பயிற்சியும் பெற்றேன்.


* வாய்ப்பு?
2009ல் ஒரு பட நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றேன். அந்த நிறுவனம் ரூ.5 லட்சம் கேட்டது. இதனால் வினியோகஸ்தராக மாற திட்டமிட்டேன். நடுவுல கொஞ்சம்
பக்கத்தை காணோம், சாட்டை, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பரதேசி உட்பட 50 படங்களுக்கு மேல் வினியோகஸ்தராக இருந்துள்ளேன்.

* அனுபவம்?
பரதேசி படத்தில் இயக்குனர் பாலா என்னை வில்லனாக நடிக்க வைத்தார். முதல் சண்டை காட்சியிலேயே கால் முறிந்தது. ஆறுமாதங்கள் மருத்துவமனையில் இருந்தேன். பின் தாரை
தப்பட்டை படத்தில் வில்லன். 'மருது' படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்தேன். அதைத் தொடர்ந்து, கதாநாயகனாக இப்படை தோற்கின் உட்பட 20 படங்களில் நடித்துள்ளேன். ஐந்து
படங்கள் ஜனவரி 2018க்குள் வெளிவரும்.

* கதாநாயகன் - வில்லன் வித்தியாசம்?

கதாநாயகனாக நடிக்கும் போது யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டினால் போதும். ஆனால் வில்லனாக நடிக்க நமக்குள் இருக்கும் போர் குணத்தை வெளிக்காட்ட வேண்டும்.

* படங்கள் தயாரித்துள்ளீர்களாமே?
நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை, விஜய் ஆண்டனி நடித்த சலீம் உட்பட பல படங்கள் தயாரித்துள்ளேன்.

* மற்ற மொழி படங்களில்?
மலையாளத்தில் 'சிக்கி ஷாம்பூ' படத்தில் 2வது கதாநாயகனாக நடித்துள்ளேன். தெலுங்கு, கன்னடத்தில் நடிக்க உள்ளேன். படங்களுக்கு பெயர் வைக்கவில்லை.

* இளைஞர்களுக்கு?

படிப்பு என்பது முதுகெலும்பு மாதிரி. அது நன்றாக இருந்தால் உடல் நலமாக இருக்கும். இளைஞர்களுக்கு லட்சியம் நிறைவேற முதுகெலும்பு நன்றாக இருக்க வேண்டும்.


* விருப்பம்?
நமக்கு ரஜினி, கமல் மாதிரி ஆக வேண்டும் என்ற கனவு கிடையாது. ஓடும் குதிரைகளில் ஒரு குதிரையாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.


* பிடித்த நடிகர்?
அஜித் நடிப்பை ரோல்மாடலாக நினைக்கிறேன். நான் நடிக்கும் பில்லா பாண்டியே அஜித் ரசிகர்களின் கதைதான்.

* நடிகைகள்?
தமன்னா, காஜல்அகர்வால் போன்றவர்களுடன் நடிக்க ஆசை.

* லட்சியம்?
மக்கள் ரசிக்கும் வரை நல்ல நடிப்பை கொடுக்க வேண்டும். மற்றவருக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும். முடிந்தவரை நல்லது செய்ய வேண்டும். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது.
வாழ்த்த: kalanjiamsureshgmail.com
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement